ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுகவுக்கு மக்கள் வரவேற்பு எப்படி?

Published On:

| By vanangamudi

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த ஈவிகேஎஸ் மகன், ஈவெரா. திருமகன் வெற்றி பெற்றார். 2023ல் இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததால், நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2024ல் உடல்நலக் குறைவு காரணமாக இளங்கோவன் உயிரிழந்ததால், இந்த தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார். இந்த தேர்தலை அதிமுக, தேமுதிக, பாஜக, பாமக, அமுமக, புதிதாக தொடங்கப்பட்ட தவெக என பல்வேறு கட்சிகளும் புறக்கணித்தன.
நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகிறார்.

இதனால் திமுக – நாதக என இருமுனை போட்டி நிலவுகிறது. சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

திமுகவுக்கு எதிராக பலமான வேட்பாளர் இல்லாததால் வெளிமாவட்டத்தில் இருந்து அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் என யாரும் வர வேண்டாம் என்று கட்சி தலைமை முடிவு செய்துவிட்டது.

அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் முத்துசாமி தலைமையில் அந்த பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் மட்டுமே 33 வார்டுகளை பிரித்து தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர்.

காலையில் இரண்டு வார்டு, மாலையில் இரண்டு வார்டு என ஒரு நாளைக்கு 4 வார்டுகள் வீதம் 33 வார்டுகளிலும் வீதி வீதியாக, நடந்தே சென்று ஒவ்வொரு வீட்டிலும் உள்ள வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிக்கின்றனர்.

3 நாள் ஓய்வு! Erode East by-election

Erode East by-election

இடையில் அமைச்சர் முத்துசாமிக்கு உடல்நிலை சரியில்லாததால், ஜனவரி 23, 24, 25 ஆகிய மூன்று நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுத்தார்.

அமைச்சர் இல்லாமல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று வேட்பாளரும், மற்ற முக்கிய நிர்வாகிகளும் மூன்று நாளும் பிரச்சாரத்தை நிறுத்தி ஓய்வெடுத்தனர்.

இந்தநிலையில் ஈரோடு கிழக்கில் உள்ள திமுகவினரிடம் மக்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருக்கிறது என்று கேட்டோம்.

“நாங்கள் வாக்கு சேகரிக்கும்போது கடந்த இடைத்தேர்தலை போல இந்த தேர்தலில் பணமழையும், பரிசும் இல்லை என்ற கவலையை அறிய முடிந்தது. பலரும் வெளிப்படையாக அதிமுகவினரை திட்டுகின்றனர். எதிர்க்கட்சி வேட்பாளரை நிறுத்தியிருந்தால் பணம் பரிசுகளை கொடுப்பீர்கள். அவர்கள் போட்டியிடாததால் எதுவும் தரவில்லை என பலரும் கோபத்தை காட்டினார்கள்.

இதுமட்டுமின்றி உள்ளாட்சி பிரதிநிதிகளின் செயல்பாடுகளால் ஓட்டு கேட்கும் போதும், மக்களின் எதிர்ப்பையும் காணமுடிந்தது.

லட்சணம் இதுதான் Erode East by-election Er

Erode East by-election
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – முத்துசாமி பிரச்சாரம்

பல வார்டுகளில் குப்பை அள்ளுவது இல்லை, வடிகால்கள் எல்லாம் சரியில்லை என்று கடந்த தேர்தலின் போது சொல்லியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் ஓட்டு கேட்டு மட்டும் வருகிறீர்கள் என கோபத்தை கொட்டுகிறார்கள்.

குறிப்பாக 26ஆவது வார்டு திமுக கவுன்சிலர் சரண்யா, அவரது கணவர் சங்கமேஸ்வரன் திமுக வட்டச் செயலாளராக உள்ளார். இவரது வார்டுக்கு அமைச்சர், வேட்பாளர், சேர்மன் மற்றும் கட்சி நிர்வாகிகள் சென்ற போது பெண் வாக்காளர்கள், அங்கு கொட்டிக்கிடந்த குப்பைகளை காட்டி,

‘இங்க பாருங்க நீங்க வரும்போது கூட குப்பைய அள்ளாம இருக்காங்க. இதுதான் இங்குள்ள கவுன்சிலரின் லட்சணம். ஒவ்வொரு தேர்தலுக்கும் நாங்க குறைய சொல்லுவோம்.. நீங்க சரி பன்றனு சொல்லுவீங்க… ஜெயிச்சத்துக்கு அப்புறம் திரும்பி கூட பாக்கமாட்டீங்க’ என புகார் கூறுகிறார்கள்.

இதுபோன்ற மக்கள் குறைகளை அமைச்சர் முத்துசாமி எதிர்கொண்டு சமாளித்து பிரச்சாரம் செய்து வருகிறார் சில இடங்களில் ஆரத்தி எடுத்தும் மக்கள் வரவேற்கிறார்கள்’ என்றனர். Erode East by-election

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel