ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காங்கிரசில் சீட் யாருக்கு?

Published On:

| By Kalai

erode east constituency

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ்தான் மீண்டும் போட்டியிடும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா (46) இம்மாத தொடக்கத்தில் காலமானார். இதையடுத்து அந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இடைத்தேர்தலில் திமுகவே போட்டியிடுமா அல்லது ஏற்கனவே அளித்தபடி காங்கிரஸ் கட்சிக்கே வாய்ப்பளிக்குமா என்ற சந்தேகம் இருந்து வந்தது.

இந்தநிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் கட்சிதான் போட்டியிடப் போகிறது என்று தெரிவித்துள்ளார்.

ஈரோடு எங்கள் தொகுதி. மீண்டும் காங்கிரஸ் கட்சி தான் நிற்கும். திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மதிமுக கம்யூனிஸ்ட் கட்சிகள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும்.

ஈரோடு தேர்தலில் எங்களுக்கு ஆதரவு கேட்டு மதச்சார்பற்ற கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து இன்று மாலை ஆதரவு கேட்க உள்ளேன் எனவும் தெரிவித்தார்…

ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டால், மீண்டும் சீட்டை பெற ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்தினர் முனைப்பு காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

ஈவிகேஎஸ் இளங்கோவன் அல்லது அவரது சகோதரர் சஞ்சய் சம்பத் ஆகிய இருவரில் யார் வேண்டுமானாலும் வேட்பாளர்களாக இருக்கலாம் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் வெற்றி பெற்ற திருமகன் ஈவெராவுக்கு இருந்த செல்வாக்கு மற்றும் அவரது இழப்பு ஆகியவற்றை கருத்தில்கொண்டு மீண்டும் அந்த குடும்பத்தினருக்கே வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே போட்டியிட்டு வெற்றிப் பெற்றத் தொகுதி என்பதால் இந்தமுறையும் வெற்றி வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதில் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. எனவே கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்தப் பிறகே வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ஆனால் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளோ, இடைத்தேர்தலில் மீண்டும் ஈவிகேஎஸ் குடும்பத்தினருக்கே வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்ற அவசியம் இல்லை. கட்சிக்காக உழைத்த மாவட்ட பொறுப்பாளருக்கே சீட் வழங்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.

கலை.ரா

எங்கள் கூட்டணியின் இலக்கு இதுதான்: ஜி.கே.வாசன்

மன்னிப்பு வாழ்க்கை: யார் இந்த தேஜஸ்வி சூர்யா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel