ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா, கடந்த மாதம் 4ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அதையடுத்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திரிபுரா உட்பட்ட மூன்று மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வர… அதோடு சேர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதியின் இறுதிசெய்யப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண் வாக்காளர்கள், ஒரு இலட்சத்து 16 ஆயிரத்து 497 பெண் வாக்காளர்கள், 25 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 இலட்சத்து 27 ஆயிரத்து 547 பேர் வாக்களிக்கத் தகுதி உடையவர்கள்.
இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கை சின்னத்தில் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் விவசாயி சின்னத்தில் மேனகா நவநீதன். தேமுதிகவின் முரசு சின்னத்தில் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்தத் தொகுதியை குறுக்கும் நெடுக்குமாக மின்னம்பலம் குழு ஒரு சுற்றுவந்து, வாக்காளர்களின் மனக்கணக்கை நாடிபிடித்துப் பார்த்தது.
முதியவர்கள், இளைஞர்கள், மாணவர்கள், அன்றாடக் கூலி வேலை செய்வோர், நெசவாளர்கள், அரசு, தனியார் நிறுவனங்களின் பணியாளர்கள், சுயதொழில் செய்வோர், பெண்கள், ஆண்கள், மூன்றாம் பாலினத்தவர் என பல தரப்பட்டவர்களின் கருத்துகளையும் கேட்டறிந்தோம்.
அவர்களின் வாக்கு யாருக்கு என்பதையும் நேரடியாகப் பதிவுசெய்துள்ளோம். மொத்தம் ஆயிரத்து ஐநூறு பேரிடம் சர்வே செய்ததில், மொத்தத் தொகுதியின் நிலவரம் குறித்த சித்திரம் கிடைத்தது. அதை அப்படியே இங்கு தருகிறோம்.
தேர்தல் சர்வே களத்தில் நாம் கண்டதும் கேட்டதும்
- ஏழைகள் முதல் பெரும் பணக்காரர் குடும்பம்வரை அதிமுக, திமுக இரண்டு தரப்பினரும் கொடுக்கும் பணத்தையும், பரிசுப் பொருட்களையும் மறுக்காமல் வாங்கிக்கொள்கிறார்கள். அரிதாக சில குடும்பங்கள் மட்டுமே கட்சிகளின் பொருட்களை வாங்காமல் தவிர்க்கின்றனர்.
- ஆளும் கட்சியான திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க விரும்பும் வாக்காளர்கள் பலரும்கூட, இந்த முறை கை சின்னத்திற்கு வாக்களிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தனர். காரணம், கடந்த முறை எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருமகன் ஈவெரா, தொகுதியிலேயே இருந்தவர். அவரிடம் நல்லதோ கெட்டதோ நேரில் கூறமுடியும். இப்போதைய வேட்பாளர் இளங்கோவனோ, சென்னையில் குடியிருப்பவர். அவ்வப்போதுதான் தொகுதிப் பக்கம் வருவார். அது மட்டுமில்லாமல், அவரைச் சந்திப்பது எளிதல்ல என்கிற கருத்தும் இந்த தி.மு.க. அணி ஆதரவாளர்களிடம் வெளிப்பட்டது.
- அறுபது வயதுக்கு மேற்பட்ட கணிசமான வாக்காளர்கள் இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களிக்க உள்ளதாகவே தெரிவித்தனர். முதியோர் ஓய்வூதியம், விதவை உதவித்தொகை ஆகியவை நிறுத்தப்பட்டுவிட்டதாகவும், அதனால் இந்த முறை தி.மு.க. அணிக்கு வாக்களிக்க மாட்டோம் என்றும் பலர் கோபத்தோடும் குமுறலோடும் தெரிவித்தனர்.
- புத்தம்புது வாக்காளர்கள், கல்லூரி மாணவர்களில் ஒரு பகுதியினர் அதிமுக தங்களுக்குப் பிடிக்கும் என்றனர். காரணம், அதிமுக ஆட்சியில்தான் மாணவர்களுக்கு லேப்டாப், சைக்கிள் வழங்கப்பட்டது; அதை இந்த திமுக ஆட்சி வந்து நிறுத்திவிட்டது என்று அவர்கள் கூறினார்கள்.
