ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவின் போது ஆதார் அட்டையை ஆவணமாக காண்பித்து வாக்களிக்க அனுமதி மறுத்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று (பிப்ரவரி 27) நடைபெற்று வருகிறது.
காலை 9 மணி நிலவரப்படி 10.10 சதவீதம் வாக்குகளும், 11 மணி நிலவரப்படி 27.89 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.
தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருவதாகவும், வாக்குப் பதிவு சூழல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வாக்கு மை சரியாக இல்லை என்று அதிமுக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிற்கு கடிதம் அனுப்பியது.
ஆனால், இது போன்ற பிரச்சனைகள் எதுவும் இல்லை, மை சரியாகத் தான் இருக்கின்றது என்று தேர்தல் அதிகாரி சிவக்குமார் கூறியிருந்தார்.
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்துக்கு வாக்களிக்க வந்த பெண் ஒருவர் அடையாள அட்டையாக ஆதார் அட்டையைக் காண்பித்து உள்ளார்.
ஆனால் ஆதார் அட்டையைக் காண்பித்து வாக்களிக்க அனுமதி இல்லை என்று வாக்குச்சாவடி மையத்தில் இருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அந்த வாக்குச்சாவடியில் சற்று நேரத்திற்குப் பரபரப்பான சூழல் நிலவியது.
பின்னர் ஆதார் அட்டையை ஆவணமாகக் காண்பித்து அந்த பெண் தன்னுடைய வாக்கைப் பதிவு செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதே போன்று இன்னும் சில வாக்குச் சாவடிகளில் ஆவணமாக ஆதார் அட்டையைக் காண்பித்து வாக்களிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு விளக்கம் அளித்த தேர்தல் அதிகாரி சிவக்குமார், “வாக்காளர்களின் ஆவணங்கள் தொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அதன்படி வாக்காளர்கள், ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, வங்கி/அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் (புகைப்படத்துடன் கூடிய) தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, ஓட்டுநர் உரிமம்,
நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN CARD), தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வாங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, இந்திய கடவுச் சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய/ மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்களால்/ வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்,
பாராளுமன்ற/சட்டமன்ற/சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை, இந்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்படும் தனித்துவமான இயலாமைக்கான அடையாள அட்டை (UDID) ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தை அடையாளமாகக் காண்பித்து வாக்களிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மோனிஷா
அயலி அனுபவம் எப்படி இருந்தது?: நடிகை அனுமோள்
ஈரோடு கிழக்கு தேர்தல் : 11 மணி அப்டேட்!