ஈபிஎஸ், ஓபிஎஸ், தினகரன்: யாருக்கு ஆதரவு – சசிகலா

Published On:

| By Kavi

எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் இருவரையும் இணைக்கக் கூடிய அத்தனை முயற்சியையும் எடுத்துக்கொண்டிருக்கிறேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

அதிமுக இரட்டை அணிகளாகப் பிரிந்துள்ளது. அதிமுக தலைமை யாருக்கு என்பது தொடர்பான பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இந்தச்சூழலில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணியில் எடப்பாடி அணியினர் மும்முரம் காட்டி வருகின்றனர். தேர்தல் போட்டியிட ஓபிஎஸ் அணியும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் இன்று (ஜனவரி 24) மன்னார்க்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, “ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரையும் இணைக்கும் அத்தனை முயற்சிகளையும் நான் மேற்கொண்டு வருகிறேன்” என்றார்.

ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி, அமமுக உள்ளிட்டோர் இடைத்தேர்தலில் போட்டியிடும் போது உங்களது ஆதரவு யாருக்கு?

“அதிமுக தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதுதான் என்னுடைய முடிவாக இருக்கும்”.

இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா?

இரட்டை இலை சின்னத்தைப் பொறுத்தவரை யாரும் எதுவும் செய்ய முடியாது. நான் உயிருடன் இருக்கும் வரை நிச்சயம் அந்த கட்டத்துக்கு விடமாட்டேன். தொண்டர்களின் மனகுமறலை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

eps ops ammk ttv

அதிமுகவை முன்பிருந்தது போல் மீண்டும் ஒரு கட்டுப்பாட்டோடு கொண்டு வருவேன் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அதிமுக ஒன்றாக இணையும்.

தமிழக மக்கள் என்ன நடக்கிறது எனக் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இடைத்தேர்தல் முடிவு மக்கள் கையில் தான் இருக்கிறது”.

திமுக ஆட்சி குறித்துப் பேசிய அவர், “ஜெயலலிதாவுடன் பிரச்சாரத்துக்குப் போகும்போது கூடவே இருந்து பார்த்திருக்கிறேன். என்ன செய்ய முடியுமோ அதைத்தான் மக்களிடம் சொல்வார். ஏனென்றால் மீண்டும் மக்களைப் பார்க்க வேண்டும். அப்போது அவர்கள் ஏதும் செய்யவில்லையே எனக் கேட்கக் கூடாது.

அதைத் தவிர்த்து ஒரு பெரிய பெட்டி வைத்து, மக்களிடம் மனுக்களை போடச் சொல்லி அதைப் பூட்டி வைத்துக்கொண்டு. ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்லி மக்களை ஏமாற்றமாட்டோம். தற்போது அந்த பெட்டியின் சாவி காணாமல் போய்விட்டது போல” என்று உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தை விமர்சித்தார்.

அதிமுக பின்னணியில் பாஜக இருக்கிறது என சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு, “அடுத்தவர்களைக் குறை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. நாம் சரியாக இருந்தால் யாரால் என்ன செய்ய முடியும். பாஜக என்றில்லை எந்த கட்சிக்காரர்களாக இருந்தாலும் சரி, நாம் என்ன குழந்தையா? நாம் சரியாக இருந்தால் எதுவும் செய்ய முடியாது. என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது. என் நிழலைக் கூற யாராலும் தொட முடியாது.

ஓபிஎஸ், ஈபிஎஸ் நடவடிக்கையைப் பார்க்கும் போது திமுகவுக்குத்தான் நன்மையாக இருக்கும். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

பிரியா

எங்கள் எய்ம்ஸ் எங்கே? – ஒற்றை செங்கலுடன் போராட்டம்!

சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதி: உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share