தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்து, அத்திக்கடவு அவிநாசி திட்டம் – 2 தொடங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். EPS assures farmers on athikkadavu
அத்திகடவு – அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா கோவை அன்னூர் அருகேயுள்ள கஞ்சப்பள்ளியில் இன்று (பிப்ரவரி 9) நடைபெற்றது.
இதில் கலந்துகொள்ள வந்த எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து மாட்டு வண்டியில் ஏறி மேடைக்கு வந்தார்.

பிறவிப்பலனை அடைந்துவிட்டேன்! EPS assures farmers on athikkadavu
பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ”அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக, நீங்கள் எனக்கு நடத்தும் நிகழ்ச்சியால் ஒரு விவசாயியாக நான் பிறவிப்பலனை அடைந்துவிட்டேன்.
ஒரு விவசாயியாக தொடங்கி முதலமைச்சராக ஆவேன் என கனவிலும் நினைத்தது இல்லை. நான் ஜெயலலிதா ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை தெரிவித்தேன். அதை அவரும் ஏற்றுக்கொண்டார்.
ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் மறைந்த பின்னர், நான் முதலமைச்சர் ஆனதும் அதை நிறைவேற்றிவிட்டேன். நிறைவேற்றியது அதிமுக அரசாங்கம்.
நான் இருக்கின்ற சூழ்நிலைக்கு தக்கவாறு நடந்து கொள்கிறவன். என்னை யாரும் அடிமைப்படுத்த முடியாது. பணத்திற்கோ, புகழுக்கோ நான் மயங்கமாட்டேன்.
அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு எதுவும் செய்யாமலேயே, அதனை திறந்து வைக்கும் சில அரசியல்வாதிகளும் உள்ளனர். உழைப்பவன் விவசாயி. ஆனால் அனுபவிப்பது வேறு ஒருவர்.
இந்த திட்டத்திற்காக 2018ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. 1650 கோடி மதிப்புள்ள திட்டத்தை மத்திய அரசிடம் இருந்தோ, கடன் வாங்கியோ இத்திட்டத்தை நிறைவேற்றலாம் என அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர். எனினும் 3 மாவட்ட விவசாயிகளின் 60 ஆண்டுகால கனவை நிறைவேற்ற மாநில அரசு நிதியில் இருந்தே திட்டத்தை நிறைவேற்ற உத்தரவிட்டேன்.
அதிமுக ஆட்சியில் அனைத்து ஏரிகளையும் நிரப்ப அவசியம் என இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. அத்திக்கடவு – அவினாசி திட்டத்தின் 85 சதவீத பணிகள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு விட்டன. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வெறும் 15 சதவீத பணிகளை முடிக்காமல் நான்கு ஆண்டுக் காலம் இத்திட்டத்தை திமுக கிடப்பில் போட்டது.
அண்மையில் தான் இதனை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து சென்றார்.
மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்!
தமிழகத்தில் தற்போது திறமையற்ற அரசு தான் ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசு எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டுவர முயற்சி செய்யாமல் திறந்து மட்டுமே வைத்து வருகிறது. விவசாயிகள் உற்பத்தில் செய்த நெல்லை கூட பாதுகாக்க முடியாத முதல்வர் உள்ளார். காவிரி நீரை சேமித்து வைக்க முடியாமல் வீணாக ஆற்று நீர் கடலில் கலக்கிறது. பல்வேறு நதிகளிலும் கழிவு நீர் கலக்கிறது. இப்படி விவசாயிகளை வஞ்சிக்கின்ற ஒரே முதல்வராக ஸ்டாலின் உள்ளார்.
ஆனால் ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கு ஆதரவாய் நின்றது அதிமுக அரசாங்கம் மட்டுமே. இங்கு வந்துள்ள விவசாயிகளாகிய நீங்கள் கேட்டுக்கொண்டபடி, மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்து எந்தவித இடையூறு இன்றி அத்திக்கடவு அவினாசி திட்டம் – 2 தொடங்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த நேரத்தில் எனக்கு இப்படியொரு நிகழ்ச்சியை நடத்திய விவசாயிகளாகிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.