ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்யும் ஒப்புதல் படிவ விநியோகமானது இன்று (பிப்ரவரி 4) முதல் அனைத்து மாவட்டங்களிலும் விநியோகம் செய்யப்பட உள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னம் ஒதுக்க கோரி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
அதில், அதிமுக பொதுக்குழு மீண்டும் கூட்டப்பட்டு, பொதுக்குழு உறுப்பினர்களுடைய ஒப்புதலைப் பெற்று வேட்பாளர் குறித்த விவர அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இதனை தொடர்ந்து அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு பதிலாக வேட்பாளர் விவரம் கொண்ட ஒரு விரிவான சுற்றறிக்கையை அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பி அவர்களுடைய ஒப்புதலை பெற்று விவர அறிக்கையாக தயார் செய்ய அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் முடிவு செய்துள்ளார். மேலும் இந்த அறிக்கையானது தேர்தல் ஆணையத்திடம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட உள்ளது.
வேட்பாளர் ஒப்புதல் படிவ சுற்றறிக்கை அனுப்புவதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக, தமிழ் மகன் உசேன் இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.
அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து மாவட்ட செயலாளர்களுக்கு ஒப்புதல் படிவங்கள் அனுப்பப்பட உள்ளது. மாவட்ட செயலாளர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் படிவத்தில் கையெழுத்து பெற்று அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அனுப்புவார்கள்
சென்னை மாவட்டத்தில் உள்ள மாவட்ட செயலாளர்கள் மட்டும் தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து பெற்று செல்ல உள்ளனர்.
இந்த வேட்பாளர் ஒப்புதல் படிவமானது அதிமுகவில் உள்ள எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் இரண்டு தரப்பிற்கும் அனுப்பப்பட உள்ளது.
நாளை இரவுக்குள் விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்திடம் பிப்ரவரி 6-ஆம் தேதி காலை சமர்ப்பிக்க உள்ளனர்.
செல்வம்
கனமழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?
டாப் 10 செய்திகள்…இதை மிஸ் பண்ணாதீங்க!