ஒரு கல்லூரியும் சில தீரமிக்க இளைஞர்களும்…  இதோ ஒரு சமகால சரித்திரம்!

அரசியல் சிறப்புக் கட்டுரை

பேராசிரியர் நா.மணி

எளிய குடும்பம். எப்படியோ ஆசிரியர் பயிற்சி வரை படித்து விட்டார். ஆசிரியர் வேலை இப்போதைக்கு என்றாகிவிட்டது. தட்டச்சுப் படித்து தேர்ச்சி பெற்றார்.  தமிழ்நாடு தேர்வாணையத்தின் தேர்வுகள் மட்டுமே தனக்கு ஒரே கதி மோட்சம் என்று உணர்ந்தார்.

வீடு மாநகராட்சி எல்லைக்குள். ரயில் நிலையம் அருகில். ஆனால் மின்சார வசதி இல்லாத வீடு. வீட்டில் தன்னோடு சேர்த்து  நான்கு  பெண் குழந்தைகள். ‌ இவர் மூன்றாமவர். அப்பா‌வுக்கு மத்திய அரசுப் பணி. கடைநிலை உத்யோகம். அம்மா விவசாய கூலி.  இந்த நிலைகள் என்றாலும்  அவர் மனம் தளரவில்லை. சுயமாக தேர்வுகளுக்கு தயாராகி வந்தார்.

இரவு நேரப் படிப்புக்கு தனது வீட்டருகே இருக்கும் ரயில் நிலையமே அடைக்கலம். தினமும் ரயில் சேவையை பயன்படுத்தி திருப்பூர் சென்று வரும் ஒருவர், அந்தப் பெண்ணின் தொடர் படிப்பை தினமும் அவதானிக்கிறார். ஒரு நாள் அருகில் வந்து விசாரிக்கிறார். நிலைமையை புரிந்து கொள்கிறார்.

“இந்த நிலையிலும் படித்து, முன்னேற முயற்சி செய்வது நல்லது. ஆனால்,  இது மட்டுமே போதுமானது அல்ல. உங்கள் அருகில் ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில், வாராவாரம், சனி ஞாயிறுகளில்  தமிழ் டிஎன்பிஎஸ்சி பரிட்சைக்கு  இலவசமாக பயிற்சி கொடுக்கிறார்கள். பாரதி பயிற்சி மையம் என்ற பெயரில் நடக்கிறது.  

உங்களைப் போல கஷ்டப்பட்டு படித்து அரசாங்க வேலையில் இருக்கும் இளைஞர்கள் தான் வகுப்பு எடுக்கிறார்கள். அங்க போய் சேர்ந்து படிங்க. அப்படி படிச்சா உங்களைப் போல ஆர்வம் இருப்பவர்கள் படிச்சா கண்டிப்பா‌ வேலைக்கு போய்விடலாம்” என்று உற்சாகம் ஊட்டுகிறார்.

அந்தப் பெண்ணுக்கு  வழிகாட்டிய மனிதர் யாரென்று  கல்லூரிக்கோ, பாரதி பயிற்சி மையத்தின் நண்பர்களுக்கோ தெரியாது. ஆனால் அவரது வழிகாட்டுதல் படி அந்தப் பெண் ஒன்றுக்கு இரண்டு வேலை வாங்கிவிட்டார்.

அவரது ஆலோசனைப்படி   ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் நடக்கும் பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெறத் தொடங்குகிறார் அந்தப் ‌பெண்.  தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம் இரண்டு தட்டச்சர் வேண்டும் என்று மாநில அளவில் எழுத்துத் தேர்வு நடத்துகிறது. அதில் முதலாவதாக தேறி, இரண்டில் ஒரு வேலையை  அந்தப் பெண் ‌பெற்று விடுகிறார்.

தொடர்ந்து குரூப் நான்கு தேர்வுக்கு பயிற்சி எடுத்து வந்தார். அடுத்து நடந்த குரூப் நான்கு தேர்வில் தேர்ச்சி பெற்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இன்னொரு இளைஞர்…  அப்பா இல்லை அவருக்கு. அம்மாதான் கஷ்டப்பட்டு வளர்த்தார். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் சனி, ஞாயிறுகளில் பகுதி நேரமாக பட்டம் படித்தார். பின்னர் பிஎட் படித்தார். நமது பயிற்சி மையத்தை தனது சகோதரர் மூலம் அறிய வந்தார்.‌

படிக்கும் காலத்திலும் சரி பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்த காலத்திலும் சரி அவர் செய்யாத வேலை இல்லை.  ஆக்டிங் டிரைவர், சுமைப்பணியாளர், தேங்காய் உரித்தல், மளிகை கடை, வீடு காலி செய்து கொடுத்தல் இப்படி பல வேலைகளை செய்து கொண்டே பயிற்சி மையத்திலும் தீவிரமாக படித்தார்.

