அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் : தமிழ் மகன் உசேன் திட்டவட்டம்

அரசியல்

அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டும் ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மேலும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நடைமுறைகள் செல்லும் என்று தீர்ப்பில் கூறப்பட்டது.

இதனையடுத்து தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இனிப்பு கொடுத்து, பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

மேலும் அதிமுகவில் பொதுச்செயலாளருக்கான தேர்தல் விரைவில் நடைபெறும் என்றும் அதில் பழனிசாமி நிரந்தர பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று அதிமுகவின் இரு தரப்பும் ஜெயலலிதா படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

அதன்படி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “அதிமுக இன்னும் உழைப்பாளர்களின் கையில் இருப்பதற்கான மகத்தான எடுத்துக்காட்டாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது.” என்று கூறினார்.

மேலும், “அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒருங்கிணைந்த நிலையில்தான் உள்ளது. கட்சியில் பிளவு என்பது எல்லாம் இல்லை. அதிமுகவின் இனி நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான். விரைவில் இதைப் பார்ப்பீர்கள். கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை சட்ட ரீதியாக ஒருங்கிணைப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம்.” என திட்டவட்டமாக கூறினார்.

கிறிஸ்டோபர் ஜெமா

ஜெயலலிதா பிறந்தநாள் : பேசாமல் நழுவி சென்ற பன்னீர்

ஜெயலலிதா பிறந்தநாளில் கேக் வெட்டி கொண்டாடிய எடப்பாடி

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *