கூட்டணி குறித்து இரண்டு மூன்று தினங்களில் அறிவிக்கப்படும் என்று அதிமுக தேர்தல் பணிக்குழு தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில் இன்று (ஜனவரி 29) தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக களத்தில் இறங்கி வேலையை தொடங்கியுள்ள நிலையில், எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் இன்னும் வேட்பாளர் கூட அறிவிக்கப்படவில்லை.
அதிமுக இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில் ஓபிஎஸ் தரப்பும் இபிஎஸ் தரப்பும் மாறி மாறி கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறது.
இதில் பாஜக இன்னும் தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை.
இந்த சூழலில் நேற்று (ஜனவரி 28) செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கூட்டணியில் யார் யார் அமையப் போகிறார்கள் என்பது குறித்து இரண்டு மூன்று தினங்களில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி கே வாசன் நேரில் சென்று ஆலோசனை நடத்தினார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை திமுக ஏமாற்றி வருகிறது. ஆட்சிக்கு வந்த குறைந்த காலத்தில் சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வு என சுமைக்கு மேல் சுமையை சுமத்தி வருகிறது.
இதனால் மக்கள் திமுக ஆட்சி மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். எதிர்க்கட்சியுடன் கூட்டணி சேர்ந்து திமுகவிற்கு பாடம் புகட்ட வேண்டும். 2019 ஆம் ஆண்டு முதல் அனைத்து தேர்தல்களிலும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தமிழ் மாநில காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்கிறது. இந்த கூட்டணி தொடர்கிறது என்று தெரிவித்தார்.
பிரியா
என்னை காமெடி பண்ணவே விடல: யோகி பாபு
பத்ம விருதுகளை வென்ற பழங்குடியினர்! – பிரதமர் பெருமிதம்