வைஃபை ஆன் செய்ததும் பேஸ்புக்கில் ஓ பன்னீர்செல்வம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமைத்த தேர்தல் பணிக்குழு அறிவிப்பு அப்டேட் ஆனது.
அதை பார்த்துவிட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“சேலத்தில் மூன்று நாட்கள் தொடர் ஆலோசனைக்கு பிறகு 117 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்திருக்கிறார் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி.
தேர்தல் பணிக்குழு அமைத்த கையோடு சேலத்தில் இருந்து ஈரோட்டுக்கு வந்து அங்கே பணிக்குழு நிர்வாகிகள் மற்றும் ஈரோடு பூத் கமிட்டி உறுப்பினர்கள் அனைவரையும் கூட்டி மீண்டும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினார்.
இதன்பிறகு எடப்பாடி அதிமுகவினர் ஈரோடு கிழக்கில் தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையே ஓ பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்படுமா அல்லது பாஜகவின் முடிவை எதிர்பார்த்து அதற்குப் பிறகு தேர்தல் செயல்பாடுகளில் பன்னீர் ஆர்வம் காட்டுவாரா என்ற கேள்வி அவரது ஆதரவாளர்கள் இடையிலேயே எழுந்தது.
செங்கோட்டையனை தலைமையாக கொண்டு செயல்பட்டு வரும் ஈரோடு கிழக்கு தேர்தல் பணிக்குழு எடப்பாடி சொன்ன கட்டளைகளோடு இன்னொரு பணியையும் சேர்த்து பார்த்தது.
அதாவது பன்னீர் அணியில் இருக்கும் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, ‘ஈரோட்டில் பன்னீருக்கு என்ன வேலை? செங்கோட்டையன் மேல இருக்கிற அதிருப்தியில் நீங்க பன்னீர் பக்கமா போயிருக்கீங்க.
இனிமே அதெல்லாம் வேணாம். உங்களுக்கு என்னென்ன தேவையோ அதெல்லாம் செஞ்சு கொடுக்கிறோம்… பேசாம நம்ம பக்கம் வந்துடுங்க’ என்ற பாச வலை வீசி இருக்கிறார்கள் எடப்பாடி தரப்பினர்.
இந்த தகவல் ஈரோட்டில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்த பன்னீருக்கு தெரிவிக்கப்பட்டது.
’நாம் மேலும் தாமதம் செய்தால் நம்மிடம் இருக்கும் நிர்வாகிகளை எடப்பாடி தரப்பினர் என்ன விலை கொடுத்தேனும் வளைத்து விடுவார்கள்… எடப்பாடி தான் ஜெயிப்பதை விட பன்னீர் செல்வத்திற்கு எதுவுமே இல்லை என்பதை நிரூபிக்கவே விரும்புகிறார்.
எனவே தேர்தல் வேலைகளை நாம் ஆரம்பிக்க வேண்டும்’ என்று பன்னீரிடம் ஈரோட்டில் இருந்து சில எச்சரிக்கை தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதன் விளைவாகவே உடனடியாக சென்னை திரும்பியவர் இன்று ஜனவரி 28ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தி,
மாவட்ட செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை பட்டியலிட்டு எடப்பாடி பழனிச்சாமி 117 பேர் கொண்ட பணிக்குழு வெளியிட்டு இருந்த நிலையில்…
அவரை விட ஒரு நபர் அதிகமாக 118 பேர் கொண்ட பணிக்குழுவை அமைத்து அவசரமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
பன்னீரின் பணிக் குழுவை பர்ச்சேஸ் செய்வதில் திமுகவும் எடப்பாடி தரப்பும் போட்டி போட்டுக் கொண்டுள்ளனர் என்பது தான் இப்போதைய ஈரோடு கிழக்கு அப்டேட்” மெசேஜ் க்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்.
ஆஸ்திரேலியா ஓபன் : முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெலாரஸ் வீராங்கனை