சென்னைக்கு இன்று (ஏப்ரல் 8) வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்கும் நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகிறார்.
சென்னை விமான நிலையத்திற்கு மதியம் 2.30 மணிக்கு வருகை தரும் பிரதமர் மோடி ரூ.1,260 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
அதனைத் தொடர்ந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னை – கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைக்கிறார். பின்னர் பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள உள்ளார் பிரதமர் மோடி.

இதற்கிடையே, சென்னை வரும் பிரதமரை சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தனித்தனியாக நேரம் கேட்கப்பட்டிருந்தது.
நேற்று வரை இதுகுறித்து தகவல் வெளிவராத நிலையில், தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி மதியம் 2.30 மணிக்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்கும் நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இருவரும் தனித்தனியாக பிரதமரை சந்தித்து பேசுவதற்கான நேரம் ஒதுக்கப்பட்டதாக இதுவரை எந்த தகவலும் உறுதிசெய்யப்படவில்லை.
கிறிஸ்டோபர் ஜெமா