ராஜன் குறை Erode and Delhi Election Victory
ஊடகங்களில் தேர்தல் வருவதற்கு ஓராண்டுக்கு முன்னிருந்தே வெற்றி, தோல்விகளை கணிக்கத் துவங்கி விடுகிறார்கள். தேர்தல் நடந்து முடிந்த பிறகும் தொடர்ந்து விவாதங்கள் நடக்கின்றன. இதில் பல தரப்பட்ட விளக்கங்கள், வியாக்கியானங்கள் அவரவர் நோக்கிலிருந்து தரப்படுகின்றன. இத்தகைய விளக்கங்களே இன்னொரு அரசியல் செயல்பாடு என்னுமளவு அவை அமைந்துவிடுகின்றன. அவற்றையெல்லாம் கேட்பவருக்கு உண்மையில் அரசியலை எப்படி புரிந்துகொள்வது என்பதில் மிகுந்த குழப்பம் ஏற்படலாம்.
ஒரு சில முக்கியமான அரசியல் அடிப்படைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக கடந்த இருநூற்றைம்பது ஆண்டுகளாக உருவாகி வந்துள்ள மக்களாட்சி குடியரசுகள் எந்த அடிப்படை இலட்சியங்களைக் கொண்டு இயங்குகின்றன என்பதைக் காண வேண்டும். அந்த இலட்சியங்கள் எவைவென்றால் அதிகாரப் பரவல், அனைத்து மனிதர்களுக்குமான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று சுருக்கமாகக் கூறலாம்.
இந்த இலட்சியங்கள் உருவானபோது மானுட சமூகங்கள் கடுமையான ஏற்றத்தாழ்வுகளுடன்தான் இருந்தன. அந்த ஏற்றத்தாழ்வுகள் நிலவுடமை சமூகம் உருவாக்கிய படி நிலை சமூகங்களாக இருந்தன. இந்தியாவில் சற்றே வித்தியாசமாக அந்த படிநிலை அமைப்புகள் வர்ண தர்ம சிந்தனையால் கட்டப்பட்ட ஜாதீய சமூகமாகவும் இருந்தது. பச்சை விளக்கு திரைப்படப் பாடலில் வருவது போல “ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ…அரசன் இல்லாமல் ஜனங்கள் ஆளும் காலம் வாராதோ” என்று ஏங்கிய காலமாக இருந்தது. Erode and Delhi Election Victory
இந்த நிலையில் இருந்துதான் சாமானியர்களின் ஆட்சி என்ற இலட்சியத்தை நோக்கி நகர வேண்டியிருந்தது. அதன் ஒரு பகுதியாக அனைவருக்கும் பொதுவான சட்டங்களை இயற்றி அதற்கு அனைவரும் கட்டுப்படும் குடியரசு உருவானது. அடுத்து அந்த சட்டத்தின் அடிப்படையில் ஆட்சி செய்ய மக்கள் அவர்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முறை உருவானது.
அரசியல் கட்சிகளும், கருத்தியலும் Erode and Delhi Election Victory
அப்படி அவர்கள் தேர்ந்தெடுப்பவர்கள் அரசமைக்க வேண்டுமென்றால் அந்த பிரதிநிதிகள் ஏற்கனவே ஒரு கட்சியினை சார்ந்தவர்களாக இருந்தால்தான் சாத்தியம். அதனால் மக்களையும் அரசையும் இணைக்கும் குடிமைச் சமூக அமைப்புகளாக அரசியல் கட்சிகள் தோன்றின. அவை தேர்தல்களில் ஒன்றோடொன்று போட்டியிட்டு அரசமைக்கும் முறை தோன்றியது. Erode and Delhi Election Victory
அரசியல் கட்சிகள் எல்லாமே ஏற்றத்தாழ்வு மிக்க சமூகத்தில் சம உரிமை, சம வாய்ப்பு, அனைவருக்குமான வாழ்வாதாரம், அடிப்படை தேவைகளை நிறைவேற்றுதல் ஆகியவற்றை செய்து தருவதையே இலட்சியமாக க் கொள்ள வேண்டியிருந்தது. இதில் இரு வேறு பாதைகள் உருவாயின.
