ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த கையோடு, அப்பாடா இத்தோடு விட்டுவிடுவார்கள் என தொகுதி மக்கள் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விடநினைத்தால், அதுதான் இல்லை என அதகளம் செய்கிறார்கள், அரசியல் கட்சியினர்.
வாக்குப்பதிவு முடியும்வரை வாக்காளப் பெருமக்களை விழுந்து விழுந்து கவனிக்கிறார்கள், திமுக, அதிமுக இரண்டு கட்சியினருமே.
தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதுடன், பணத்தையும் பட்டுப்புடவை, சேலைகள் உட்பட பரிசுகளையும் வழங்கிவருகிறார்கள்.

இதுகுறித்து தொகுதிக்குள் வசிக்கும் மக்கள் நம்மிடம் தகவல்மேல் தகவல்களை வழங்கிய வண்ணம் உள்ளனர். சமூக ஊடகங்களிலும் ஆதாரமாக படங்களுடன் பலரும் உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள்.
சமூக அக்கறையோடும் ஆதங்கத்தோடும் இதைப் பற்றி கவலையைப் பகிர்ந்துகொள்பவர்கள் அளிக்கும் தகவல்களையும் சேர்த்துப் பார்த்தால், இந்தத் தொகுதியில் இன்றைய நிலவரப்படி 18 வகையான பொருட்கள் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகின்றன.
‘’ஈரோடு கிழக்கு பரிசு பொருட்கள் விபரம்…
1) வெள்ளி கொலுசு
2) வெள்ளி டம்ளர்
3) எவர்சில்வர் தட்டு
4) எவர்சில்வர் குடம்
5) மில்டன் ஹாட் பாக்ஸ்
6) ஸ்மார்ட் வாட்ச்
7) பிரிஸ்டீஜ் பிரஷர் குக்கர்
8) அரிசி ஒரு சிப்பம்
9) காமாட்சி விளக்கு
10) ராம்ராஜ் வேட்டி
11) ராம்ராஜ் லினன் சட்டை
12) ரூ.900 மதிப்புள்ள புடவை
13) ஓட்டுக்கு ரூ.3000
14) தினசரி மட்டன் சிக்கன் பிரியாணி
15) தினசரி ரூ.1000 உடன் மது
16) மூன்று வாரம் ஞாயிறுதோறும் 1.5 கிகி சிக்கன், 1 கிகி மட்டன்
17) ரூ.1000 சென்னை சில்க்ஸ் கிஃப்ட் கூப்பன்
18) ரூ.2000 மளிகை கூப்பன்
பரிசு மழை சூறாவளி போல் சுழன்று வீசுவதால் …மீதி பரிசு பொருட்கள் விபரம் நாளை அறிவிக்கப்படும்.
வாழ்க ஜனநாயகம். இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்.
என மீம்ஸாகவும் விமர்சனமாகவும் தேர்தல் தொகுதிக்குள் சுருக்கெனவும் விரிவாகவும் சுற்றிவருகிறது.
பிரச்சாரம் முடிவடைந்த நேற்றும், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளான இன்றும் இரண்டு கட்சியினரும் ஐந்தாயிரம் ரூபாய்க்கான ஒரு டோக்கன், அரிசி மூட்டைக்கான ஒரு டோக்கன், பணத்துக்கான ஒரு டோக்கன் என தீயாய்வேலை செய்து விநியோகம் செய்துவருகின்றனர்.
திமுக நேற்று காலையில் ஒரு டோக்கனும் இரவில் ஸ்பெசல் என இன்னொரு டோக்கனும் வழங்கினார்கள்.
சாதாரணமாக தரப்பட்ட டோக்கனின்படி, நேற்று முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்துப் பேசியபோது, அவருக்காக வந்த கூட்டத்தினருக்கு ஐநூறு ரூபாய் தரப்பட்டது.
ஸ்பெசல் டோக்கன் இரவு கொடுக்கப்பட்டது. அது எதற்கு என்றால், தேர்தல் நாளில் வாக்களித்துவிட்டு, குறிப்பிட்ட கடையில் சென்று அதைக் காட்டி ஐந்தாயிரம் மதிப்புள்ள பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்கள்.
அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து வாக்கு கேட்டவர்கள், சில நாள்களாக வெள்ளிக் கொலுசு, ஸ்மார்ட் கடிகாரம், வெள்ளிக் கிண்ணம், வெள்ளி விளக்கு ஆகியன தரப்பட்டன. நேற்று இரவு முதல் இரண்டு டோக்கன்களை தரத் தொடங்கினார்கள்.
