மாணவர்களுக்கு சுமை… பாடப்புத்தகங்கள் விலையேற்றத்திற்கு எடப்பாடி கண்டனம்!

Published On:

| By Minnambalam Login1

eps condemns price rise

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களின் விலை ரூ.30 முதல் ரூ.90 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உற்பத்தி பொருட்களின் விலையேற்றத்தால் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பாடப்புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், தமிழ்நாடு பாடப்புத்தகங்களின் விலையேற்றத்தை கண்டித்து தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் “ கடந்த 39 மாதகால திமுக ஆட்சியில் 6 முதல் 60 வரை, வயது பேதமின்றி அனைவரையும் வாட்டி வதைத்து, கசக்கிப் பிழிந்து வருவது கண்கூடு.

நின்றால் வரி, நடந்தால் வரி, பேசினால் வரி, தண்ணீர் குடித்தால் வரி என்று அனைத்து வரிகளையும் மக்களின் தலையில் சுமத்திவிட்டு அவர்களை கடனாளியாக்கும் வேலையை, இந்த திமுக அரசின் முதலமைச்சர் கனக்கச்சிதமாக மேற்கொண்டு வருகிறார்.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்குத் தங்கம், விலையில்லா மடிக் கணினி போன்ற நலத் திட்டங்களை நிறுத்திவிட்டு அந்த நிதியை உயர் கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நிபந்தனையுடன் கல்வி உதவித் தொகையாக மடைமாற்றியது திமுக அரசு.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து, உயர்கல்வி படிக்கச் செல்லும் மாணவ, மாணவியருக்கு, மாதந்தோறும் நிதியுதவி என்ற பெயரில் நிபந்தனையுடன் சிலருக்கு கல்வி உதவித் தொகை வழங்கி, பலருக்கு கிடைக்காமல் கடும் மன வேதனையில் மாணவர்கள் இருக்கும் இச்சூழ்நிலையில், திமுக பட்டிமன்றப் பேச்சாளர் ஒருவர் தலைமையேற்று நடத்தும் தமிழ் நாடு பாடநூல் நிறுவனம், அரசு பாடத் திட்டத்தில் படிக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களின் விலையை சுமார் 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.

இந்த விலை உயர்வு கடும் கண்டனத்திற்குரியது. 1-ஆம் வகுப்பு பாடப் புத்தகங்கள் ரூ. 390-ல் இருந்து ரூ. 550-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு 1-ஆம் வகுப்பில் தொடங்கி 10-ஆம் வகுப்புவரை அனைத்து பாடப் புத்தகங்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால், மாநில கல்வித் திட்டத்தின்படி தனியார் பள்ளகளில் மாணவ, மாணவிகளை சேர்த்துள்ள பெற்றோர்கள் நிலை குலைந்து போயுள்ளனர். பாடப் புத்தகங்களின் விலை உயர்வு தனியார் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களையும் பாதிக்கும்.

ஏற்கெனவே கடுமையான விலைவாசி உயர்வினாலும், பல மடங்கு அரசு கட்டணங்கள் உயர்வினாலும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக மக்களின் தினசரி வாழ்வில் ‘எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல்’, தற்போது உயர்த்தப்பட்டுள்ள பள்ளி பாடப் புத்தகங்களின் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: ஆகஸ்ட் 20-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு!

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: ஆகஸ்ட் 20-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு!

பெருமூச்சு விட்ட பங்குச்சந்தை… ஃபோகஸ் செய்ய வேண்டிய பங்குகள் இவை தான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment