தமிழக அரசியல் களம் தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒட்டியே மையம் கொண்டுள்ளது.
கடந்த ஜனவரி 4-ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திருமகன் ஈவேரா மாரடைப்பால் மறைவடைந்ததை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலில் வெற்றி பெற திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் கூட்டணிகளும் பலப்பரீட்சையில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கை ஒதுக்கியதை போல இந்த இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்கி அறிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குடும்பத்திற்கு சீட் ஒதுக்க காங்கிரஸ் கட்சியிடம் வற்புறுத்தி வருகிறார்.
ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தன்னை தலைவர் பதவியிலிருந்து மாற்ற நினைக்கும் இளங்கோவனுக்கு சீட் வழங்க தயக்கம் காட்டி வருகிறார்.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு அடிக்கடி மூச்சு வாங்குதல் உள்ளிட்ட உடல்நல பிரச்சனைகள் இருப்பதால் தனது இளைய மகனான சஞ்சய் சம்பத்தை வேட்பாளராக முன்னிறுத்துகிறார்.

ஈரோடு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜாவுக்கு சீட் ஒதுக்க கே.எஸ்.அழகிரியிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அதிமுகவில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்று எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையனிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்
அதிமுகவில் 2001-2006 காலகட்டத்திலும் 2016-2011 காலகட்டத்திலும் எம்.எல்.ஏ-வாக இருந்த தென்னரசு, எடப்பாடியிடம் எனக்கு சீட் தந்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார். அதே போல ஈரோடு மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கமும் எடப்பாடியிடம் சீட் கேட்டு வற்புறுத்தி வருகிறாராம்.
பொதுவாக தொகுதியில் யாரை வேட்பாளராக அறிவித்தால் வெற்றி கிடைக்கும் என்று எடப்பாடி, ஈரோடு கிழக்கு தொகுதியில் ரகசிய சர்வே ஒன்றும் நடத்தி வருகிறாராம். சர்வே அடிப்படையிலேயே வேட்பாளர் அறிவிப்பு நடக்க இருக்கிறதாம்.
நாம் தமிழர் கட்சி சார்பில் 2021 சட்டமன்ற தேர்தலில் கோமதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இவர் 11,629 வாக்குகள் பெற்றிருந்தார்.
காங்கிரஸ், அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளிலும் ஆண் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பெண் வேட்பாளர் ஒருவரை நிறுத்த சீமான் ஆலோசனை நடத்தி வருகிறார்.
செல்வம்
கடலூரில் பாஜக செயற்குழு: காரணம் என்ன?
பாசக்கயிறாக மாறும் மாஞ்சா கயிறு: குஜராத்தில் சோகம்!