முதலில், அதிமுகவின் தீவிர ஆதரவாளர்கள், அந்தக் கட்சியின் நிர்வாகிகளின் குடும்பங்கள் ஆகியவற்றைப் பிரித்து, உறுதிசெய்வதற்காக அந்தந்த வீடுகளின் கதவிலும் முகப்பிலும் குறிப்பிட்ட ஒரு ஸ்டிக்கரை ஒரு குழுவினர் ஒட்டிச் சென்றார்கள். அந்த ஸ்டிக்கர் வெளிர் பசுமஞ்சள் நிறத்தில் கண்ணைப் பறிக்கிறது என்று சொல்லலாம்.
நெட்டுவாக்கில் செவ்வக வடிவத்தில் உள்ள இந்த ஸ்டிக்கரில், மேலே இரட்டை இலைச் சின்னமும், அதன் கீழே, ஆதரிப்பீர்!! வாக்களிப்பீர்!! தேர்தல் நாள் : 27-02-2023 நமது வேட்பாளர் கே.எஸ். தென்னரசு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவதாக இன்னொரு குழுவினர், இன்னொரு செவ்வக வடிவ டோக்கனைக் கொடுத்தபடி செல்கிறார்கள்.

இரண்டாவது டோக்கனில், இடது புறம் நமது சின்னம் எனக் குறிப்பிட்டு அதன் கீழ் இரட்டை இலைச் சின்னமும், அதற்கடுத்தபடியாக தேர்தல் நாள்: 27-02-2023 என்றும், வலதுபுறத்தில் நமது வெற்றி வேட்பாளர் கே.எஸ். தென்னரசு என்று குறிப்பிட்டு, அதற்கு மேலே அவருடைய படமும் அச்சிடப்பட்டுள்ளது.
இந்த டோக்கனை தேர்தல் முடிந்ததும் குறிப்பிட்ட கடையில் கொடுத்தால், ஐந்தாயிரம் ரூபாய் அளவுக்கான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்கள்.
இன்னொரு டோக்கனையும் அதிமுகவினர் தந்திருக்கிறார்கள்.
வட்ட வடிவமான அந்த டோக்கனில், இடது பக்கம் இரட்டை இலைச் சின்னமும் வலது பக்கம் வேட்பாளர் படமும், நமது வெற்றி வேட்பாளர் தென்னரசு என்றும் தேர்தல் நாளைக் குறிப்பிட்டும் இருந்தது.
மறுபக்கத்தில் அண்ணா, எம்ஜிஆர் ஸ்டாம்ப் அளவுக்கான படங்களும் ஜெயலலிதா படம் பெரியதாகவும் அதைவிடக் கொஞ்சம் சிறிய அளவில் எடப்பாடி பழனிசாமி படமும் இடம்பெற்றுள்ளன.
இந்த டோக்கனைத் தந்தால், தேர்தலுக்கு முன்னர் குறிப்பிட்ட கடைகளில் 25 கிலோ அரிசி பெற்றுக்கொள்ளலாம் என்று உறுதியாகக் கூறியுள்ளனர்.
வாக்குப்பதிவுக்கு முன்னால் கடைசி நாளன்று திமுகவும் அதிமுகவும் பரிசுக்கான டோக்கனை வழங்கியிருப்பது, வாக்காளர்களிடையே அதிர்ச்சியையும் திகைப்பையும் ஏற்படுத்திவருகிறது.
ஒவ்வொரு இடைத்தேர்தலிலும் ஏதாவது ஒரு பாணி எனச் சொல்லி, அந்த ஊர் இடைத்தேர்தலை இன்றும் குறிப்பிடுவது உண்டு. அந்த வரிசையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை என்ன பாணி என்று சொல்வது எனக் குறிப்பிடமுடியாத அளவுக்கு, இரண்டு முக்கிய கட்சிகளுமே திணறச் செய்கின்றன.
கடைசியாக இன்று பிரியாணி செய்து, வீடுவீடாகச் சென்று ஹாட்பாக்ஸில் போட்டுத்தந்தும் அசத்தப் பார்த்திருக்கிறார்கள்.
ஆம், இது அசத்தல் இல்லை அட்டூழியம் என்று கவலையோடு குமுறுகிறார்கள், ஜனநாயகத்தின் மீது மதிப்பும் நம்பிக்கையும் வைத்துள்ள உண்மையான அரசியல் கொள்கையாளர்கள்.
எத்தனையோ பெருமைகளைக் கொண்ட ஈரோட்டுக்கு, இந்த இடைத்தேர்தல் ஒரு நோக்காடாகவே பீடித்திருக்கிறது என்றும் குமுறுகிறார்கள், உள்ளூர்க்காரர்கள்.
வணங்காமுடி
மீண்டும் ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்ரா’: காங்கிரஸ் திட்டம்!
“ஈரோடு இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறும்”: கிருஷ்ணன் உண்ணி