கூட்டணி குறித்து சில நாட்களில் முடிவு : செங்கோட்டையன்

Published On:

| By Kavi

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் கூட்டணி குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக அந்தந்த கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வம் தங்கள் தரப்புக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று பாஜக உட்பட கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டனர்.

ஆனால் பாஜக தனது நிலைப்பாட்டை இன்னும் தெரிவிக்கவில்லை. இதனால் பாஜக தனித்துப் போட்டியிடுமா அல்லது யாருக்காவது ஆதரவு தெரிவிக்குமா என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு அதிமுக தேர்தல் பணிக்குழு தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் இன்று (ஜனவரி 28) கூட்டணிக் கட்சிகள் நிலைப்பாடு தொடர்பான கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திண்டுக்கல் தேர்தலில் எப்படி ஒரு திருப்புமுனையை எம்.ஜி.ஆர் உருவாக்கி காட்டினாரோ, அதைப்போல இந்த ஈரோடு கிழக்கு வெற்றியும் இருக்கும்.

மக்களின் மனநிலையும் அப்படிதான் இருக்கிறது. இந்த தேர்தல் தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்கும். தனித்தே நாம் களத்தில் நிற்கிறோம்.

கூட்டணியில் யார் யார் அமையப்போகிறார்கள் என்பது குறித்து ஓரிரு தினங்களில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார். இன்று அதிமுக பிரிந்து இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் 98.5 சதவிகிதம் பேர் ஓரணியில் இருக்கிறோம். இரட்டை இலை சின்னம் குறித்து இரண்டு மூன்று தினங்களில் தெரியவரும். அவர்(ஓபிஎஸ்) ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார். எங்களைப் பொறுத்தவரை முழுமையாக எங்களுக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

தேர்தல் பணிக்குழுவினர் ஈரோடு கிழக்கில் வீடு வீடாகச் சென்று மக்களின் மனநிலை குறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.

பிரியா

“அவரை சந்திக்கக் காத்திருக்கிறேன்”: மறுமணம் குறித்து சோனியா அகர்வால்

தமிழ்நாடா தமிழ்நாய்டுவா?: மீண்டும் சர்ச்சை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel