ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு அமைத்துள்ள பணிமனையில் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் பாஜக தலைவர்கள் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வம் இருவரும் தனித்தனியாக வேட்பாளரை அறிவித்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அமைக்கப்பட்ட பணிமனையில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று பேனர் வைக்கப்பட்டிருந்தது.
அதில், பாஜக தலைவர்கள் புகைப்படம் இடம்பெறாமல் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் புதிய தமிழகம் கட்சி தலைவர்கள் புகைப்படம் மட்டுமே இடம்பெற்றிருந்தது.
இதனால் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகியதா என்ற கேள்வி எழுந்தது. உடனடியாக பேனரில் தேசிய ஜனநாயக கூட்டணி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான கூட்டணி என்று பெயர் மாற்றப்பட்டது.
ஓபிஎஸ் தரப்பில் அமைக்கப்பட்ட பணிமனையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் தேசிய ஜனநாயக கூட்டணி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜேபி நட்டா, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் இருவரையும் தனித்தனியாக சந்தித்து ஒருங்கிணைந்து பணியாற்ற வலியுறுத்திய நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தேர்தல் பணிமனையில் பாஜக புகைப்படம் இடம்பெற்றிருந்ததும், எடப்பாடி பழனிசாமி தரப்பு பணிமனையில் பாஜக தலைவர்கள் புகைப்படம் இடம்பெறாததும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
ஓபிஎஸ் இபிஎஸ் சந்திப்பு: அண்ணாமலையின் அசைன்மெண்ட் என்ன?
தைப்பூசம், பௌர்ணமி: இன்றும் நாளையும் சதுரகிரிக்குச் செல்ல தடை!