அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை: ஆளுநரிடம் மனு அளித்த எடப்பாடி பழனிசாமி
கள்ளச்சாராய மரணங்கள் குறித்து திமுக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 22) ஆளுநரிடம் மனு அளித்துள்ளார்.
மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆளுநரிடம் மனு அளிப்பதற்காக அதிமுகவினர் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று சைதாப்பேட்டையில் இருந்து ஆளுநர் மாளிகை வரை பேரணியாக சென்றனர்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்து மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஆளுநரை சந்தித்து அதிமுக சார்பில் திமுகவின் 2 ஆண்டு கால ஆட்சியில் நடைபெற்றுள்ள ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் பல்வேறு புகார்கள் குறித்து மனு அளிக்கப்பட்டுள்ளன. நாங்கள் அளித்த புகாரை ஆளுநர் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளார்கள்.
திமுக அட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுக் காலம் நிறைவடைந்து விட்டது. திராவிட மாடல் ஆட்சியில் ஊழல்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. இந்த விவரங்களை எல்லாம் ஆளுநரிடத்தில் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளோம்.
எதிர்க்கட்சி என்ற விதத்தில் தமிழகத்தில் நாள்தோறும் நிகழ்கின்ற நிகழ்வுகள் குறித்தும் மக்களுக்கு ஏற்படுகின்ற அவதிகள் குறித்தும் ஆளுநரிடத்தில் கூறியுள்ளோம்.
திமுக அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகள் என்ற தலைப்பில், எந்தெந்த துறைகளில் என்னென்ன ஊழல்கள் நடைபெற்றுள்ளது, சட்டம் ஒழுங்கு எவ்வாறு சீர்கெட்டுள்ளது மற்றும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து புகார் மனுவில் நாங்கள் தெளிவாக தெரிவித்துள்ளோம்.
குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், தூத்துகுடி மாவட்டத்தில் மணல் கொள்ளையர்களால் கிராம நிர்வாக அலுவலரை அவருடைய அலுவலகத்திற்கே சென்று படுகொலை செய்துள்ளார்கள்.
சேலம் மாவட்டத்திலும் மணல் கொள்ளையை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலரை கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள். நேர்மையாக செயல்படுகின்ற ஊழியருக்கு கூட இந்த ஆட்சியில் பாதுகாப்பு கிடையாது.
இதனைத் தொடர்ந்து கள்ளச்சாராய சாவு. மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 15 பேர், செங்கல்பட்டில் போலி மதுபானம் குடித்து 8 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். நேற்று (மே 21) தஞ்சாவூரில் குப்புசாமி மற்றும் விவேக் ஆகியோர் காலை 11 மணிக்கு மது அருந்திய சிறிது நேரத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து விட்டனர்.
மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் உயிரிழப்பு ஏற்பட்ட உடன் அரசாங்கம் எங்கெல்லாம் போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது என்று துரிதமாக செயல்பட்டு கண்டறிந்திருந்தால் மேலும் 2 உயிர்களை இழந்திருக்க மாட்டோம்.
இவ்வளவு சம்பவங்கள் நடைபெற்றும் கூட திறமையற்ற பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்காததால் தான் 2 உயிர்களை இழந்திருக்கிறோம்.
ஆனால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். எனவே உயிரிழந்த 2 பேரின் உடல்களை பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்ய வேண்டும்.
கள்ளச்சாராய மரணங்கள் ஏற்பட்ட இரண்டே நாளில் 2,000 வழக்குகள், 1,600 பேர் கைது செய்யப்படுகிறார்கள் என்றால் ஏற்கனவே கள்ளச்சாராய விற்பனை மற்றும் போலி மதுபான விற்பனை அரசுக்கும் காவல்துறைக்கும் தெரிந்திருக்கிறது” என்று பேசினார்.
மோனிஷா
பிபிசி நிறுவனத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன்!
அதிமுக பேரணியால் போக்குவரத்து நெரிசல்