பொய்யை பரப்பி வரும் எடப்பாடி பழனிசாமி நீதிமன்ற படியேற தயாராக இருக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் பாலாஜி சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் சென்னை அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (ஜூன் 16) செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
அவர் பேசுகையில், “செந்தில்பாலாஜியை முதலமைச்சர் சந்தித்ததை கொச்சைப்படுத்தி இதயமே இல்லாமல் பேசி வருகிறார் ஈபிஎஸ்.
நள்ளிரவில் கைது செய்து அமைச்சர் செந்தில் பாலாஜியை துன்புறுத்தியுள்ளனர். ஒருவருக்கு மாரடைப்பு எப்படி வரும் என்பது யாருக்கும் தெரியாது. அதனால் அதனை நாடகம் என கூறுவது தவறு.
திமுக தொண்டனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டால் அவர்களை நாங்கள் பதறிப்போய் பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது?
எடப்பாடிக்கு சட்டமும், வரலாறும் தெரியாது!
சிறையில் இருந்த கனிமொழியை ஸ்டாலின் சந்திக்கவில்லை என ஈபிஎஸ் கூறுவது பச்சைப் பொய்.
2011ஆம் ஆண்டு திகார் சிறையில் இருந்த கனிமொழியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார் என்பதே உண்மை. யாருக்கு இன்னல் ஏற்பட்டாலும் ஓடிபோய் பார்க்கக்கூடியவர் முதலமைச்சர் ஸ்டாலின்.
முதலமைச்சருக்கு பதில் கூற முடியாமல் எடப்பாடி பழனிசாமி எதை எதையோ பேசி வருகிறார்.
தங்கமணி, வேலுமணி வீட்டில் சோதனை நடந்த போது அமித் ஷாவிடம் சென்றார். ஈபிஎஸ். நான் சொல்வது தவறாக இருந்தால் என்மீது ஈபிஎஸ் வழக்கு போடட்டும்.
நான் தொடுத்த வழக்கால் தான் டான்சி நிலம் ஜெயலலிதாவிடம் இருந்து மீட்கப்பட்டது.
ஈபிஎஸ் மீதான வழக்கை மாநில போலீஸ் விசாரிக்கட்டும் என கூறியதால்தான் வாபஸ் பெற்றேன்.
நான் வழக்கை வாபஸ் பெற்றதாக வடிகட்டிய பொய்யை கூறியுள்ளார் ஈபிஎஸ்.
எடப்பாடி பழனிசாமிக்கு சட்டமும் தெரியாது, வரலாறும் தெரியாது.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது ரூ.1.50 கோடிக்கு இட்லி சாப்பிட்டவர்கள் அதிமுகவினர்.
2016ஆம் ஆண்டு ரூ.570 கோடியுடன் கண்டெய்னர் லாரி நின்ற வழக்கை சிபிஐ இதுவரை விசாரிக்கவில்லை” என்றார்.
பகிரங்க மனிப்பு கேட்க வேண்டும்!
மேலும் அவர், “செந்தில்பாலாஜி மீதான குற்றச்சாட்டு ஜெயலலிதா ஆட்சியில் எழுந்தது. எங்களை அவமதிப்பதாக நினைத்து ஜெயலலிதாவை அவமதிக்கிறார் ஈபிஎஸ்.
பி.டி.ஆர் பழனிவேல் ராஜனின் ஆடியோ என குற்றம்சாட்டிய ஈபிஎஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆடியோ தன்னுடையது அல்ல என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கெனவே மறுத்துவிட்டார். ஈபிஎஸ் பகிரங்க மனிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடரப்படும்.
எடப்பாடி பழனிசாமி நீதிமன்ற படியேற தயாராக வேண்டும். சோதனையை பற்றி நாங்கள் எந்த காலத்திலும் கவலைப்படவில்லை.” என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செந்தில் பாலாஜிக்கு சர்ஜரி எப்போது?: காவேரி மருத்துவமனை!
மாநில முதல்வரா? குடும்ப முதல்வரா? ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!