சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் அமமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் இன்று (ஜனவரி 24) கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் குறித்து சில பரபரப்பான தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.
“நான் உட்பட அனைத்து நிர்வாகிகளும் அமமுக இந்த இடைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறோம். அம்மா என்கிற பெரிய தலைவரும் கருணாநிதி அவர்களும் இல்லாததாலும் இப்போது பல முனைப் போட்டி நடக்கிறது.
உரிய தலைவர்களை காலம் அடையாளம் காட்டிய பிறகு இருமுனைப் போட்டியாகும்.
89 இல் மதுரை கிழக்கு, மருங்காபுரியில் அம்மா ஜெயித்தார். 99 இடைத் தேர்தலில் நத்தம் தொகுதியில் அம்மா ஜெயித்தார். 2017 இல் சுயேச்சையாக நான் நின்று ஆர்.கே.நகரில் ஜெயித்தேன்.
எனவே இடைத் தேர்தலில் மக்கள் ஆளுங்கட்சிக்கு வாக்களிப்பது இயற்கையாக இருந்தாலும், இந்த இருபது மாத ஆட்சியில் 99 சத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே திமுக அரசுக்கு பாடம் புகட்டுவது போல மக்களின் பதில் இருக்கும்.
அதிமுக வேண்டுமானால் பிளவுபட்டிருக்கலாம். ஆனால் அம்மாவின் தொண்டர்கள் எங்களோடு இருக்கிறார்கள். ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் திமுக கூட்டணி டெபாசிட் இழந்தது. அதன் பின் ஆட்சிக்கு வந்தது.
அதுபோல் எங்கள் பலமும் அதிகரிக்கும். ஈரோடு கிழக்கு மக்கள் குக்கர் சின்னத்துக்கு வாக்களிப்பார்கள். ஆர்.கே.நகர் போல இந்த தேர்தலிலும் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும்.
பன்னீர்செல்வமும், பழனிசாமியும் பதவி வெறியாலும் சுயநலத்தாலும் யார் தலைவராவது என்று போட்டி போட்டதால் இப்போது அதிமுக நீதிமன்றத்தில் நிற்கிறது. மக்களை வசப்படுத்தும் இரட்டை இலை சின்னத்துக்கு ஏ ஃபார்ம், பி ஃபார்ம் கொடுக்கும் நிலையில் அவர்கள் இல்லை.
தேர்தல் ஆணையத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்றுதான் உள்ளது. அதனால் இந்த இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் யாரும் போட்டியிட வாய்ப்பில்லை.
அதனால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைய வாய்ப்பில்லை” என்ற தினகரனிடம்,
“ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் நீங்களே களமிறங்க வாய்ப்புள்ளதா?” என்று கேட்க, “வாய்ப்புள்ளது.
மக்கள் விரும்பும் வேட்பாளரை ஜனவரி 27 ஆம் தேதி அறிவிப்போம்” என்று பதிலளித்தார் டிடிவி தினகரன்.
நேற்று (ஜனவரி 23) ஈரோட்டில் அமமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மண்டலப் பொறுப்பாளர் உடுமலை சண்முகவேலு தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய ஈரோடு அமமுக நிர்வாகிகள்,
“இப்போதுள்ள சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நமது பொதுச் செயலாளர் டிடிவி தினகரனே போட்டியிட வேண்டும்.
ஈரோடு கிழக்கை இன்னொரு ஆர்.கே.நகராக மாற்ற வேண்டும்” என்று கோரிக்கைகள் வைத்த நிலையில், இன்று சிவகங்களையில் தினகரன், ‘நானே போட்டியிட வாய்ப்பிருக்கிறது’ என்று கூறியிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.
–வேந்தன்
ஈவிஎம் மிஷின்கள் சரியாக இருக்கிறதா?: ஈரோட்டில் மாதிரி வாக்குப்பதிவு!
43 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை!