அதிமுகவுக்கு இளைஞர்கள் ஆதரவு அதிகரிக்க வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி போன்ற முக்கிய நிர்வாகிகளின் வாரிசுகள் அதிமுகவில் தீவிரமாக செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை கட்சியின் தலைமை கழகத்தில் நடந்த கூட்டத்தில் எழுந்திருக்கிறது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து ஒவ்வொரு தொகுதி வாரியாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார்.
அந்த வகையில் ஜூலை 26 ஆம் தேதி திருப்பூர் தொகுதி நிர்வாகிகளோடு ஆய்வுக் கூட்டம் நடத்தினார் எடப்பாடி பழனிசாமி.
அந்த கூட்டத்தில் பேசிய அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்பி மற்றும் எம்எல்ஏவுமான திருப்பூர் சிவசாமி முக்கியமான சில கருத்துக்களை எடுத்து வைத்திருக்கிறார் அவருடைய பேச்சுக்கு அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் கைதட்டி ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
கூட்டத்தில் பேசிய திருப்பூர் சிவசாமி, “நான் டிடிவி தினகரன் கட்சியில் இருந்திருக்கிறேன். அதிலிருந்து விலகி மீண்டும் தாய்க்கழகமான அதிமுகவுக்கே வந்துவிட்டேன். அங்கே டிடிவி தினகரனை சசிகலா ஏற்றுக்கொள்ளவில்லை, சசிகலாவை டிடிவி தினகரன் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படி அவர்கள் இருவருமே ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளாத நிலையில் அதிமுக எதற்காக அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்?” என்று கேள்வி எழுப்பிய சிவசாமி தொடர்ந்து பேசும்போது…
“இப்போது கட்சியில் பல ஒன்றிய செயலாளர்கள் ஆக்டிவாக வேலை செய்யவில்லை. அவர்கள் மாவட்ட செயலாளர்களையும் தலைமையையும் ஏமாற்றி வருகிறார்கள். எனவே ஒன்றிய செயலாளர்களை ஒழுங்காக கண்காணிக்க வேண்டும் செயல்படாத ஒன்றிய செயலாளர்களை மாற்றி புதியவர்களை நியமிக்க வேண்டும்.
தேர்தல் தோல்விக்கு இன்னொரு முக்கியமான காரணம், அதிமுகவுக்கு இளைஞர்கள் இளம் பெண்களின் வாக்குகள் ஏற்கனவே இருந்த அளவுக்கு தொடர்கிறதா என்பது ஒரு சந்தேகத்திற்குரிய கேள்வியாக இருக்கிறது.
இளைஞர்களின் வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் சென்று கொண்டிருக்கின்றன என்று சொல்கிறார்கள்.
இளைஞர்கள் இளம்பெண்கள் அதிமுகவை நோக்கி மீண்டும் வரவேண்டும் என்றால் நம்முடைய அதிமுக முக்கிய நிர்வாகிகளின் வாரிசுகள் அதிமுகவில் தீவிரமாக பணியாற்ற வேண்டும் அப்பா அதிமுகவில் இருந்த போதும் மகனோ மகளோ அதிமுகவில் இருப்பதில்லை.
இதை மாற்ற வேண்டுமென்றால் அதிமுக முக்கிய நிர்வாகிகள் தங்கள் வாரிசுகளை அதிமுகவில் ஈடுபடுத்த வேண்டும் அண்ணன் எடப்பாடி அவர்களின் மகனாக இருக்கட்டும், அண்ணன் வேலுமணி அவர்களின் மகனாக இருக்கட்டும், அண்ணன் தங்கமணி அவர்களின் மகனாக இருக்கட்டும்.. இவர்கள் எல்லாம் அதிமுகவில் தீவிரமாக செயலாற்ற வேண்டும் அப்போது அடுத்த தலைமுறைக்கு அதிமுக மீது அதிக நம்பிக்கை ஏற்படும் ” என்று பேசியிருக்கிறார் திருப்பூர் சிவசாமி.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மம்முட்டி விட்டதை பிடித்த மகன்… துல்கர் சல்மான் ‘பான் இந்தியா’ ஸ்டாரான கதை!
செங்கோட்டையனை நோக்கி கேள்வி: அதிமுக தலைமை கழகத்தில் பரபரப்பு!