ஒன்று செல்வந்தர்கள் முதலீட்டாளர்களாக அதிக ஆற்றல் பெற உதவி செய்து அதன் மூலம் தொழில், வர்த்தக நடவடிக்கைகளை பெருக்கி, அனைத்து மக்களுக்கும் அந்த வளர்ச்சியின் பலன்கள் கிடைக்க வகை செய்வது. இது வலதுசாரி அரசியல். மற்றொன்று அனைத்து மக்களுக்கும் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை வழங்கி மனித வளத்தை அதிகரித்து அதன் மூலம் உற்பத்தியைப் பெருக்கி நல்வாழ்வை உறுதிசெய்வது. இது இடது சாரி வழி எனலாம். இந்த இரண்டு வழிகளுமே அனைத்து மக்கள் என்ற சமூக முழுமையை முன்வைக்காமல் இருக்க முடியாது.
பணக்காரர்களுக்கு இசைவான மரபுவாதம், சாமானியர்களுக்கு ஆதரவான புரட்சி வாதம், இரண்டையும் சமன் செய்யும் சுதந்திரவாதம் என அரசியல் சித்தாந்தங்களை வகைப்படுத்தலாம். இவற்றின் பலவிதமான கலவைகள் அரசியல் கட்சிகளை வடிவமைப்பதில் பங்குபெறுகின்றன.
பெரியதொரு மக்கள் பரப்பில் பல்வேறு கோரிக்கைகளைக் கொண்ட மக்கள் தொகுதிகளை ஒருங்கிணைக்கும்போது வெகுஜன அரசியல் கட்சிகள் சமூக முரணையும் பேசுகின்றன, சமூக முழுமையையும் பேசுகின்றன. அந்த முரணையும், முழுமையையும் எப்படி உருவகப்படுத்துகின்றன என்பதை வைத்துதான் அந்த கட்சிகளின் கருத்தியல் அமைகின்றது.
பிறப்படையாளம், மத, ஜாதி அடையாளத்தை வைத்து முரண்களை அமைக்கும் கட்சி சமூகத்தில் பிளவினையும் வன்முறையையும் வளர்க்குமே தவிர, நலவாழ்வை வளர்க்காது. மாறாக கருத்தியல் முரண்களை உருவகப்படுத்தி, சமூக முழுமையையும் உறுதி செய்யும் கட்சி முற்போக்கு வெகுஜனவிய கட்சியாகப் பரிணமிக்கும். Erode and Delhi Election Victory

தேர்தல் களம் Erode and Delhi Election Victory
அரசியல் கட்சிகள் சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடமிருந்து வரும் உறுப்பினர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டாலும், மக்கள் பரப்பில் பெரும்பாலோர் கட்சிகளில் சேர்வதில்லை. மேலும் ஒரு நவீன அரசின் கொள்கை முடிவுகள், ஆட்சியின் திறமை, அரசின் திட்டங்கள், வரவு செலவு கணக்குகள் ஆகியவற்றையெல்லாம் தொடர்ந்து கவனித்து பரிசீலிக்கும் ஆற்றல் பெரும்பாலான எளிய மக்களுக்கு இருப்பதில்லை. படித்தவர்கள், வசதி வாய்ப்பு இருப்பவர்கள் கூட அரசின் கொள்கைகள், திட்டங்களை விரிவாக படித்து அறிந்து கொள்வதில்லை. அதற்கான அவகாசம் அவர்களுக்கும் இருப்பதில்லை.
இதனால் ஒவ்வொரு வாக்காளரும் எந்த அடிப்படையில் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்கிறார் என்பதைக் கூறுவது கடினம். வாக்களிப்பது தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரம் என்பதை மக்கள் புரிந்துகொண்டாலும், எதன் அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள் என்பதில் பல்வேறு காரணிகள் செயல்படுகின்றன.
