2021 சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ், வைத்திலிங்கம் போன்றோர் ஜெயிக்க கூடாது என்பதற்காக எடப்பாடி யார் யாருக்கு பணம் கொடுத்தார் என்பதை விரைவில் அறிவிப்பேன் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நேற்று (ஜூலை 16) நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கு பன்னீர் தான் காரணம் என்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் ஓபிஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் பேசுகையில், ”அதிமுகவில் பல்வேறு குழுக்களை அமைத்து, ஆட்சி மன்ற குழுவில் கலந்தாலோசிக்கப்பட்டு சட்டமன்ற வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது தான் வழக்கம். 2021 சட்டமன்ற தேர்தலில் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஸுடன் எந்தவித ஆலோசனையும் ஈபிஎஸ் மேற்கொள்ளவில்லை. தங்கமணி, வேலுமணி என்ற இரண்டு மணிகளை வைத்துகொண்டு தொகுதி பங்கீடு, கூட்டணி ஒதுக்கீடு போன்றவற்றில் முடிவெடுத்தார். வேட்பாளர் தேர்விலும் தனிச்சையாகவே முடிவெடுத்து அறிவித்தார். இதுகுறித்து ஓபிஎஸ் வெளிப்படையாக பேசியிருந்தால், கட்சி அன்றைக்கே இரண்டாக பிளவுபட்டிருக்கும். ஆனால் தேர்தலில் வெற்றி பெற வேண்டும், அம்மா ஆட்சி மீண்டும் அமையவேண்டும் என்று அப்போது அமைதியாக இருந்துவிட்டார்.
இன்றும் கூட தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று தெரிவித்திருக்கிறோம். எடப்பாடி தரப்பில் கொடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நீக்கம் அறிக்கையை தேர்தல் ஆணையம் புறக்கணித்துவிட்டது. எடப்பாடி இன்று பட்டா இல்லாத புறம்போக்கு நிலம் போல் இருக்கிறார். ஓபிஎஸுக்கு தான் எல்லா அறிக்கைகளையும், கடிதங்களையும் தேர்தல் ஆணையம் அனுப்புகிறது. ஓபிஎஸ் தரப்பில் புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்த அறிக்கை திங்கள்கிழமை வெளியிடப்பட்டு, தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்படும்.
2019 தேர்தலில் அதிமுக தோற்பதற்கு முக்கிய காரணம் எடப்பாடியின் துரோகம் தான். தேர்தலில் ஓபிஎஸ், வைத்திலிங்கம் போன்றோர் வெற்றிபெறக் கூடாது என்பதற்காக மாற்றுக் கட்சி வேட்பாளர்களுக்கு பணம் கொடுத்து எடப்பாடி சதி வேலை செய்தார். என்னிடம் அதற்கான ஆதாரங்கள் உள்ளது. அவர் இல்லை என்று சொல்வாரா? அவர் இல்லை என்று சொல்லட்டும். தேர்தலில் அவர் யார் யாருக்கு எதிராக வேலை செய்தார்? அவருக்கு உதவியவர்கள் யார்? எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற பட்டியலை அறிவிப்பேன். இதனை சொல்லக்கூடாது என்று இருந்தேன். ஆனால் நேற்று சேலத்தில் நடந்த கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கு காரணம் ஓபிஎஸ் தான் என்று கூறியதால், இப்போது இதை சொல்கிறேன்.
உதயகுமார், அளவுக்கு அதிகமாக எவ்வளவு சொத்து சேர்த்திருக்கிறார் என்பது குறித்து பகிரங்கமாக வெளியிட தயாராக இருக்கிறேன். ஆனால் அதுபற்றி அவர் பேசவில்லை. மதுரையில் ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டுகிறேன் என்று கட்சியில் பணம் வசூலித்தார். கோவில் கட்டிய இடத்தில் தனது தந்தையை அடக்கம் செய்து டிரஸ்ட் நடத்தி வருகிறார். இதன்மூலம் அவர் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்துள்ளார். கோவில் என்ற பெயரில் சுடுகாடு அமைத்தது தான் தர்மமா? அமைச்சரான பின் அரசாங்க நிலங்களை எத்தனை பேருக்கு குறைந்த விலையில் பட்டா போட்டு கொடுத்தார் என்ற பட்டியல் உள்ளது. அதனை இன்னும் இரண்டு நாளில் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கொடுத்துவிட்டு பத்திரிக்கையாளர்களிடம் கொடுப்பேன்.
ஓபிஎஸுக்கு லேசான சளி, காய்ச்சல் இருந்தது. அதன்காரணமாக மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்தார். முழு சோதனை மற்றும் சிகிச்சைக்கு பிறகு வீட்டுக்கு வந்துவிடுவார்” என்றார்
கிறிஸ்டோபர் ஜெமா
உண்மை நிலையை உலகிற்கு அம்பலப்படுத்துவதில் தங்களுக்கு நிகர் தாங்களே