பயிற்சி மையத்தில் சேர்ந்த ஏழு மாதத்தில் வெற்றிவாகை சூடி இப்போது  வருவாய் துறையில் பணி. வேலைக்கு சென்ற பிறகும்  தற்போது கட்டணமில்லா வகுப்புகளை நடத்தி வரும் இலட்சிய இளைஞர்கள் போலவே, அந்தப் படையெடுப்பில் இணைந்து கொண்டார். தனக்கு கிடைக்கும் சிறிய ஓய்வு  நேரத்தையும் பயிற்சி மையத்தின் நன்மைக்காக செலவு செய்கிறார்.

பயிற்சி மையத்தில் நடக்கும் வாராந்திர தேர்வுகளுக்கு அதிகாலை மூன்று வரை கேள்வித்தாள் தயாரித்து அனுப்பி வைப்பார். தற்போது மையத்தின் தூண்களில் அவரும் ஒருவர்.

பிபிஎம் பட்டப் படிப்பை முடித்து விட்டு, தட்டச்சு முடித்து விட்டு வணிகவரித்துறையில் 5000 ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்து கொண்டிருந்தவர் ,2017ல் மையம் தொடங்கியதும் பயிற்சியில் சேர்ந்தார். மையம் நடத்திய முதல் பயற்சியிலேயே தேர்வு பெற்று அதே வணிகவரித் துறையில் வேலை செய்து கொண்டே, வாராந்திர தேர்வுகளுக்கு தேவையான கேள்வித்தாளை தட்டச்சு செய்து தந்துவிடுகிறார். இதேபோல் இரண்டு நாட்கள் பயிற்சி இதர நாட்களில் கூலி வேலை என்றிருந்தவர் மையத்தில் இணைந்து படித்து இப்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.

பத்தாம் வகுப்பு மேல் அரசுப் பள்ளியில் கூட படிக்க முடியவில்லை.  சுயநிதி கல்லூரி ஒன்றில் குழந்தை தொழிலாளியாக நூலகத்தில் சேர்கிறார்.  கல்லூரி நூலகர் கேட்கிறார்.

“ஏந்தம்பி இந்த சின்ன வயசுல வேலைக்கு வந்த?
 வீட்ல கஷ்டம். தாங்க முடியல சார்.” 

“சரி போனது போகட்டும். பன்னிரெண்டாம் வகுப்பு பிரைவேட்டா  எழுது” என்கிறார்.
 அவரது சொற்படி கேட்டு  இரண்டு ஆண்டுகளில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வெழுதி தேர்வாகி விடுகிறார். “சார் அடுத்து என்ன செய்யறது!” என்று கேட்கிறார்.

” நூலகர் ’கரஸ்பாண்டஸ் கோர்ஸ்ல டிகிரி படி”  என்கிறார். அதேபோல் மூன்று வருடம் படித்து, பிபிஏ பட்டம் பெற்று விடுகிறார்.”சார் அடுத்து என்ன செய்யட்டும்?” நூலகர் யோசிக்கிறார்.

அவரே வேலையின்மை காரணமாக தான் தனியார் கல்லூரியில் நூலகராக பணியாற்றி வருகிறார்.  சற்று நேரம் யோசித்து விட்டு, ” தம்பி! எங்க சார் மூலமாக, எங்க காலேஜில டிஎன்பிஎஸ்சி கோச்சிங் கொடுக்கிறாங்க.  சனி ஞாயிறு தான் வகுப்பு. அதுல சேர்ந்து படி அரசாங்க வேலைக்கு போய்விடலாம் ” என்கிறார்.  அவ்வாறே  தொடர்ந்து வந்து பயிற்சி பெறுகிறார்.

குரூப் நான்கு தேர்வில் வெற்றி பெற்று, தற்போது மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளர். அவரைப் பார்ப்போர் எல்லாம் “எவ்வளவு பணம் குடுத்து வேல வாங்கின” என்று கேட்கிறார்களாம்.

“கவர்மென்ட் ஸ்கூல பிளஸ் டூ படிக்க முடியாம,  சைல்ட் லேபரா போனவன். எங்கிட்டப் போயி “எவ்வளவு பணம் குடுத்து வேலைக்கி போனாய்” என்கிறார்கள். நான் என்ன சொல்ல என்று சிரிக்கிறார் அவர்.

