வைஃபை ஆன் செய்ததும் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் மகன் திருமணத்தில் பாஜக தலைவர்கள் குவிந்த வீடியோ காட்சிகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே கோவையில் சிலரிடம் போன் பேசிவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது. eps boycott velumani son wedding
“அதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் மகன் விகாஸ்- தீக்ஷனா ஆகியோரின் திருமணம் இன்று மார்ச் 3 ஆம் தேதி கோவை ஈச்சநாரி பகுதியிலுள்ள திருமண மஹாலில் நடைபெற்றது.
இந்தத் திருமண விழாவுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவில்லை. ஆனால் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை, மத்திய அமைச்சர் முருகன், குஷ்பு ஆகியோர் ஒன்றாக வந்திருந்து வாழ்த்தியிருக்கிறார்கள். அதுவும் அண்ணாமலை வரும்போது முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, நத்தம் விசுவநாதன் போன்றோர் அண்ணாமலையின் கையைப் பிடித்து வரவேற்று மகிழ்ந்தனர். வேலுமணியும் அண்ணாமலையை இன்முகத்தோடு வரவேற்றார். அண்ணாமலை வந்ததும் வேலுமணியின் மகனும், மணப்பெண்ணும் அண்ணாமலையின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

இந்தக் காட்சிகள் அதிமுகவுக்குள் மீண்டும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2024 ஆகஸ்டு 23 ஆம் தேதி இந்தத் திருமணத்தின் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. அப்போதும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. இதன் தொடர்ச்சியாக இன்று திருமணத்திலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அதிமுகவுக்குள் எடப்பாடிக்கு எதிராக வேலுமணி தலைமையில் ஓர் அணி உருவாகிவிட்டதா என்ற கேள்வி மீண்டும் வலுவடைந்துள்ளது.
கோவை அரசியல் வட்டாரங்களில் பேசியபோது, ‘எடப்பாடி பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்பதில் தெளிவாக இருக்கிறார். ஆனால் வேலுமணி உள்ளிட்டவர்கள் பாஜகவுடன் கூட்டணி இருந்தால் கொங்கு மண்டலத்தில் திமுகவை எளிதில் வீழ்த்த முடியும் என்ற கணக்குகள் போட்டுக் காட்டியிருக்கிறார்கள். ஆனாலும் எடப்பாடி அதை ஏற்கத் தயாராக இல்லை.

இந்நிலையில்தான் சில நாட்களுக்கு முன் சிவராத்திரி விழாவுக்காக ஈஷா யோக மையத்துக்கு வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. அவருடன் இந்நிகழ்வில் வேலுமணியும் கலந்துகொண்டார். சிவராத்திரி நிகழ்வுக்கு இடையே, அந்த இரவில் அமித் ஷாவும் வேலுமணியும் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இதுபற்றிய தகவல்களை எடப்பாடியும் கோவையில் விசாரித்து அறிந்திருக்கிறார். eps boycott velumani son wedding
இந்த நிலையில்தான் இன்று நடந்த வேலுமணியின் திருமண நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் பலரும் வந்திருக்க, எடப்பாடி ஆப்சென்ட் ஆகிவிட்டார்’ என்கிறார்கள்.
இதுகுறித்து வேலுமணி வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘எடப்பாடி பழனிசாமி நேற்று தேனி மாவட்டத்துக்கு சென்றார். இன்று திருமணத்துக்கு அவர் வருவதாக திட்டமில்லை. ஏனென்றால் இந்த நிகழ்வை பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் ஆகியோரின் குடும்பத்தினருக்கான நிகழ்வாகத்தான் வேலுமணி ஏற்பாடு செய்திருந்தார்.

அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா புள்ளிகள் என அனைவரும் கலந்துகொள்ளும் வரவேற்பு நிகழ்வை கோவை கொடிசியா அரங்கில் வரும் மார்ச் 10 ஆம் தேதி ஏற்பாடு செய்திருக்கிறார் வேலுமணி. 10 ஆம் தேதி திருமண வரவேற்புக்குத்தான் பாஜக தலைவர்களுக்கும் அழைப்பு கொடுத்திருந்தார் வேலுமணி. ஆனால் அவர்கள் திடீரென இன்று வந்துவிட்டார்கள். இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. எடப்பாடி பழனிசாமியின் மனைவியார் நேற்று மாலை வந்து வாழ்த்தினார்’ என்கிறார்கள்.
ஆனாலும் வேலுமணி மகனின் நிச்சயதார்த்த விழா, திருமணம் இரண்டிலும் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமி ஆப்செண்ட் ஆகியிருப்பது அதிமுகவுக்குள்ளேயே விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 10 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி கொடிசியாவில் நடக்கும் நிகழ்வில் பங்கேற்றால் கூட இந்த சலசலப்புகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப். eps boycott velumani son wedding