பலத்த போராட்டங்களுக்குப் பிறகு இன்று (மார்ச் 28) அதிமுகவின் பொதுச் செயலாளராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், மீண்டும் உயர் நீதிமன்றம் என்று கடுமையான சட்டப் போராட்டத்துக்குப் பின் அதிமுகவின் பொதுச் செயலாளர் தேர்தல் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கட்சியின் 8ஆவது பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவின் பொதுச் செயலாளர் தேர்தல் கடந்த மார்ச் 17ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், மார்ச் 18, 19 தேதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. அந்த தேதிகளில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே பொதுச் செயலாளர் பதவிக்காக வேட்பு மனு தாக்கல் செய்தார். எடப்பாடி பெயரில் பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
சென்னை உயர் நீதிமன்றம் சென்ற பன்னீர் தரப்பினர், ‘உச்ச நீதிமன்ற அறிவுரைப்படி பொதுக்குழுத் தீர்மானங்களுக்கு எதிராக நாங்கள் வழக்குத் தொடுத்திருக்கும் நிலையில், தேர்தலை நடத்தக் கூடாது’ என்று வாதிட்டனர். பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான வழக்கு, பொதுச் செயலாளர் தேர்தல் வழக்கு ஆகியவற்றை ஒருசேர விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு மார்ச் 28 ஆம் தேதி தீர்ப்பளித்தார்.

“ஜூலை 11, 2022 பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும். பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம்’ என்று தீர்ப்பளித்தார் நீதிபதி.
இதையடுத்து அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி கட்சித் தலைமையகத்தில் முறைப்படி அறிவிக்கப்பட்டார். அதேநேரம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்திருக்கிறார்கள். அது நாளை விசாரணைக்கு வருகிறது.
ஒற்றைத் தலைமை -பொறி தொடங்கியது எப்போது?
2016 இல் ஜெயலலிதா மறைவு, பன்னீர் தர்மயுத்தம், சசிகலா கைது ஆகிய பரபரப்பான சூழலில் அதிமுக அரசின் முதலமைச்சராக பொறுப்பேற்றார் எடப்பாடி. பின்னர் துணைப் பொதுச் செயலாளராக இருந்த டிடிவி தினகரன் இரட்டை இலை வழக்கில் சிறை சென்றார். 2017 ஆகஸ்டு மாதம் சசிகலா, டிடிவி ஆகியோரை அதிமுகவில் இருந்து அகற்றி எடப்பாடி பழனிசாமி-பன்னீரை ஒன்று சேர்த்தது பாஜக.

அதன்பின் பொதுக்குழு கூட்டப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதே செட்டப் அதிமுக ஆட்சி முழுதும் நீடித்தது. உள்ளுக்குள் இருவருக்கும் சலசலப்புகள் இருந்தாலும் அதிகாரத்தில் இருந்ததால் வெடித்துக் கிளம்ப வாய்ப்பில்லாமல் இருந்தது. தேர்தலுக்கு முன் முதல்வர் வேட்பாளர் பிரச்சினையில் எடப்பாடிக்கு எதிராக பன்னீர் இருந்தார். ஆனாலும் சமரசப் பேச்சுக்குப் பின் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக பன்னீரே அறிவித்தார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியுற்றது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் மேற்கு மாவட்டங்களில் அதிமுக வலுவாக வெற்றிபெற்றது. ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தின் தென் மாவட்டத்தில் அதிமுக பெரிய வெற்றியைப் பெறவில்லை. அப்போதே ஓபிஎஸ் மீதான கசப்பு மெல்ல மெல்ல எடப்பாடி ஆதரவாளர்களால் வெளிப்படுத்தப்பட்டது. அதன் பின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றம் கூடுவதற்கு ஒரு நாள் முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டார் எடப்பாடி. துணைத் தலைவரானார் ஓபிஎஸ்.
இந்த நிலையில்… 2021 டிசம்பர் மாதம் அதிமுகவின் உட்கட்சித் தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
திருப்பம் தந்த ராஜ்யசபா
2022 ஜூன் மாதம் நடந்த ராஜ்யசபா தேர்தலில் அதிமுகவுக்கு இரு எம்பிக்கள் தேர்ந்தெடுக்கும் பலம் இருந்தது. இந்த இரண்டு பேரில் ஒருவரை தனது ஆதரவாளருக்கு வழங்கவேண்டும் என்று பன்னீர் கேட்டார். ஆனால் அதற்கு எடப்பாடி மறுத்தார். ‘கட்சிக்குள் செலவு செய்வதில் இருந்து உழைப்பது வரை எல்லாம் எடப்பாடியாக இருக்கும்போது ராஜ்யசபா இரண்டு இடங்களையும் அவரே தீர்மானிக்க வேண்டும்’ என்று எடப்பாடி ஆதரவாளர்கள் வற்புறுத்தினர். இதில் ஓ.பன்னீர்செல்வம் முரண்பட்டார். இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. பல்வேறு கட்ட சமரச முயற்சிகளுக்குப் பின்னரும், ஓபிஎஸ் உடன்படவில்லை. அதன் பின் ராமநாதபுரம் முன்னாள் மாசெவும், முதுகுளத்தூர் ஒன்றிய தலைவருமான ராமரை தனது கோட்டாவில் எம்பி ஆக்கினார் ஓபிஎஸ். எடப்பாடி தரப்பில் சி.வி.சண்முகம் ராஜ்யசபா சென்றார்.
இந்த ராஜ்யசபா வேட்பாளர் தேர்வின்போது நடந்த மோதலின்போதே எடப்பாடியும் அவரது ஆதரவாளர்களும், ‘இரட்டை தலைமை என்று இருந்தால் இப்படித்தான் எந்த ஓர் முடிவும் உறுதியாக எடுக்க முடியாது. எனவே ஒற்றைத் தலைமைதான் வேண்டும்’ என்ற முடிவுக்கு வந்தனர். அதையடுத்து அதை நோக்கி காய்கள் நகர்த்தினர்.

பொதுக்குழுவுக்கு முன்னோட்டமான மா.செ.க்கள் கூட்டம்!
இதன் பின் 2022 ஜூன் 23 பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகள் நடந்தன. அப்போது அதுபற்றி விவாதிக்க ஜூன் 14 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில்தான் முதல் முறையாக, ஒற்றைத் தலைமை பற்றிய கோரிக்கை குரல் அதிகாரபூர்வமாக எழுந்தது. அந்த கூட்டத்தில் இருந்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அவசர அவசரமாக எழுந்து வெளியே சென்றார்.
கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை பற்றிய கோரிக்கை எழுந்ததாகவும், பெரும்பான்மையோர் ஒற்றைத் தலைமை கோரிக்கை வைத்ததாகவும் தெரிவித்தார்.
2022 ஜூன் 14 ஆம் தேதிதான் அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கான பொறி பகிரங்கமாக பரவத் தொடங்கிய நாள்.
பன்னீர் பரபரப்பு ஆலோசனை – பேட்டி!
ஜெயக்குமார் இவ்வாறு அறிவித்ததும் ஒற்றைத் தலைமை எடப்பாடிதான் என்று அவரது ஆதரவாளர்கள் பலரும் வெளிப்படையாக கோரிக்கைக் குரல்களை எழுப்பினார்.
இதனால் பன்னீர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
மூன்று நாட்கள் பரபரப்பு ஆலோசனைக்குப் பிறகு ஜூன் 16 ஆம் தேதி இரவு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், “ஜெயலலிதா மறைவுக்கு பின்னால் நானும், எடப்பாடி பழனிசாமியும் இணையும்போது, ‘பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரித்தானது. அவருக்கு மிகப்பெரிய அந்தஸ்து தர வேண்டும். அவருக்கு பிறகு யாரும் இருக்கக் கூடாது. நிரந்தர பொதுச்செயலாளர் என்று வாய்நிறைய அழைத்த அந்த பதவியை யாருக்கும் தரக் கூடாது’ என்று சிந்தாந்தத்தின் அடிப்படையில் இரட்டை தலைமை உருவாக்கப்பட்டது.
இந்த ஆறு ஆண்டுக் காலம் இருவருமே இணைந்து பணியாற்றினோம். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், நான் துணை முதலமைச்சராகவும் பணியாற்றினேன். துணை முதலமைச்சர் பதவிக்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எந்த பிரத்யேக அதிகாரமும் இல்லை. ஆனாலும் கட்சி நலனுக்காக அதை ஏற்றுக்கொண்டேன். பிரதமர் நரேந்திர மோடி என்னை அழைத்து கேட்டுக்கொண்டதால் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டேன். நல்லாதான் போய்க்கிட்டு இருந்துச்சு… இந்த ஒற்றை தலைமை விவகாரம் எப்படி உருவாக்கப்பட்டது என்பது எனக்கே தெரியவில்லை. இது கனவா, நனவா என்பது தெரியவில்லை. என்னிடம் கலந்து பேசவில்லை.
பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு இடமில்லை என்று சொல்லப்பட்டது. அதை விளக்குவதற்காகத்தான் அன்று அ.தி.மு.க. கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டம் நன்றியுரையோடு முடிகின்ற நேரத்தில் சிலர் கருத்து சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி, மூர்த்தி என்பவரை பேச அழைத்தார். அவர்தான் ஒற்றை தலைமை வேண்டும் என்று ஆரம்பித்தார். இந்த நிகழ்ச்சி நிரல் குறித்து ஒருங்கிணைப்பாளராக என்னிடம் கலந்து பேசவில்லை. தலைமைக் கழக நிர்வாகிகளாக நாங்கள் இருக்கிறோம். எங்களிடமும் கலந்து பேசவில்லை.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வெளிப்படையாகப் பேசியிருந்தாலும், வெளியில் யாரிடமும் பேட்டியாகச் சொல்ல வேண்டாம் என்று சொல்லியிருந்தும், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியில் போய் சொன்னதால், இந்த விஷயம் மிகப்பெரிய பூதாகரமான செய்தியாக வெளியில் சென்று கொண்டிருக்கிறது. நன்றாக ஆறு ஆண்டுக் காலம் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கட்சியை வழிநடத்தி சென்று கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் ஒற்றை தலைமை என்ற ஒரு கருத்தை சொல்லி கொண்டு இருக்கிறார்கள். இது தேவைதானா என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.” என்றார்.

பொதுக்குழுவுக்கு எதிராக பன்னீர்
அதுமட்டுமல்ல ஜூன் 23 ஆம் தேதி பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டுவரப்பட்டு, எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்ற நிலையில், அந்த பொதுக்குழு கூட்டம் நடத்தப்படக் கூடாது என்று கோரிக்கை வைத்தார். பன்னீர் தரப்பினரும், எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் பகிரங்கமாக வார்த்தைப் போர் நடத்தினார்கள்.
உச்சகட்டமாக ஜூன் 23 பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும், ‘ஏற்கனவே ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் பெறப்பட்ட தீர்மானங்கள் தவிர வேறு தீர்மானங்கள் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளது’ என்று பன்னீர் தரப்பு வழக்கு தொடுத்தது. கடைசி நேரத்தில் பொதுக்குழு கூடலாம் என்று நீதிமன்றம் முதல் நாள் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து நள்ளிரவில் பன்னீர் செய்த மேல் முறையீட்டில், ‘ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களை தவிர வேறு எதுவும் தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது’ என்று உத்தரவிடப்பட்டது.
பொதுக்குழு கூட்டத்துக்கு முன்பே பன்னீரை எதிர்த்து அதிமுகவில் வெளிப்படையான குரல்கள் வெடித்தன.

பன்னீரும் பழனிசாமியும் ஒன்றாய் அமர்ந்த கடைசி மேடை!
அந்த பொதுக்குழுவில் பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அருகருகே அமர்ந்தும் பேசிக் கொள்ளவில்லை. திடீரென மைக் பிடித்த சி.வி. சண்முகம் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுகிறது, நிராகரிக்கப்படுகிறது, நிராகரிக்கப்படுகிறது என்று மூன்று முறை அறிவித்தார்.
மேலும் சி.வி. சண்முகம், “ இன்று (ஜூன் 23) நடைபெறும் பொதுக்குழுவில், 2190 பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்திட்டுக் கொடுக்கப்பட்டுள்ள கோரிக்கையைக் கொடுக்கிறோம்.
‘இரட்டைத் தலைமையால் கழகத்துக்கு ஏற்பட்டுள்ள நிர்வாக சிக்கலால் திமுக அரசை எதிர்த்து கடுமையாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரட்டைத் தலைமையின் முரண்பாடான தெளிவில்லாத ஒருங்கிணைப்பில்லாத செயல்பாடுகளால் தொண்டர்களிடையே சோர்வு ஏற்பட்டுள்ளது. அம்மாவின் நூறாண்டு காலம் கழகம் ஆள வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற வேண்டுமென்றால் தைரியமான ஒற்றைத் தலைமை வேண்டும். எனவே இப்பொதுக்குழு இரட்டைத் தலைமையை ரத்து செய்துவிட்டு ஒற்றைத் தலைமையின் கீழ் தொண்டாற்றுவது குறித்து விவாதித்து பதிவு செய்ய வேண்டும் என்றும் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்” என்று வாசித்து சி.வி. சண்முகம் கோரிக்கை மனுவை கொடுத்தார்.
இதையடுத்து பேசிய அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், “ஒற்றைத் தலைமை குறித்து அடுத்த பொதுக்குழு கூடி விவாதிக்கும். அடுத்த பொதுக்குழு வரும் ஜூலை 11 ஆம் தேதி சிறப்பாக நடைபெறும்” என்று அறிவித்தார்.

அதுவரை பொறுமை காத்த ஓ.பன்னீர் எழுந்தார். அவருடன் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மைக்கைப் பிடித்து, ‘இது சட்ட விரோத பொதுக்குழு’ என்று முழக்கமிட்டு விட்டு ஓபிஎஸ் சுடன் வெளியேறினார். இதனால் பொதுக்குழு சலசலப்போடு முடிந்தது. அந்த மேடைதான் எடப்பாடியும், பன்னீரும் பகிர்ந்துகொண்ட கடைசி மேடை!
ஜூலை 11 பொதுக்குழு முதல்- மார்ச் 28 தீர்ப்பு வரை
அதன் பின் பல்வேறு சட்டப் போராட்டங்களைத் தாண்டி ஜூலை 11இல் பொதுக்குழு கூடியது. பன்னீர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். எடப்பாடி இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பொதுச் செயலாளர் தேர்தல் 4 மாதங்களுக்குள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
ஜூலை 11 பொதுக் குழுவை எதிர்த்து உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று சட்டப் போராட்டத்தை இரு தரப்பும் தொடர்ந்தன. கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி உச்ச நீதிமன்றம், ‘ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும். ஆனால் அந்த தீர்மானங்களை நாங்கள் ஆராயவில்லை. அந்தத் தீர்மானங்களால் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கருதினால் உரியவர்கள் உரிய நீதிமன்றத்தை நாடலாம்’ என்று குறிப்பிட்டிருந்தது.
இது பன்னீர் தரப்புக்கு சாதகமானது. உடனே சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்குத் தொடுத்தனர் பன்னீர் தரப்பினர், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது எடப்பாடி தரப்பினர் பதில் அளிக்க அவகாசம் அளித்து ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் மார்ச் 17 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதை எதிர்த்தும் பன்னீர் தரப்பு வழக்குத் தொடுத்தது. தீர்மானங்கள் செல்லாது, என்றும் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்குகளை ஒன்றாக விசாரித்து மார்ச் 28 ஆம் தேதி தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு,
‘ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும். பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிடலாம். தீர்மானங்களை செல்லாது என்றும் தேர்தலுக்கு தடை என்றும் கூறினால் ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட கட்சி ஸ்தம்பித்துவிடும்’ என்று தீர்ப்பளித்தார். இதையடுத்து பொதுச் செயலாளராக முறைப்படி எடப்பாடி தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்ற பெஞ்ச்சில் அப்பீல் செய்துள்ளார் பன்னீர்.

அப்பீல் பன்னீர்… அப்பால் எடப்பாடி
தொடக்கத்தில் இருந்தே தன்னை முன்னிறுத்திக் கொள்வதில் முனைப்பு காட்டி வருகிறார் எடப்பாடி. அதற்கேற்ப தனது செயல்பாடுகளையும் வகுத்து வருகிறார். கட்சியினரிடத்திலும் மக்களிடத்திலும் எடப்பாடி நெருங்கிய தொடர்பில் இருக்கிறார். ஆனால் ஓ.பன்னீர் சட்டத்தின் சந்து பொந்துகள், அதிமுகவுக்கு வெளியே உள்ளவர்களின் தலையீடு என்று வேறு வேறு திசைகளில் பயணித்தார்.
சட்டப்படியும் கட்சியின் கட்டமைப்பான நிர்வாகிகளின் ஆதரவின்படியும் எடப்பாடி பொதுச் செயலாளராகிவிட்டார்.
பன்னீரோ மீண்டும் அப்பீல் செல்கிறார். ஆனால் பன்னீர் நெருங்க முடியாத அளவுக்கு அவரைத் தாண்டி அப்பால் சென்றுகொண்டிருக்கிறார் எடப்பாடி.
–ஆரா
ராகுலுக்கு எதிராக திரும்பும் கூட்டணிக் கட்சி தலைவர்கள்!
கருப்பு கூலிங் க்ளாஸ்…தொப்பி…எம்.ஜி.ஆராக மாறிய எடப்பாடி