ஒரு மக்கள் தொகுதியின் நலன் என்பது ஒன்றுபட்டதாக இருப்பதில்லை. உதாரணமாக ஒரு ஜாதியைச் சேர்தவர்கள் அனைவருக்கும் பொது நலன் இருப்பதாகக் கருத முடியாது. அந்த ஜாதிக்குள்ளேயே பொருளாதார வேற்றுமை இருக்கும். பலவகை உள்முரண்கள், உட்பகை, உட்பிரிவுகள் எல்லாம் இருக்கும். ஏன் ஒரு குடும்பத்திலேயே அண்ணன் ஒரு கட்சி, தம்பி ஒரு கட்சி என்று இருப்பார்கள். ஒரே குடும்பத்தினர் வெவ்வேறு கட்சிகளுக்கு வாக்களிப்பார்கள்.
சுருங்கச் சொன்னால் தேர்தல் களம் என்பது பல்வேறுபட்ட முரண்கள், எதிரிகளும், நண்பர்களுமாக மக்கள் பிரிந்து மோதிக்கொள்ளும் களமாக மாறுகிறது. இதில் கட்சிகள், கருத்தியல், ஆட்சியின் பலாபலன் கள் எல்லாம் இருந்தாலும் எந்த நேரத்தில் எந்தெந்த காரணிகள் முதன்மை பெறுகின்றன என்று கூறமுடியாது.
ஊடகங்களில் ஒரு சிலர் ஜாதிகள் அடிப்படையிலேயே தேர்தல் வெற்றி தோல்விகள் அமைவதாகக் கூறுவதைப் பார்க்கலாம். சற்று பொறுமையாகப் பரிசீலித்தால் அது உண்மைக்கு மாறானது என்பதை சுலபத்தில் புரிந்துகொள்ளலாம். ஜாதி அடையாளம் ஓரளவு அணிசேர்க்கைக்கு, வாக்காளரை கவர உதவலாம். அதனை மிகைப்படுத்துவது அரசியலை புரிந்துகொள்ள உதவாது. அதேபோல, மற்றொரு விமர்சகர் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதுதான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது என்பார். அதுவும் மிகையான கூற்றுதான். பணம் கொடுத்தால் மட்டும் வென்றுவிட முடியாது.

ஈரோடு காட்டும் பாதை Erode and Delhi Election Victory
இந்திய குடியரசு தோன்றியபோதே தோன்றிய தி.மு.க வெகுஜன அரசியல் அணிசேர்க்கையில் மிகச் சிறந்த சாதனையைப் படைத்தது. “ஆரிய பண்பாடு – இந்தி மொழி ஆதிக்கம்” x “திராவிட பண்பாட்டு மீட்சி – தமிழ் மொழி காத்தல்” என்ற கருத்தியல் முரண்பாட்டினையும், “பார்ப்பனர்கள் சமூக மேலாதிக்கம் x பார்ப்பனரல்லாதோர் முன்னேற்றம்” ஆகிய சமூக முரணையும் மையமாகக் கொண்டு அணிதிரட்டிய கட்சி, தமிழ்நாட்டு நலன், தமிழர் நலன் என்ற சமூக முழுமையையும் உருவகித்தது. இதன் மூலம் ஜாதி, மத, இன அடையாளங்கள் கடந்த, வெறுப்பரசியல் தவிர்த்த முற்போக்கு வெகுஜன அரசியலை சாதித்தது. அதன் அரசியல் வெற்றி என்பது “திராவிட-தமிழர்” என்ற தன்னுணர்வு கொண்ட மக்கள் சமூகத்தை உருவாக்கிக் காட்டியதுதான்.
தி.மு.க-விலிருந்து பிரிந்த அகில இந்திய அண்ணா தி.மு.க, அந்த “திராவிட-தமிழர்” சமூக முழுமைக்குள் அகில இந்திய சார்பு, மரபுவாத நோக்கு ஆகிய காரணிகளை தன் அரசியலில் அதிகரித்து தன்னை தி.மு.க-விற்கு தேர்தல் கள மாற்றாக நிறுவிக்கொண்டது. இதன் மூலம் தமிழ்நாட்டு தேர்தல் கள முரணரசியலை இருதுருவ அரசியலாக வடிவமைத்தது. அ.இ.அ.தி.மு.க என்றால் தி.மு.க-வின் தேர்தல் கள எதிரி. Erode and Delhi Election Victory
அதன் பின் பல்வேறு சமூகப் பிரிவுகளிலிருந்து எத்தனை கட்சிகள் தோன்றினாலும் இந்த இரண்டு கட்சிகளுடன் அணிசேர்ந்துதான் தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற நிலை தமிழ்நாட்டில் உருவானது. இதன் விளைவாக மக்கள் நல திட்டங்களை முன்னெடுப்பதில் போட்டியிட நேர்ந்தது. இந்த ஆரோக்கியமான போட்டி தமிழ்நாட்டில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை சாதித்திருப்பதை பொருளாதார அறிஞர்கள் பாராட்டுகிறார்கள்.
