அதிமுகவில் தற்பொழுது நிலவும் பிரச்சனைகளிலிருந்து அவர்கள் தப்பித்து வர வேண்டும் என்று வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, முத்துசாமி உள்ளிட்டோர் ஈரோட்டில் இன்று (ஜனவரி 29) செய்தியாளர்களை சந்தித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, “அதிமுகவை குறை சொல்ல நான் விரும்பவில்லை. நாம் வேகமாக ஓட வேண்டும். அவர்கள் சரியாக ஓடவில்லை. அதனால் நாம் ஜெயித்துவிட்டோம் என்பதால் நமக்கு பெருமையில்லை. அவர்களை விட வேகமாக நாம் ஓட வேண்டும். வேட்பாளர்களை அதிமுகவால் அறிவிக்க முடியவில்லை. அதில் நிறைய பிரச்சனைகள் அவர்களுக்கு உள்ளது.
அதில் இருந்து அவர்கள் தப்பித்து மேலே வர வேண்டும் என்று தான் நினைக்கிறேன். இந்த சூழ்நிலையை நாம் நன்றாக பயன்படுத்தி நம்முடைய கூட்டணியை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.” என்றார்.

நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, “இனிமேல் பொதுக்கூட்டங்கள் என்று இல்லாமல் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரிக்க உள்ளோம். எங்களது பிரச்சார வியூகமே திமுக அரசினுடைய சாதனைகளை மக்களிடம் கூறி வாக்கு கேட்பது தான். அனைத்து தோழமை கட்சி தலைவர்களுடன் பிப்ரவரி 1-ஆம் தேதி ஈரோட்டில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்போகிறோம்.” என்றார்.
செல்வம்
திமுக எம்.பி.க்கள் கூட்டம்: ஆலோசித்தது என்ன?
“நவீன மருத்துவ வசதிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்”- முதல்வர் ஸ்டாலின்