ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.
சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவிற்கு பிறகு ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருந்தது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்திருந்தது.
இதனிடையே திருமகன் ஈவெரா தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவாரா என்று பேசப்பட்டு வந்த நிலையில் அவர், “காங்கிரஸ் மேலிடம் வாய்ப்பு அளித்தால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எனது இளைய மகனை (சஞ்சய் சம்பத்) போட்டியிடச் செய்வேன் என்று கூறியிருந்தார்.
தொடர்ந்து இன்று (ஜனவரி 22) காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், சத்தியமூர்த்தி பவனில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை குண்டுராவிடம் அளித்தார்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் குண்டுராவ், “வேட்பாளர் யார் என்பதை கட்சி மேலிடம் தான் முடிவெடுக்கும்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவதாக அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.
இது குறித்து ஜனவரி 22 மாலை, ”தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவனை நிறுத்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே ஒப்புதல் அளித்துள்ளார்” என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ பத்திரிக்கை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இன்று (ஜனவரி 22) பகல் மின்னம்பலத்தில் “காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு கூட்டம்: அழகிரி ஆப்சென்ட் ஏன்?” என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதில், ”ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனே போட்டியிட வேண்டும் என்று விரும்பியிருக்கிறார் அழகிரி. இதன் வெளிப்பாடாகத்தான் ஈரோட்டில் இளங்கோவன் வீட்டுக்கே சென்று காங்கிரஸார், அவரே தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இளங்கோவன் போட்டியிடுவதையே முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார் என்று சத்தியமூர்த்தி பவனில் இருந்தே ஊடகங்களுக்கு செய்திகள் கசிந்தன. இதன் பின்னால் கோஷ்டி அரசியல் கொடிகட்டிப் பறந்திருக்கிறது.
இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டால் நிச்சயம் அவர் ஜெயிப்பார். அவர் சட்டமன்ற உறுப்பினராகிவிட்டால், சட்டமன்ற உறுப்பினர்களில் மூத்த உறுப்பினர் அவராகத்தான் இருப்பார்.
அதன்படி தற்போது சட்டமன்றக் கட்சி தலைவராக இருக்கும் செல்வப் பெருந்தகைக்கு பதிலாக இளங்கோவனை சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக்கி செல்வப் பெருந்தகையை டம்மி ஆக்கலாம் என்ற திட்டத்தில்தான் இப்படி சில செய்திகள் பவனில் இருந்தே இப்படி கசியவிடப்பட்டன” என்று குறிப்பிட்டிருந்தோம்.
இந்த பின்னணியில் தான்… இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளராக சஞ்சய் சம்பத் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், மாநில தலைவர் அழகிரியின் விருப்பத்திற்கு இணங்க ஈவிகேஎஸ் இளங்கோவனே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆரா, மோனிஷா
லாக் டவுன்: வாட்டிய வறுமை – வியாபாரி தற்கொலை!
ஈரோடு கிழக்கு: காங்கிரசை எதிர்த்துக் களம் காணுவாரா கமல்?