வைஃபை ஆன் செய்ததும், ‘திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புள்ள இடங்களில் இன்று (அக்டோபர் 6) இரண்டாவது நாளாக ஐடி சோதனை தொடர்வது பற்றிய செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“அதிமுக- பாஜக கூட்டணி கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக முறிந்ததாக அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே. பி. முனுசாமியால் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வாசிக்கப்பட்டது. இதற்குப் பிறகு இந்த விவகாரத்தில் பாஜகவின் மாநில தலைமையும் தேசிய தலைமையும் உறுதியாக எந்த பதிலும் தெரிவிக்காத நிலையில், அக்டோபர் 1ஆம் தேதி அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்றார். அதன் பிறகு அக்டோபர் 3ஆம் தேதி இரவு சென்னை வந்த அவர் அக்டோபர் 5 ஆம் தேதி கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் அண்ணாமலை என்ன பேசினார் என்பது மின்னம்பலத்தில் விரிவாக வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ‘தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சென்றவர்களை பற்றி கவலையோ மகிழ்ச்சியோ இல்லை ’ என்று தெரிவித்ததோடு… ‘தமிழகத்தில் போட்டி திமுகவுக்கும் பாஜகவுக்கும்தான்’ என்றும் கூறினார். இதே நேரம் கூட்டம் முடிந்ததும் அதிகாரபூர்வமாக செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன், ‘நாங்கள் ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இரண்டு திராவிட கட்சிகள் இல்லாமல் தனித்து போட்டியிட்டு வெற்றிபெற்ற அனுபவம் உள்ளது. அதனால் அதிமுகவின் முடிவு பின்னடைவு இல்லை. அதே நேரம் எங்களது தேசிய தலைமை 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதனால் அந்த தேர்தல் முடிந்த பிறகு தமிழக விவகாரத்தில் கவனம் செலுத்தும்’ என்று தெரிவித்திருக்கிறார்.
அண்ணாமலையின் டெல்லி பயணத்திலிருந்தே டெல்லியின் ரியாக்ஷன் என்ன என்பதை அறிய அதிமுகவில் பலருக்கும் ஆர்வம் இருந்தது. கடந்த சில நாட்களாகவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வரும் அக்கட்சியின் சீனியர் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள்… கூட்டணியை முறித்த விவகாரத்தில் பாஜகவின் தேசிய தலைமை இதுவரை எந்த ஒரு வெளிப்படையான பதிலையும் சொல்லாமல் மூடு மந்திரம் காத்து வருவது பற்றி கேட்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து அவர்களுக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, ‘பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வராது என்று முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியாக நம்பிக் கொண்டிருந்தார். ஏனென்றால் நாம் வெளியே வந்தால் அது திமுகவுக்கு தான் பாதகம் என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். மேலும், ‘ஆளுங்கட்சியான நம்மாலேயே மத்திய அரசின் நடவடிக்கைகளை கஷ்டப்பட்டுத்தான் சமாளிக்க முடிகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் எடப்பாடி எப்படி பாஜகவின் ரியாக்ஷனை எதிர்கொள்வார்?’ என்றெல்லாம் தனக்கு நெருக்கமான வட்டாரங்களில் ஸ்டாலின் பேசியிருக்கிறார். ஆனால் ஸ்டாலினின் கனவை தகர்க்கும் வகையில் நாம் தொண்டர்களின் ஆதரவோடு இந்த உறுதியான முடிவை எடுத்து பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டோம். இப்போது கூட பாஜக உடனான உறவை நாம் முறித்துக் கொண்டதை ரசிக்காத ஸ்டாலின் உள்ளிட்ட அவரது சில கூட்டணிக் கட்சியினர், ’இது நாடகம்’ என்று தொடர்ந்து கருத்துருவாக்கம் செய்து வருகிறார்கள். ஆனால் எந்த நிலையிலும் பின்வாங்க போகும் பேச்சுக்கே இடமில்லை. நாம் கூட்டணியில் இருந்து வெளியே வந்தது வந்ததுதான்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலை காட்டிலும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கும் அதிமுகவுக்குமான வாக்கு வித்தியாச இடைவெளி வெகுவாக குறைந்திருக்கிறது என்பது தான் உண்மை. எனவே அதிமுகவின் உண்மையான பலத்தையும் பாஜக இல்லாததால் நம் மீது சிறுபான்மை மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் சேர்த்து நாம் இந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட தகுந்த வெற்றியைப் பெறுவோம். எனது கணக்குப்படி பார்த்தால் 15 தொகுதிகளில் மக்களவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்’ என்று ஒரு கணக்கை சொல்லியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல… ‘பாஜகவின் தேசிய தலைமை இங்கே இருக்கும் அண்ணாமலை போன்றவர்களின் பேச்சைக் கேட்டு நம் மீது ரெய்டுகளையோ, அமலாக்கத்துறை, சிபிஐ நடவடிக்கைகளையோ ஏவினால் அது அவர்களை அவர்களே எக்ஸ்போஸ் செய்து கொள்வதாக தான் இருக்கும். ஒருவேளை அதிமுக முக்கிய தலைவர்கள் மீது பழைய வழக்குகளை தூசி தட்டி எடுத்தாலோ அல்லது சட்ட நடவடிக்கைகளுக்கு அனுமதி அளித்தாலோ அல்லது சோதனைகளை ஏவினாலோ அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்’ என்றும் கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. குறிப்பாக தன்னை சந்தித்த முன்னாள் அமைச்சர்களிடம், ‘பிஜேபி பல மாநிலங்களில் செய்த விளையாட்டுகளை நம் மீதும் நாளை நடத்தக்கூடும். அதனால் எதற்கும் தயாராக இருங்கள். நான் கூட எதற்கும் தயாராக தான் இருக்கிறேன். நம்மில் யார் சிறை சென்றாலும் அது அதிமுகவுக்கு அரசியல் ரீதியாக வலிமையைத்தான் கூட்டுமே தவிர எந்த வகையிலும் நமக்கு இழப்பு ஏற்படாது. எனவே எதற்கும் தயாராக இருங்கள்’ என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மீண்டும் தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!
Asian Games 2023: சுழலில் சுருண்ட வங்கதேசம்: இறுதிப்போட்டியில் இந்தியா