அத்தகைய “திராவிட-தமிழர்” என்ற மக்கள் தன்னுணர்வை சிதைக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி விரும்புகிறது. தமிழ் மொழி, தமிழர் அடையாளம் என்பதை அது பிரச்சினையாக பார்ப்பதில்லை. காரணம் தமிழ் மொழியிலும் ஆரியப் பண்பாடு பல நூறு ஆண்டுகளாகக் கலந்திருப்பதுதான். அந்த ஆரியக் கூறுகளை விலக்கும் திராவிட பண்பாட்டு மீட்பினை அது எப்படியாவது சிதைக்க விரும்புகிறது.
அந்த நோக்கத்திற்கு அது பயன்படுத்தும் கருவிதான் “நாம் தமிழர்” கட்சி. தமிழர் என்பதை ஒரு மரபணு அடையாளமாகச் சுருக்கி விட்டால், ஆரிய -திராவிட பண்பாட்டு முரணை மழுங்கடித்து விடலாம், திராவிட-தமிழர் தன்னுணர்வு பெற்ற மக்கள் தொகுதியை பிளவு படுத்திவிடலாம் என்ற நோக்குடன் தீவிர பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சி இறக்கி விடப்பட்டுள்ளது. ஈரோடு இடைத்தேர்தல் ஒரு முக்கிய பரிசோதனைக் களமாக மாறியது.
அது என்னவென்றால், தி.மு.க-விற்கு எதிராக அ.இ.அ.தி.மு.க, பாஜக உள்ளிட்ட எந்த கட்சியும், அவற்றின் கூட்டணி கட்சிகளும் நிற்காத நிலையில் நாம் தமிழர் கட்சி மட்டுமே அங்கே தி.மு.க-வை எதிர்த்து நிற்கும் சூழல் உருவானது. அப்போது தி.மு.க-வின் தேர்தல் கள எதிரியான அ.இ.அ.தி.மு.க ஈர்க்கக் கூடிய வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு செல்லுமா என்பது கேள்வி. அப்படி சென்றால் “திராவிட-தமிழர்” என்ற தன்னுணர்வு பெற்ற மக்கள் தொகுதியை சிதைத்து விடலாம் என்பதே நம்பிக்கை. நாம் தமிழர் கட்சியும் திராவிடவிய கருத்தியல் பிதாமகர் பெரியாரையும், திராவிடவிய கருத்தியலையும் தொடர்ந்து கடுமையாகத் தாக்கியது. Erode and Delhi Election Victory
ஆனால் நடந்தது என்னவென்றால், “திராவிட-தமிழர்” என்ற மக்கள் பரப்பிற்கு வெளியே “தி.மு.க -அ.இ.அ.தி.மு.க” வாக்குகள் செல்லாது என்பது மீண்டும் நிரூபணமாகிவிட்டது. நாம் தமிழர் கட்சி ஏற்கனவே பெற்ற வாக்குகளும். பாஜக பெற்ற வாக்குகளும்தான் அதற்குக் கிடைத்திருக்கின்றதே தவிர, அ.இ.அ.தி.மு.க வாக்குகள் கிடைக்கவில்லை. விக்கிரவாண்டி தேர்தல் காட்டிய இந்த அரசியல் சமன்பாடு, ஈரோடு கிழக்கு தொகுதியிலும் மீண்டும் நிகழ்ந்துள்ளது. இவ்வாறு மாநில அளவில் தன்னுணர்வு கொண்ட மக்கள் தொகுதியை கட்டமைப்பதே இந்தியாவின் பன்மைத்துவத்தை, கூட்டாட்சி அதிகாரப் பரவலை நிலைநிறுத்துவதற்கான ஒரே வழி.

