வைஃபை ஆன் செய்ததும் அதிமுக அவசர செயற்குழு கூட்டத்தின் புகைப்படங்கள், தீர்மான நகல்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. அவற்றை பார்த்துக்கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது. EPS VS OPS ADMK MEETING LIVE
ஆகஸ்ட் 16ஆம் தேதி காலை அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவை ஒருங்கிணைப்பது பற்றிய விவாதங்களும் சலசலப்புகளும் எழும் என்று பல்வேறு யூகங்கள் எழுந்தன. ஆனால் மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் தொடர்ந்து அதிமுகவின் நிர்வாக ரீதியான விஷயங்கள் பற்றியே விவாதிக்கப்படும் என்று செய்தி வெளியிடப்பட்டது.
அதன்படியே அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டத்தில் கட்சியின் செயல் திட்டங்கள் பற்றியும் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியின் யூகத்தின் படி செயல்பட்டு வெற்றி பெறுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
செயற்குழு கூட்டத்துக்கு சில நாட்களுக்கு முன்பே பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுக தலைமைக் கழக செயலாளர் எஸ். பி. வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளோடு தனிப்பட்ட தொடர்பில் இருந்து வந்தனர். அவர்களிடம் இப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையை ஏற்றுக்கொண்டு எவ்வித நிபந்தனையும் இன்றி ஓபிஎஸ் வருவதாக இருந்தால் அது பற்றி பரிசீலிக்கலாம், வேறு எந்த நிபந்தனை விதித்தாலும் அதற்கு இங்கு இடம் இல்லை என்று தெளிவுபடுத்தி இருந்தார் வேலுமணி.
இந்த சூழலில் செயற்குழு கூட்டத்துக்கு முதல் நாளான ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவு மீண்டும் ஓபிஎஸ் தரப்பில் இருந்து வேலுமணியை தொடர்பு கொள்ள முயற்சித்து இருக்கிறார்கள் ஆனால் வேலுமணியிடம் இருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. இதையடுத்து வேலுமணியை சுற்றி உள்ளவர்கள், எடப்பாடியை சுற்றி உள்ளவர்கள் ஆகியோரிடம் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். ’எவ்வித நிபந்தனையும் விதிக்காமல் இணைவது பற்றி ஓபிஎஸ் பற்றி யோசித்து வருகிறார். அவசர செயற்குழுவில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம்’ என்று அவர்கள் தரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.
இந்தத் தகவல் வேலுமணி மூலம் நேற்று இரவே எடப்பாடிக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்துதான் ஓபிஎஸ் பற்றியெல்லாம் பேசவே கூடாது என்றிருந்த நிர்வாகிகள், அவரை அவசர செயற்குழுக் கூட்டத்தில் துவைத்தெடுத்தனர்.
அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, ‘இங்கே வந்திருக்கிற அத்தனை பேரும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுக் கொண்டதால்தான் வந்திருக்கிறோம். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆறு பேர் அண்ணன் வீட்டில் சென்று பேசினார்கள் என்று கதை கட்டிவிட்டார்கள். அந்த ஆறு பேரும் இங்கேதான் இருக்கிறார்கள். அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்’ என்றார்.
துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பேசும்போது, ‘எம்.ஜி.ஆர். காலத்தில் சட்டம், கல்வி, போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் நமது அண்ணன் பொன்னையன். அவர் அம்மா ஆட்சியிலும் அமைச்சராக இருந்தவர். அவர் எடப்பாடியாரின் தலைமையை ஏற்றுள்ளார்.
எம்ஜிஆர் ஆட்சியில் எம்.எல்.ஏ.வாக இருந்து அம்மா ஆட்சியில் அமைச்சராக இருந்த செங்கோட்டையன் நமது எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுள்ளார். இவர்களை விடவா சீனியர் (ஓபிஎஸ்) அவர்?
அவரு யாரு தெரியுமா? தினகரன் உட்கார்ந்தால் பக்கத்தில் உட்கார மாட்டார். அவரெல்லாம் சீனியரா? அவரெல்லாம் தேவையே இல்லை” என்று ஓபிஎசை கடுமையாக தாக்கினார்.
எஸ்.பி.வேலுமணி தன் பேச்சில் பத்து முறை ‘எடப்பாடியாரை முதலமைச்சராக்குவோம்’ என்று குறிப்பிட்டார்.
நிறைவாக பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றிய செயலாளர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யுங்கள். கணிசமான மாவட்டங்களில் ஒன்றிய செயலாளர்கள் மீது புகார் வருகிறது. மாவட்டச் செயலாளர்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.
தொலைக்காட்சிகளில் நமக்காக பேசுபவர்களை சில மாசெக்கள் அவமதிப்பதாக கேள்விப்படுகிறேன். அதுபோல செய்யாதீர்கள். . இக்கட்டான சூழலில் ஊடகங்களில் அவர்கள்தான் நமக்காக வாதிடுகிறார்கள். அவர்களை நாம் தான் ஊக்கப்படுத்த வேண்டும்.
எடப்பாடி பத்து தோல்வி கண்டவர் என விமர்சனம் பண்றாங்க… அவர்களின் மூக்கை உடைக்கணும். அதுக்கு நாம் 2026 இல் பெரும் வெற்றியை பெற வேண்டும். கூட்டணி பற்றிய நல்ல முடிவை எடுப்போம். 2026 இல் வெற்றி பெறுவதற்காக உங்கள் மாவட்டங்களில் மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடுங்கள். பிரசாந்த் கிஷோர் மாதிரி நாமளும் சிலரை அணுகியிருக்கோம். சிறப்பான தேர்தல் பணி ஒருங்கிணைப்பு செய்யப்படும். தமிழ்நாடு முழுதும் சுற்றுப் பயணம் வரவும் தயாராக இருக்கேன். கட்சியில் இளைஞர்களை அதிகம் சேர்த்து அவர்களுக்கு பதவிகளைக் கொடுங்கள்’ என்று பேசினார் எடப்பாடி பழனிசாமி.
பாஜக, பன்னீர், சசிகலா என்ற பெயர்களை கூட உச்சரிக்காமல் எடப்பாடியின் வியூகப்படி சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது என முடிவெடுத்திருக்கிறது அதிமுகவின் அவசர செயற்குழு” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தங்கலானே… தங்கலானே : அப்டேட் குமாரு
”மக்களிடம் கெட்ட பெயர்”: மேயர்கள், சேர்மன்கள், கவுன்சிலர்களை எச்சரித்த ஸ்டாலின்
EPS VS OPS ADMK MEETING LIVE