டாஸ்மாக் வாரியத்தில்  பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு தேர்வு வைத்து அதிலிருந்து 500 பேரை இளநிலை உதவியாளர்களாக எடுத்துக் கொள்ள முன்வந்தது தமிழ் நாடு அரசு. தேர்வுக்கான அறிவிப்பு வந்தவுடன் அதன் ஊழியர்கள் சங்கத்திலிருந்து  கல்லூரியை தொடர்பு கொண்டனர். பதினைந்து பேர் தினந்தோறும்  பயிற்சி மையத்திற்கு வந்தனர். கல்லூரி பேராசிரியர்கள் சிறப்பு வகுப்புகள் எடுத்தனர்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு கல்லூரியில் பயிற்சியா என்று பத்திரிகை துறை நண்பர்கள் சிலர் கூட கிண்டல் செய்தனர். பதினைந்து பேரில் எட்டு பேர் தேர்ச்சி பெற்று பணியில் அமர்ந்து விட்டனர்.  

மேற்சொன்ன சரித்திர சம்பவங்களும், சம்பவச் சரித்திரங்களும் இதோ நம் கண் முன்னே நடந்துகொண்டிருக்கின்றன.

12/08/2017 ல் ஈரோடு கலை அறிவியல் கல்லூரியும் பாரதி டிஎன்பிஎஸ்சி  பயிற்சி மையமும் இணைந்து நடத்தி வரும் கட்டணம் இல்லாத தமிழ் தேர்வாணைய பயிற்சி வகுப்புகள் ஐந்து ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக நடந்து வருகிறது.

இந்த ஐந்து ஆண்டுகளில் 136 மாணவர்கள் பல்வேறு தேர்வாணைய தேர்வுகளின் வழியே தேர்வாகி வேலையில் அமர்ந்துள்ளனர். இந்த 136 பேருக்கு பின்னாலும் இப்படி ஒரு கதை இருக்கும். குரூப் 4 தேர்வுகள் வழியே 84 பேர். நீதிமன்ற தட்டச்சர்/ எழுத்தர் பணியில் 12 பேர்.‌ டாஸ்மாக் நிறுவன எழுத்தர் எட்டு பேர். குரூப் 2ல் இரண்டு பேர். கால்நடை மருத்துவர்கள் தேர்வில் 30 பேர். இவர்கள் முதல் தாளுக்கும் நேர்காணல் தேர்வுக்கும்   பயிற்சிக்கு வந்தவர்கள்.

வெற்றி பெற்று பணியில் அமர்ந்தவர்களுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினோம். ஒவ்வொருவரும் அவரவர் பாணியில், பயிற்சி மையம், பயிற்சியாளர்களின் பங்களிப்பு பற்றி எடுத்துக் கூறினர்.

முத்தாய்ப்பாக ஒருவர் “இந்த கல்லூரியே எனக்கு கோவில். இங்கு எனக்கு வாய்த்த பயிற்சியாளர்கள் முதல்வர் தாளாளர் ஆகியோர் எனக்கு குலதெய்வம்” என்று கூறி சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

ஒரு பைசா செலவு  இல்லாமல், தமிழ்நாடு அரசின் பல்வேறு பணிகளில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் எந்த ஒரு கல்லூரியிலும் இப்படிப்பட்ட பயிற்சி மையம் இல்லை என்று அறுதியிட்டு சொல்லலாம். இப்படியான  ஒரு பயிற்சி மையம் அமைவதற்கு  வரலாறு இருக்கிறது.

2009 ஆம் ஆண்டிலேயே கல்லூரியில் இருந்து தமிழ்நாடு தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. தற்போதைய பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்த முனைந்த போது, அப்போது பொறுப்பில் இருந்தவர், இதற்கு உற்சாகம் ஊட்டவில்லை. “நமக்கு என்ன கிடைக்கும்?” என்பதில் குறியாக இருந்தார். எனவே  அந்த எண்ணம் கைவிடப்பட்டது.

ஒருங்கிணைப்பாளரின் பணிக்கு  செயலுக்கு ஊக்கம் அளிக்கும் முதல்வர் பொறுப்புக்கு வந்தார்.  இப்படி ஒரு திட்டத்தை மனம் உவந்து வரவேற்றார். உடனடியாக செயலில் இறங்கும் படி கல்லூரியின் செயலாளரிடம் அனுமதி பெற்றுக் கொடுத்தார்.
இந்த முதல் கட்ட முயற்சியில் சொல்லிக் கற்றுக் கொடுப்பவர்கள்  கற்றுக் கொள்பவர்கள் இருதரப்பும்  எங்கள் கல்லூரியிலேயே இருப்பது என்று முடிவு செய்து பணிகளை தொடங்கினோம்.