- கொங்கு பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட சமூகத்தினர் 90% பேர், அதிமுக தோற்றுப்போக நேர்ந்தாலும்கூட, தங்கள் சமூக வாக்கு பலத்தைக் காட்டியாகவேண்டும் என்பதை வெளிப்படையாகக் கூறுகிறார்கள்.
- அதிமுக வேட்பாளர் தென்னரசு 2016 – 2021 காலகட்டத்தில் எம்எல்ஏவாக இருந்தபோது, ஆர்கே சாலையில் இருந்த மார்க்கெட்டை வ.உ.சி. பூங்கா அருகில் மாற்றியதைத் திரும்பக் கொண்டுவர உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனால், அவர் அதற்காக சிறு முயற்சிகூட செய்யவில்லை என நூற்றுக்கணக்கான வியாபாரிகள் குடும்பத்தினர் அதிமுக வேட்பாளர் தென்னரசு மீது கடுமையான அதிருப்தியிலும் கோபத்திலும் இருக்கிறார்கள்.
- 2011 முதல் 2021 வரையில் அதிமுக எம்.எல்.ஏ மற்றும் அதிமுக ஆட்சியில் எந்தவிதமான வளர்ச்சியும் இல்லை; சோலார் பகுதியில் அதிமுக ஆட்சியில் புறநகர்ப் பேருந்து நிலையம் கட்டப்பட்டு முடிவடையாமல் உள்ளது. இதனால் ஈரோடு மக்கள் நெரிசலில் அன்றாடம் போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்வதால், அதிமுகவுக்கு வாக்களித்தவர்களும் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கிறார்கள்.
- நாம் தமிழர் கட்சி சீமான் இளைஞர்களை ஈர்க்க காரணம் சீமான் தமிழ்நாட்டுப் பற்றாளராக இருக்கிறார் என்றும், ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளையும் ஊழலையும் பற்றி தைரியமாகப் பேசுகிறார்; எதிர்க்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் பேசுவது, தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனப் பேசுவது இளைஞர்கள் மத்தியில் ஈர்த்துள்ளதைப் பார்க்கமுடிகிறது. - தேமுதிகவைப் பொறுத்தவரை அந்தக் கட்சிக்குள்ளேயே கடுமையான அதிருப்தி நிலவுகிறது. ”கேப்டன் இருக்கும்போது கட்சியை நல்லபடியாக வைத்திருந்தார்; தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் கட்சி மீதும் தலைமை மீதும் நம்பிக்கை இருந்தது.” என்று நம்மிடம் தெரிவித்தனர், பல நிர்வாகிகள். உள்கட்சி நிலவரம், தேர்தல் களத்திலும் எதிரொலிப்பதைப் பார்க்கமுடிந்தது.
தொகுதியின் குறுக்குவெட்டுச் சுற்றுப்பயணத்தில், மக்களின் மனக்கணக்கை எண்ணிக்கையால் அளந்தெடுப்பதற்கு ஆக அதிகபட்சமான முயற்சியில் ஈடுபட்டோம். அதன் முடிவாக, நமக்குக் கிடைத்தது, இந்த முடிவே! - மின்னம்பலம் சர்வேயின்படி,
காங்கிரஸ் – 44 %,
அதிமுக- 40 %,
நா.த.க. – 8 %,
தே.மு.தி.க.-5.5 %
சுயேச்சைகள்- 1.5 % - என வாக்காளர்களிடம் ஆதரவு வெளிப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்கிற பிரிவினரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியானவர்களின் எண்ணிக்கை நமது மின்னம்பலம் சர்வேயில் 1 %ஆகப் பதிவாகியுள்ளது.
மின்னம்பலம் தேர்தல் டீம்
பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டவர்கள் கைது: டிஜிபிக்கு கடிதம்!
பார்க்கலாம் உங்கள் சர்வே முடிவுகளை..
My Analysis, Cong 42%, Admk 41%, NTK 10%, Others 7%
Difference Between Cong & admk is 5000 to 9000 votes
Finally chance win is Congress