ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு ஈபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார்.
நேற்று சென்னையிலிருந்த ஓ.பன்னீர் செல்வம் தாயாரின் மறைவு செய்தியைக் கேட்டு உடனடியாக கிளம்பி தேனி பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றார்.
அப்போது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தாயாரின் உடலைக் கண்டு கண்ணீர் மல்க அவரது கால்களைக் கட்டிப்பிடித்து அழுதார்.
இன்று பகல் பழனியம்மாளின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து இன்று மாலை பெரியகுளத்தில் பழனியம்மாளின் உடல் தகனம் செய்யப்பட்டது.
ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு முதல்வர் தொடங்கி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவிப்பாரா என்ற கேள்வி எழுந்தது.
ஓபிஎஸ் -ஈபிஎஸ் இடையே கருத்து மோதல், அதிமுக பொதுக்குழு வழக்கு என பிரச்சினை இருந்து வரும் நிலையில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தாவிட்டாலும், இரங்கலாவது தெரிவிப்பாரா என கேள்வி எழுந்தது.
இந்தச்சூழலில் இன்று மாலை ஈரோடு கிழக்குத் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் ஓபிஎஸ் தாயார் மறைவு குறித்துக் கேட்கப்பட்டது.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “அண்ணன் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் மறைவு வருத்தம் அளிக்கிறது.
தாயாரை இழந்து வாடும் அண்ணன் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று கூறினார்.
2021 தேர்தலின்போது ஓபிஎஸின் தாயாரைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆசீர்வாதம் பெற்றார். ஓபிஎஸ் விபூதி எடுத்துக் கொடுக்க அவரது தாயார் ஈபிஎஸின் நெற்றியில் வைக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
அதுபோன்று எடப்பாடி தயாரின் மறைவுக்கு நேரில் சென்று ஓபிஎஸ் அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
“உக்ரைன் ரஷ்யா போரில் அமைதி பேச்சு வார்த்தை”: மோடி உறுதி!
டிஜிட்டல் திண்ணை: வைத்திலிங்கத்துக்கு வலை விரிக்கும் செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ்