ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெறுவார் என்று மக்கள் ஆய்வு நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வே.ரா மறைவை தொடர்ந்து அந்த தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்த தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி, தேமுதிக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவுகிறது.
இந்தநிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பேராசிரியர் டாக்டர். ராஜநாயகம் வழிகாட்டுதலின்படி,
மக்கள் ஆய்வு அமைப்பு 45 களத் தகவல் சேகரிப்பாளர்களுடன் பிப்ரவரி 21 முதல் 23 வரை 1590 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது.
இதில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு 39.5 சதவிகிதம், அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு 24.5 சதவிகிதம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவிற்கு 9.5 சதவிகிதம்,
தேமுதிக வேட்பாளர் ஆனந்திற்கு 2 சதவிகிதம், பிற கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு 1.5 சதவிகிதம், நோட்டாவிற்கு 2 சதவிகிதம், யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்பதை சொல்ல விரும்பாதவர்கள்,
இன்னும் வாக்களிக்க முடிவு செய்யவில்லை என்றவர்கள் 21 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
டிஜிட்டல் திண்ணை: வந்தது ஜிஎஸ்டி ரெய்டு… உதயநிதி அதிர்ச்சி!
பயணிகளுக்கு குட் நியூஸ்…தேஜஸ் ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும்!