ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்றுடன் (பிப்ரவரி 7) நிறைவடைகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். இதனால் அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி துவங்கியது. காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், ஓ.பன்னீர் செல்வம் வேட்பாளர் செந்தில் முருகன், அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் மேனகா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை 61 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்தநிலையில், இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவின் அடிப்படையில், அதிமுக வேட்பாளராக தென்னரசு முன்மொழியப்பட்டு பொதுக்குழு உறுப்பினர்களின் வேட்பாளர் தேர்வு ஒப்புதல் படிவங்களை தேர்தல் ஆணையத்தில் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் நேற்று சமர்ப்பித்தார்.
அதன்படி, அதிமுகவின் வேட்பாளருக்கான ஏ மற்றும் பி படிவங்களில் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
இந்தநிலையில், அதிமுக சார்பில் தென்னரசு இன்று மதியம் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் இடைத்தேர்தலில் போட்டியில் இருந்து விலகுவதாக நேற்று அவரது ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்தார்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. பிப்ரவரி 10-ஆம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
செல்வம்
டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் -எடப்பாடி… ஈரோடு இடைத் தேர்தல் பட்ஜெட் எவ்வளவு?
ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா..கல்லூரி விழாவை களைகட்ட செய்த நயன்தாரா