ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாகத் திரட்டப்பட்ட ஒப்புதல் கடிதங்கள் இன்று (பிப்ரவரி 6) தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன.
இந்த மாதம் 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளையுடன் (பிப்ரவரி 7) முடிவடையவுள்ளது.
இடைத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்ததைத் தொடர்ந்து வேட்பு மனுத் தாக்கல் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் அதிமுகவின் வேட்பாளர் யார் என்பது இன்னும் உறுதியாகாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விவகாரத்தில் வேட்பாளர் தேர்வுக்கு உரிய அதிகார மையத்தைத் தீர்மானித்து தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த இடையீட்டு மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி விசாரணை செய்து ஒரு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.
அதன்படி, அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் பொதுக்குழுவைக் கூட்டி அதிமுக வேட்பாளர் யார் என்பதைத் தேர்வு செய்து தேர்தல் ஆணையத்திற்குத் தகவல் அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.
ஆனால், பொதுக்குழுக் கூட்டம் நடத்துவதற்குப் பதிலாக வேட்பாளர் விவரம் கொண்ட ஒரு விரிவான சுற்றறிக்கையை அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பி,
அவர்களுடைய ஒப்புதலைப் பெற்று விவர அறிக்கையாகத் தயார் செய்ய அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் முடிவு செய்தார்.
அதன்படியே, கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி ஒப்புதல் படிவம் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அடுத்த நாளான பிப்ரவரி 5 ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்கவும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு பொதுக்குழு உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட ஒப்புதல் கடிதங்களை இன்று அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்க உள்ளார்.
தேர்தல் ஆணையத்தில் காலை 11 மணியளவில் பொதுக்குழு உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட கடிதங்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
இதற்காக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் உடன் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், சட்டப் பிரிவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் இன்பதுரை, பாபு முருகவேல் உள்ளிட்டோர் டெல்லி செல்கின்றனர்.
இதனிடையே, தமிழ் மகன் உசேனின் ஒப்புதல் கடிதம் ஒருதலை பட்சமானது என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அவரது கடிதத்தைப் புறக்கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
இந்துத்துவ சாதனைகள்: இமாலய ஊழலும், இரக்கமற்ற படுகொலைகளும்!
ஐக்கிய அரபு அமீரகம் சமரசம்: ரஷ்ய வீரர்களை விடுவித்த உக்ரைன்!