இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தின் மீது நடந்த கல்/பாட்டில் வீச்சு சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு 9 மணி அளவில் மர்ம நபர்கள் பாட்டில் , கற்கள் போன்ற பொருட்களை வீசியுள்ளனர். அந்த சமயம் கட்சி அலுவலகத்திற்குள் யாரும் இல்லாத காரணத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதுகுறித்து அக்கட்சியின் தென்சென்னை மாவட்ட செயலாளர் சிவா மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் 6 பேரை கைது செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கெனவே ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் சர்ச்சையான நிலையில், தற்போது ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தின் மீது நடந்த இந்த தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி கண்டனம்!
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (அக்டோபர் 28) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், சென்னை தியாகராய நகரில் உள்ள அவர்களது தலைமை அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள்.
இந்த திமுக ஆட்சியில் தனிநபர் தொடங்கி, ஆளுநர் மாளிகை, அரசியல் கட்சி இயக்கங்கள், அதுவும் திமுகவின் பிரதான கூட்டணி கட்சியாக அங்கம் வகிக்கும் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி வரை எங்குமே யாருக்குமே பாதுகாப்பில்லாத அவல நிலை நீடிப்பதை தினம்தினம் ஒரு சம்பவம் நிரூபிக்கிறது.
நான் ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டது போல இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து கேள்வி குறியாகவே இருக்கிறது. தங்களது கூட்டணி கட்சியின் அலுவலகத்தின் மீது தாக்குதலுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”போரை நிறுத்துங்கள்”: ஐநா தீர்மானம் நிறைவேற்றம்… இந்தியா புறக்கணிப்பு!
46 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை!