வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது முன்னாள் முதல்வரும் தற்போதைய அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் அசையும் சொத்து ரூ.3.14 கோடியும் அசையா சொத்து ரூ.4.66 கோடி இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்தார்.
2021-ஆம் சட்டமன்ற தேர்தலின் போது அசையும் சொத்து மதிப்பு ரூ.2.01 கோடியும் அசையா சொத்து ரூ.4.68 கோடி இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் வேட்புமனு தாக்கலின் போது எடப்பாடி பழனிசாமி தனது சொத்து விவரங்களை ரூ.1 கோடி அளவிற்கு குறைத்து காட்டியதாக, தேனி மாவட்ட முன்னாள் திமுக இளைஞரணி அமைப்பாளர் மிலானி சேலம் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
எடப்பாடியிடம் விசாரிக்கலாம்
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சேலம் மாவட்ட குற்றப்பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கில் விசாரணை நடத்தலாம். இதற்கு அவர் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜனவரி 25)மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
இந்த மனு வரும் 27ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.