ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (ஜனவரி 23) மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழக அரசியலில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
ஆனால் காங்கிரஸுக்கு எதிராகப் போட்டியிடப்போவது அதிமுகவா, பாஜகவா என்ற சூழலில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடப்போவதில்லை என்று இன்று சூசகமாக தெரிவித்திருந்தார்.
இதனிடையே, ஜனவரி 21 ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஓபிஎஸ் அண்ணாமலையை சந்திக்க கமலாலயம் செல்வதாக அறிவித்திருந்த நிலையில், எடப்பாடி தரப்பில் கே.பி முனுசாமி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் 3 மணிக்கே கமலாலயம் சென்றனர்.
அவர்கள் ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்குமாறு கூறியுள்ளனர்.
தொடர்ந்து 4 மணிக்கு ஓபிஎஸ் நேரடியாகச் சென்று அண்ணாமலையை சந்தித்து, பாஜக போட்டியிடுவதாக இருந்தால் ஆதரவு அளிக்கிறோம் என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் குஜராத் தலைநகர் அகமதாபாத்திற்கு சென்றார். அகமதாபாத்தில், தமிழ் சங்கம் நடத்தும் பொங்கல் விழாவில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
குஜராத்தில் இருந்து ஓபிஎஸ் திரும்பிய நிலையில், இன்று (ஜனவரி 23) ஓபிஎஸ் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 87 மாவட்டச் செயலாளர்கள், 114 தலைமை கழக நிர்வாகிகள், 26 அமைப்புச் செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதிமுக மூத்த தலைவரும், அரசியல் ஆலோசகருமான பண்ருட்டி ராமச்சந்திரனும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
மோனிஷா
கோபி – சுதாகரின் ‘க்ரவுட் ஃபண்டிங்’ திரைப்படம் கைவிடப்பட்டதா?
அண்ணாமலைக்கு காயத்ரி இடைத்தேர்தல் சவால்!