பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே போட்டியிடும் வகையில் விதிகளை மாற்றியிருக்கிறார் என்று உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.
அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நடந்து வருகிறது.
நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றும் ஹிருஷிகேஷ் ராய் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டன.
இதையடுத்து இரண்டாவது நாளாகவும் உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நடந்து வருகிறது. ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் வாதங்களை முன்வைத்து வருகிறார்.
அவர் பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் பல்வேறு விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையறுக்கப்பட்ட அதிமுக சட்ட விதிகளில் உள்ள பக்கங்களை ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் நீதிபதிகளுக்கு சுட்டிக்காட்டி வாதாடி வருகிறார்.
தற்போது திருத்தப்பட்ட விதிகளுக்கும், முன்னர் இருந்த விதிகளுக்குமான ஒப்பீடு ஆவணத்தில் வழங்கப்பட்டுள்ளதையும் அவர் எடுத்துக்காட்டினார்.
ரஞ்சித்குமார் தனது வாதத்தில், “ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஒரு ஆண்டுக்குள் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்தி இருந்தால் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகளே தேவைப்பட்டிருக்காது.
ஆனால் அப்போது அதனை செய்யாத எடப்பாடி பழனிச்சாமி தற்பொழுது புதிய பதவிகளை உருவாக்கியதற்கு பின்னர் பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வர முயல்வது அதிமுகவின் சட்ட விதிகளுக்கு முரணானது.
உறுப்பினர்கள் கோரிக்கை வழங்கிய 30 நாளில் பொதுக்குழுவை கூட்டவேண்டும். கூட்டம் நடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன் உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் தரப்படவேண்டும். ஆனால் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஈபிஎஸ் தரப்பு நடந்து கொண்டது.
பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் அதன் மீது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் சேர்ந்து முடிவு எடுக்கலாம் என்று தான் விதிமுறை இருக்கிறதே தவிர எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறுவது போல இல்லை.
ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர் திருத்தப்பட்ட கட்சி விதிபடி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்பதே நிர்வாக பதவி. அந்த பதவிக்கான காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும், கட்சியின் எந்த முடிவையும் இவர்கள் இருவரும் இணைந்து தான் எடுக்க வேண்டும் என்பது விதி ஆகும்.
கட்சி தலைமை அலுவலகம், தேர்தல் முடிவுகள், நிர்வாகிகள் நியமனம் என அனைத்திலும் இருவரின் முடிவு இணைந்து எடுத்தால் மட்டுமே அது செல்லத்தக்கது. எடப்பாடி பழனிச்சாமி தனக்கு ஏற்றார் போன்று விதிகளில் திருத்தம் செய்துள்ளார்” என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வாதாடினர்.
அப்போது நீதிபதிகள், அதிமுகவின் அவைத்தலைவர் பதவிக்கான பொறுப்புகள் என்னென்ன? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பொதுக்குழு, செயற்குழு உள்ளிட்ட கூட்டங்களை கூட்டுவதற்கான அதிகாரம்படைத்தவர் அவைத்தலைவர். ஆனால் ஜுன் மாதம் இடைக்கால அவைத் தலைவரை தேர்வு செய்தது ஈபிஎஸ் தரப்பு என ஓ.பி.எஸ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
மேலும், “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு என்பது அடிப்படை உறுப்பினர்களால் செய்யப்படுவது. அது கட்சியின் அடிப்படை விதியோடு தொடர்புடையது.
எனவே பொதுக்குழு மூலம் அந்த பதவிகளை ரத்து செய்துவிட்டு, புதிய பதவியை உருவாக்க முடியாது.
கட்சி விதிகளில் மாற்றம் செய்ய பொதுக்குழுவிற்கு அதிகாரம் உள்ளது. ஒருங்கிணைப்பளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கட்சி தொடர்பான முடிவுகளை எடுக்கலாம்.
ஆனால் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற விதியை மாற்றம் செய்ய முடியாது என கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் தான் பன்னீர் செல்வம் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டன.
அதேவேளையில், முன்னதாக அ.தி.மு.க.வில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஒரே பதவி அதுவும் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரே பதவி பொதுச்செயலாளர் பதவி ஆகும்.
ஆனால் தற்போது கட்சியில் இல்லாத அந்த பதவியை குறுக்கு வழியில் எடப்பாடி பழனிச்சாமி பெற முயல்கிறார். கடந்த ஜூலை 11ல் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் பொதுக்குழுவைக் கூட்டியதும் அதில் முடிவுகள் எடுத்ததும் முழுக்க முழுக்க சட்ட விரோதம்.
மறைந்த ஜெயலலிதா என்பவர் அதிமுக.வின் தாய் போன்றவர் அவரது இடத்திற்கு யாரும் வரக்கூடாது என்பதுதான் ஒட்டுமொத்த கட்சியினருடைய நிலைப்பாடு.
ஆனால் அதையும் மீறி எடப்பாடி பழனிச்சாமி அந்த பதவிக்கு வர நினைத்தார். ஆனால் அதற்கு முன்பாக அவர் நியாயமான முறையில் அதற்கான தேர்தலை சந்தித்திருக்க வேண்டும்.
கட்சித் தலைமை அலுவலக பொறுப்பில் 10 ஆண்டுகள் இருந்தவர்கள் தான் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும். 10 மாவட்ட செயலாளர்கள் முன் மொழிய வேண்டும்.
10 மாவட்ட செயலாளர்கள் வழி மொழிய வேண்டும் என தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இது ஈபிஎஸ் மட்டுமே போட்டியிட ஏதுவாக இப்படி மாற்றப்பட்டுள்ளது” என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பு அடுக்கடுக்கான புகார்களை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கலை.ரா
“நேசிக்க பயப்பட வேண்டாம்”: கிருத்திகா உதயநிதி
பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட தாத்தா: பளார் என விட்ட பாட்டி!