தொடக்கத்தில்  தன்னார்வமாக சொல்லிக் கொடுத்துக் கொண்டு வந்தவர்கள் எண்ணிக்கை  குறைந்து கொண்டே வந்தது. அதேபோல் மாணவர்கள் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வந்தது. ஒருகட்டத்தில் மையத்தை நிறுத்தி விட்டோம். குறைபாடுகளை சரி செய்து கொண்டு புதுப்பிக்க முடிவு செய்தோம்.

சில மாதங்கள் கழித்து, குரூப் 2 ல்  தேர்ச்சி பெற்று அரசுப் பணிகளில் அமர்ந்த இளைஞர்கள் சார்பில் பிரபு  எங்களை சந்தித்தார்.  நாங்கள் கல்லூரியின் சார்பில் பயிற்சி முகாம் நடத்திக் கொண்டிருந்த போது தமிழ் பாடங்கள் முழுவதுமாக இலவசமாக எடுத்துக் கொடுத்தவர்.

இப்போது, அவரைப் போன்ற மனம் படைத்த, ஒத்த கருத்துடைய, நண்பர்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு வந்தார். “தாங்கள் படித்து முடித்து வேலையில் அமர்ந்ததோடு மட்டுமல்லாது விடுமுறை நாட்களில்  இலவசமாக பயிற்சி கொடுக்க தயாராக இருப்பதாகவும் எங்களுடன் இணைந்து பயணிக்க விருப்பம் என்றும் கூறினர்.  
பாரதி டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையம் என்று பெயரில் இயங்கத் தயார் என்றும், கல்லூரியில் இயங்கி வரும் ஐஏஎஸ் அகாடமியோடு இணைந்து செயல்பட தயார் என்று உறுதியளித்தனர்.

ஈரோடு கலை அறிவியல் கல்லூரியின் ஐஏஎஸ் அகாடமி மற்றும் பாரதி டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையம்  இணைந்து செயல்பட தொடங்கிய இந்த ஐந்து ஆண்டுகளிலும் அவர்கள் துடிப்புடன் செயலாற்றி வருகின்றனர்.

கவிப்பிரியா, மலர்விழி, கவிதா, கண்ணன், சக்கரவர்த்தி, துரைராஜ், வேல்முருகன், காளிமுத்து, சந்திரகுமார், நாகராஜ், ஆனந்தன், சக்திவேல், செல்வராஜ், சுரேஷ், நட்ராஜ் மற்றும் பிரபு  ஆகிய 16 பேரும், டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் வழியே  தமிழ் நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். பல்வேறு வகையில் போராடி போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்தவர்கள்.

நம்மைப் போல் கஷ்டப்படுபவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும். ஒரு பைசா பணம் வாங்கிக் கொள்ள கூடாது. இது நமது சமூக சேவை. தேச சேவையின் ஒரு பகுதியாக கருதி  செய்து வருகின்றனர்.  ஈரோடு கலை அறிவியல் கல்லூரியின் கலையரங்கத்தில் வாராவாரம் சனி ஞாயிறுகளில் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பயிற்சியை நடத்தவும், பயிற்சிக்கு தேவையான  உதவிகளை செய்ய பணியாளர் வசதி ஆகியவற்றை கல்லூரி நிர்வாகம் செய்து கொடுத்தது.

“கல்லூரி எவ்வளவு வசதிகளை செய்து கொடுத்தாலும் அதன் பயிற்சியாளர்களே அடிநாதம்” என்பதை உணர்ந்து பயிற்சியாளர்களை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உச்சி முகர்ந்து பாராட்டி உற்சாகமூட்டி அவர்கள் பணிகளை அங்கீகரித்து வருகின்றனர்.

கட்டணம் இல்லாத பயிற்சி மையம் தான். ஆனால் கட்டுப்பாடுகள் உண்டு. தொடர்ந்து மூன்று வாரங்கள் பயிற்சி மையத்திற்கு வருகை தந்தால் மட்டுமே வருகை பதிவேட்டில் பெயர் எழுதப்படும். தொடர்ந்து மூன்று வாரங்கள் மையத்திற்கு வராவிட்டால் பெயரை எடுத்து விடுவார்கள்.

bharathi tnpsc coaching centre

ஒருமுறை நடத்தி முடித்தவுடன் வாராவாரம் தேர்வு. முன்னூறு பேர் பயிற்சி பெறும் இடத்தில் வாராவாரம் அவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள். இன்னும் எவ்வளவு தூரம் படிக்க வேண்டும்.  எவ்வளவு தூரம் முன்னேற வேண்டும் என்று அவர்களுக்கே தெரிந்து விடும். எங்கே பிழைகள் எப்படி சரிசெய்வது என்பதும் சொல்லித் தரப்படுகிறது.  ஒரு சுழற்சியில் எல்லாப் பாடங்களும் படித்து தேறிய வர்களுக்கு வகுப்புகள் இல்லை. தேர்வுகள் மட்டுமே உண்டு. இதனை டெஸ்ட் பேட்ச் என அழைக்கிறார்கள்.

பயிற்சிக்கு வருபவர்கள் 80 விழுக்காடு பெண்கள்.  கட்டணம் இல்லாத பயிற்சி வகுப்புகள் என்பதால் பயிற்சியாளர்கள் பயிற்சி கொடுப்போர் இடையே அன்பும் பாசப் பிணைப்பும் ஆத்மார்த்தமாக இருக்கிறது. அது பயிற்சியை மேலும் மெருகேற்றுகிறது.

தற்போது குரூப் 4 தேர்வில் பங்கு பெற்றவர்கள் 190 பேர். வெற்றி பெற்றவர்கள் 38 பேர். வெற்றி  20 விழுக்காடு. இதுவே ஒரு தனியார் பயிற்சி மையமாக இருந்தால் பெரும் பொருட் செலவில் இந்த வெற்றியை தமிழகம் அறியச் செய்திருப்பார்கள்.  அத்தகைய ஆர்பாட்டம் நமக்கு தேவையில்லை. ஆனால் எங்கள் செயல்பாட்டை உணர்ந்து படிப்படியாக வந்து இணைந்து கொள்வோருக்கு தரமான கட்டணமில்லா பயிற்சியை தொடர்ந்து வழங்க தயாராக உள்ளோம்.

bharathi tnpsc coaching centre

ஈரோடு மாவட்டத்தின் அன்றைய பயிற்சி ஆட்சியர்,   ஜானி டாம் வர்கீஸ் இஆப அவர்கள் 12/08/2017 அன்று இம்மையத்தை தொடங்கி வைத்தார். ஆனந்தகுமார் இஆப அவர்கள் தம் சொந்த செலவில் வருகை தந்து ஒருநாள் பயிற்சி நடத்தி விட்டு சென்றார். பேராசிரியர் சுப வீரபாண்டியன், கர்நாடக மாநிலத்தின் திட்டக் குழு உறுப்பினர் பேராசிரியர் மாதேஸ்வரன், கவிஞர் அறிவுமதி போன்றோர் அவ்வப்போது வந்து வகுப்புகள் எடுத்து உற்சாகம் ஊட்டி வருகின்றனர்.

தினமும் வந்து செல்ல முடியாதவர்கள் எங்கள் மையத்தை தொடர்பு கொள்ள தொடங்கி உள்ளனர்.  அவர்களில் வசதியற்ற நிலையில் இருப்பவர்களுக்கு, பயிற்சி நாட்களில்  இலவச தங்கும் விடுதி அளிக்க கல்லூரி நிர்வாகம் ஒப்புக் கொண்டு உள்ளது. உணவுக் கட்டணத்தை மட்டும் அவர்கள் செலுத்தி விட வேண்டும்.  

bharathi tnpsc coaching centre

விடுமுறை நாட்களில் காலியாக இருக்கும் கல்லூரியை எவ்வாறு சமூக முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்கு ஈரோடு கலை அறிவியல் கல்லூரியும் படித்து முடித்து வேலையில் அமர்ந்து விடும் இளைஞர்கள் நினைத்தால் எவ்வளவு பேரை அரசுப் பணிகளில் அமரவைக்க முடியும் என்பதற்கு பாரதி பெயரை வரித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுமே சிறந்த உதாரணம்.

கட்டுரையாளர்

bharathi tnpsc coaching centre


நா.மணிபேராசிரியர் மற்றும் தலைவர் பொருளாதாரத் துறை,
ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் ஐஏஎஸ் அகாடமி ஒருங்கிணைப்பாளர்.

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு : ஓபிஎஸ் பேட்டி!

சூரிய நமஸ்காரம் செய்யும் சிறுத்தை: வீடியோ வைரல்!

+1
0
+1
0
+1
0
+1
11
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.