டில்லி காட்டும் அபாய அறிவிப்புப் பலகை
டில்லி முழுமையான மாநில அந்தஸ்த்தினை பெறாவிட்டாலும், இரண்டு கோடி மக்கள் என்ற பெரும் மக்கள் பரப்பு ஒரு மாநில அடையாளத்தைக் கோரி நிற்கிறது. காங்கிரஸ், பாஜக ஆகிய தேசிய கட்சிகளே அங்கே ஆட்சி செய்திருந்த நிலையில், ஆம் ஆத்மி என்ற கட்சி உருவானது அந்த மாநில அடையாளத்திற்கு வலுச் சேர்ப்பதாக இருந்தது.
ஆம் ஆத்மி கட்சியும் அதன் பெயருக்கு ஏற்றபடி சாமானியர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் கணிசமான சாதனைகளைச் செய்தது. முதலில் 2015-ஆம் ஆண்டு மாநில தேர்தலில் பெருவெற்றி பெற்ற அந்த கட்சி அதன் ஆட்சியில் செய்த நலத்திட்டங்களால் மக்களிடையே செல்வாக்கு பெருகி, 2020-ஆம் ஆண்டு மீண்டும் பாஜக-வினை முழுமையாகத் தோற்கடித்தது.
அதன் பின் நடந்த மூன்று நிகழ்வுகள் அந்த வெற்றியின் ஈட்டினை இன்று தகர்த்துள்ளது. ஒன்று, ஆம் ஆத்மி மக்களின் மாநில தன்னுணர்வினை வலுப்படுத்துவதற்குப் பதிலாக அகில இந்திய கட்சியாக தன்னை மாற்றிக் கொள்வதில் முனைப்புக் காட்டியது.
இரண்டு, ஒன்றிய அரசு தன் அதிகாரத்தை வரைமுறையின்றி பயன்படுத்தி மாநில நிர்வாகத்தை சீர்குலைத்தது. ஆம் ஆத்மி அரசை இயங்கவிடாமல் ஏகப்பட்ட சிக்கல்களை ஏற்படுத்தியது. அதன் பின், ஒன்றியத்திலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆண்டால்தான் டபுள் எஞ்சின் சர்க்கார் நடக்கும்; அதுதான் மாநிலத்திற்கு நல்லது என்று கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகக் கடுமையாகப் பிரசாரம் செய்தது. Erode and Delhi Election Victory

மூன்றாவதாக, ஒன்றிய அரசு முறையற்ற பணப்பரிமாற்ற தடுப்பு சட்டம் (Prevention of Money Laundering Act) என்ற கறுப்புச் சட்ட த்தை பயன்படுத்தி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட பல அமைச்சர்களை கைது செய்து பிணை வழங்காமல் சிறையில் வைத்தது. குற்றம் சாட்டப்பட்ட பரிவர்த்தனைகள் நடந்து பல ஆண்டுகள் ஆனபின்னும் அவற்றை தக்க ஆதாரங்கள் மூலம் நிரூபிக்காமல், விசாரணைக் கைதிகளாகவே பல மாதங்கள் வைத்திருந்து உச்ச நீதிமன்றத்தால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனால் மக்கள் மத்தியில் ஆம் ஆத்மி தலைவர்களின் பிம்பங்களை கறைபடிந்ததாகக் காட்டுவதில் வெற்றி பெற்றுவிட்டது.
இந்திய மக்களாட்சி அரசியலில் ஒன்றிய அரசு தன் அதிகாரத்தை இவ்வாறு பயன்படுத்தி மாநில கட்சிகளை ஒடுக்குவது என்பது மிக அபாயகரமான போக்காகும். இதனை அனைத்து கட்சிகளும், குடிமைச் சமூக அமைப்புகளும் தொடர்ந்து கண்டிக்க வேண்டும். குற்றத்தை நிரூபித்து தண்டிப்பதை யாரும் எதிர்க்கப் போவதில்லை. ஆனால் வெறும் குற்றச்சாட்டை மட்டும் வைத்து பிணையின்றி சிறையில் அடைத்து அரசியல் எதிரிகளை முடக்குவது அப்பட்டமான அநீதி.
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com