அதிமுக அலுவலகத்தில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகளை எடப்பாடி பழனிசாமி இன்று (செப்டம்பர் 26) ஆய்வு செய்து வருகிறார்.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் நடைபெற்றது. அந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் ஓபிஎஸ் பொதுக்குழுவில் பங்கேற்காமல் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்குச் சென்றார்.
அப்போது ஓபிஎஸ் அலுவலகத்திற்குள் நுழையாமல் இருக்க இபிஎஸ் ஆதரவாளர்கள் அலுவலகத்தின் நுழைவு வாயிலை அடைத்து வைத்திருந்தனர். ஆனால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் கலவரமாக மாறியதில் அதிமுக அலுவலகத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் உடைத்துச் சேதப்படுத்தப்பட்டன.
அதிமுக அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்கள் திருடு போனதாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் கொடுத்தார்.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதில், திருடப்பட்ட 113 ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அதிமுக அலுவலகத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணியைப் பார்வையிடுவதற்காக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகத்திற்கு இன்று (செப்டம்பர் 26) சென்றுள்ளார்.
அங்கு நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகளை இபிஎஸ் பார்வையிட்டு வருகிறார். அதிமுக அலுவலகத்திற்கு வருகை தந்த இபிஎஸ்-க்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோனைக் கூட்டமும் நடைபெற இருப்பதால், மாவட்ட செயலாளர்களும் வருகை தந்துள்ளனர்.
கலவரத்துக்கு பிறகு இந்த மாத தொடக்கத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமை அலுவலகத்துக்கு சென்றார். தற்போது இரண்டாவது முறையாக சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
அதிமுக அலுவலகத்தில் திருடப்பட்ட ஆவணங்கள் மீட்பு: சிபிசிஐடி!
ஆர்டர் செய்தது ட்ரோன் கேமரா… வந்தது பொம்மை கார்!