அ.தி.மு.க.வில் இல்லாத இரண்டு பதவிகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டதே எடப்பாடி பழனிச்சாமி தரப்புதான் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் இன்று(ஜனவரி 11) நடந்த அதிமுக பொதுக்குழு வழக்கில் 3 ஆவது நாளாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டன.
ஓபிஎஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், “அ.தி.மு.க.வில் இல்லாத இரண்டு பதவிகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டதே ஈபிஎஸ் தரப்பு தான்.
அவ்வாறு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரு பதவிகளை உருவாக்கியதற்கு பின்னர், கட்சியின் அனைத்து நடவடிக்கைகளும் முறையாக சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென கட்சியில் குழப்பங்களை விளைவிக்கும் வகையில் அந்த இரண்டு பதவிகளும் நீக்க வேண்டும் என்று சொல்வதும் இவர்கள்தான்.
இரு பதவிகளும் காலாவதியாகும்போது அடுத்த ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை ஏற்கனவே நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து கட்சியை நடத்த வேண்டும்.
மேலும், தேர்தல் நடத்தப்பட்டுதான் இரு பதவிகளும் நிரப்பப்பட வேண்டும் என்பதும் அதிமுகவின் விதிமுறை.

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரு பதவியும் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட இருந்தது.
ஆனால் அப்போது தேர்தலில் மற்ற எவரும் போட்டியிடவில்லை என்பதால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
ஜூலை11 பொதுக்குழு முடிவுகளை எப்படி எதிர்க்க முடியும் என இவர்கள் கேட்கிறார்கள். அந்த விவகாரம் அனைத்தும் காலாவதியாகிவிட்டது என ஈ.பி்எஸ் தரப்பு சொல்கிறார்கள்.
அதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் அதிலிருந்து தான் அனைத்து பிரச்சினைகளும் தொடங்கியது.
பொதுக்குழு கூட்டுவது தொடர்பான நோட்டீசை முன்கூட்டியே வழங்கவில்லை. வழங்கப்பட்ட நோட்டீசில் இடம்பெறாத விஷயங்களை எல்லாம் அ.தி.மு.க பொதுகுழுவில் இவர்கள் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறார்கள்.
இதற்கு முன்பு கூட்டப்பட்டுள்ள அ.தி.மு.க. பொதுக்குழு நோட்டீஸ்கள் எல்லாம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தாலே உங்களுக்கு தெரியும்” என்று வாதிட்டார்.
ஜூலை 11 அன்று கூட்டப்பட்ட பொதுக்குழு சட்டவிரோதம் என்று ஓ.பி.எஸ். தரப்புக்காக மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் வாதாடினார்.
“அடிப்படை உறுப்பினர்களால் தான் உயர்மட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது எக்காலத்திலும் மாற்ற முடியாத விதிமுறை.
இடைக்கால பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்பதற்காக மூத்த தலைவரும், பொருளாளருமான ஓ.பி.எஸ்சை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர்.
ஆனால் நீக்கப்படுவதற்கு முன்னர் விளக்கம் கேட்டு எந்த நோட்டீசும் கொடுக்கப்படவில்லை.
மேலும் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற விவகாரம் தான் கட்சியின் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே இந்த சூழலை யார் ஏற்படுத்தியது என்றால் அது ஈ.பி.எஸ் தான்.
எனவே கட்சியின் நலனுக்காக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே தொடர வேண்டும்” என்று ஓபிஎஸ் தரப்பு வாதத்தை முடித்தது.
கலை.ரா
அவைத் தலைவரின் பணிகள் என்ன? – நீதிபதிகள் கேள்வி!
மெஜாரிட்டி இல்லாத ஓபிஎஸ்: அதிமுக வாதம்!