ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் இன்று (பிப்ரவரி 27) காலை 7 மணி தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது.
நேற்று முன் தினம் அதாவது பிப்ரவரி 25 ஆம் தேதி மாலை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தை நிறைவு செய்துகொண்டிருக்கும்போதே போலீஸாரும், தேர்தல் பறக்கும் படையினரும் தொகுதியில் இருக்கும் வெளியூர் காரர்களை வெளியேற்ற ஆரம்பித்துவிட்டனர்.
அன்று மாலை 6 மணிக்குப் பிறகு வெளியூர் காரர்கள் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறை. அதன்படியே திமுக அமைச்சர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மற்ற நிர்வாகிகள் எல்லாம் வெளியே சென்றுவிட்டனர்.
ஆனால் இன்று (பிப்ரவரி 27) வாக்குப் பதிவு தொடங்கிய பிறகும் கூட முகம் தெரியாத திமுக முக்கிய நிர்வாகிகள் கணிசமானோர் ஈரோடு கிழக்கு தொகுதியில்தான் இருக்கின்றனர்.
அமைச்சர்கள் அனைவரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து வெளியேறி பக்கத்தில் இருக்கும் ஈரோடு மேற்கு, பெருந்துறை என சுமார் பத்து கிலோ மீட்டர் சுற்றளவில்தான் தங்கியிருக்கிறார்கள். முகம் அறிந்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இப்படி என்றால் பெரிய அளவில் முகம் அறியப்படாத திமுக நிர்வாகிகள் தங்கள் கார்களை எல்லாம் வெளியே அனுப்பிவிட்டு உள்ளூர் திமுகவினரின் மோட்டார் சைக்கிள்களை எடுத்துக் கொண்டு நேற்று முன் தினம் இரவு தொடங்கி இன்று வரை ஈரோடு கிழக்கு தொகுதியில்தான் இருக்கிறார்கள்.
முதலமைச்சர் ஸ்டாலின் வந்து பிரச்சாரம் செய்தபோது திரண்ட கூட்டத்தின் அடிப்படையில் அவருக்கு திருப்திதான். ஆனால் ஒவ்வொரு அமைச்சர்களும் ஏதோ உள்ளாட்சித் தேர்தல் போல தத்தம்து வார்டுகளில் தங்களது செல்வாக்கையும் திறமையையும் காட்டும் வகையில் பரிசுப் பொருட்களை போட்டி போட்டுக் கொண்டு வாரி இறைத்தனர். சில அமைச்சர்கள் தங்கள் ஆதரவாளர்கள் மூலம் இதை போட்டோ எடுத்து தாங்களே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மக்கள் நேரடியாக கேட்டது பணம்தானே தவிர பரிசுப் பொருட்கள் அல்ல.
இந்த நிலையில்தான் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின் சில அமைச்சர்களின் செயல்பாடுகளில் திருப்தியில்லாமல் பொறுப்பாளரான அமைச்சர் முத்துசாமியை அழைத்து சில உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டுச் சென்றார். அதையடுத்து பிப்ரவரி 25 ஆம் தேதி இரவே தொகுதி முழுதும் திமுக சார்பில் மெகா டோக்கன் விநியோகிக்கப்பட்டது.
இது ஒருபக்கம் என்றால் பிரச்சாரம் ஓய்ந்ததும் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதியில் இருந்து வெளியே சென்றுவிட்டாலும் முகம் தெரியாத திமுக நிர்வாகிகள் கணிசமானோர் வெள்ளை வேட்டியை அவிழ்த்துவிட்டு கைலி, பர்முடாஸ் போட்டுக் கொண்டு லோக்கல் வாசிகளைப் போல மாறி ஈரோட்டிலேயே தங்கியிருக்கிறார்கள். பணிமனைகள் பிரிக்கப்பட்டுவிட்டாலும் லோக்கல் திமுக நிர்வாகிகள் வீடுகளில் இவர்கள் தங்கியிருக்கிறார்கள்.
ஒவ்வொரு நூறு ஓட்டுக்கும் மூன்று லோக்கல் திமுக நிர்வாகிகள், ஒரு வெளியூர் நிர்வாகி நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள்தான் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்திருந்தனர். பணம் கொடுக்கப்பட்ட வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளுக்கு செல்லும் வரையில் அந்த லோக்கல் திமுக நிர்வாகிகளை வெளியூர் திமுக நிர்வாகிகள் இன்று வரை கண்காணிக்கிறார்கள்.
வெளியூர் வாசிகள் ஈரோடு கிழக்கு தொகுதியில் தொடர்வதை அறிந்த போலீசார் நேற்று உள்ளூர் பதிவு எண்கள் கொண்ட டூ வீலர்களில் வலம் வந்தவர்களிடம் டிரைவிங் லைசென்ஸ், ஆதார் கார்டு ஆகியவற்றை கேட்க ஆரம்பித்துவிட்டனர். அதனால் வெளியூர் திமுக நிர்வாகிகள் கணிசமானோர் இன்றும் ஈரோடு கிழக்கு தொகுதியில் சந்து பொந்துகள் வழியாக சென்று கொண்டிருக்கிறார்கள்.
’தேர்தல் முடிந்த பிறகும் எங்களுக்கு சில வேலைகள் இருக்கின்றன. அதனால்தான் இங்கே இருக்கிறோம். ஆனால் போலீஸ் தொல்லை அதிகமாகத்தான் இருக்கிறது’ என்று நம்மிடம் பேசிய சில திமுக நிர்வாகிகள் வெளிப்படையாகவே சொல்கிறார்கள்.
–வேந்தன்
கை சின்னத்துக்கு 80 சதவிகித வாக்குகள் கிடைக்கும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈரோடு கிழக்கு : வாக்கு மை அழிகிறது – அதிமுக புகார்!
