ஈரோடு கிழக்கு: 74.69 சதவீதம் வாக்குகள் பதிவு!

அரசியல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 74.69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இன்று (பிப்ரவரி 27 ) காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மாலை 5 மணி நிலவரப்படி 70.58 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்நிலையில், மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

ஈரோடு ராஜாஜிபுரம் பள்ளி வாக்குச்சாவடியில் 500 வாக்காளர்களுக்கு வாக்களிக்க டோக்கன் தரப்பட்ட நிலையில் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

33 பதற்றமான வாக்குச்சாவடிகள் உட்பட 238 வாக்கு சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மற்ற பகுதிகளில் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு இயந்திரங்கள், அரசியல் கட்சி முகவர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

இந்த இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரி சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாலை 6 மணி நிலவரப்படி 74.69 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், ராஜாஜிபுரம் வக்குச்சாவடியில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறுவதில் ஏன் தாமதம் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த அவர், “கூலி வேலை செய்யும் மக்கள் அந்த பகுதியில் அதிகமாக இருப்பதால் அவர்கள் வேலைக்குச்சென்று விட்டு வந்த பிறகு வாக்களித்து வருவதால் தாமதமாகி உள்ளது” என்று கூறினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

மதுரை எய்ம்ஸ்: புதிய தலைவர் நியமனம்!

நாகாலாந்து, மேகாலயா: வாக்குப்பதிவு எவ்வளவு?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0