தமிழகத்தின் நிகழ்காலத்தைவிட எதிர்காலம் மிகமோசமான நிலையில் உள்ளது. 2023 டிசம்பரில் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களிலும், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும் பெருமழை பெய்தது. இந்த மழையால் இலட்சக்கணக்கான வீடுகள் மூழ்கின. பல்லாயிரம் கோடிகளுக்கு மக்களின் சொத்துகள் சேதமடைந்தன. பலர் இறந்தார்கள். இதில் நாம் கவனிக்க வேண்டியது இவை ஏதோ தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல… இவை ஒரு தொடர் கதையின் தொடக்கப் பகுதிகள் என்பதைத்தான்.
– இப்படியாக நாம் தமிழர் அமைப்பை சார்ந்தவர்கள் வெளியிட்டிருக்கும் ஒரு கட்டுரை பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
காலநிலை மாற்றம் எனும் அபாயம்!
காலநிலை மாற்றம் ஒரு உலகளாவிய சிக்கல். ஐ.நா.வைச் சார்ந்தியங்கும் ஐ.டி.எம்.சி (IDMC) வெளியிட்ட தரவுகளின்படி2022 ஆம் ஆண்டில் மட்டும் தெற்காசியாவில் 1.25 கோடி மக்கள் சொந்த நிலத்தில் அகதிகளாகியிருக்கின்றனர். அவர்களில் 5ல் ஒருவர் இந்திய ஒன்றியத்தைச் சேர்ந்தவர், இதில் 90 % இடப்பெயர்வுக்கு வெள்ளமே காரணம் அந்த நிலை தொடர்ந்து மோசமடைந்துவருகிறது.
உலக நாடுகளிடையேயான பாரீஸ் ஒப்பந்தம் 2015ஆம் ஆண்டிலேயே ‘புவியின் சராசரி வெப்பநிலை உயர்வை 2% குறைக்கவேண்டும், அதற்கு 2030ஆம் ஆண்டுக்குள் பசுமை இல்ல வாயுக்கள் காற்றில் கலப்பதை 43% குறைத்தாக வேண்டும்’ என்றது. ஆனால் அதற்கான நடவடிக்கைகள் ஏதும் நடக்கவில்லை.
இப்படியே புவி வெப்பம் உயர்ந்து, ஆர்க்டிக் பனிப்பாறைகள் கரைந்தால் 2050ஆம் ஆண்டுக்குள் பல கடலோர நகரங்கள் காணாமல் போய்விடும். அப்படியாக அழிய உள்ள நகரங்களின் பட்டியலில் சென்னை முன்வரிசையில் இருக்கிறது. மழை வெள்ளத்தையே சமாளிக்க முடியாத சென்னை இயற்கை சீற்றங்கள் வந்தால் என்ன ஆகும் என சிந்தித்துப் பாருங்கள்.
ஒன்றிய அரசின் அலட்சியமும் ஆணவமும்:
கொலம்பியா மற்றும் யேல் பல்கலைக்கழகங்கள் வெளியிடும் உலக அளவிலான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் (Global Environment Performance Index) 2022ஆம் ஆண்டின் நிலவரப்படி இந்திய ஒன்றியம் 180 வது மற்றும் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது.
மோசமான காற்று மாசு, அதிக பசுமை இல்ல வாயு வெளியீடு ஆகிய காரணங்களினால் இந்தியா பட்டியலில் இறுதி இடத்தைப் பெற்றிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2021ஆம் ஆண்டின் உலக காற்றுத் தர அறிக்கை(World air quality report) யின்படி இந்தியாவின் தலைநகர் டெல்லி உலகிலேயே மிகவும் மாசுபட்ட காற்றையுடைய தலைநகராக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மேலும் இந்த இடத்தை 4ஆவது முறையாக டெல்லி தக்கவைத்தும் உள்ளது. இதே அறிக்கை உலகில் அதிகம் மாசுபட்ட நூறு நகரங்களில் 63 நகரங்கள் இந்திய ஒன்றியத்தில் இருப்பதாகக் கூறுகிறது.
இந்திய ஒன்றியத்தில் சுற்றுச் சூழலை மாசுபடுத்தும், மக்களுக்கு எதிரான நாசக்காரத் திட்டங்களை காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் மாறிமாறி நிறைவேற்றின என்பதும், அதற்கு தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகள் மாற்றி மாற்றி ஒத்துழைத்தன என்பதும் வரலாறு. இதற்கு ஸ்டெர்லைட், நியூட்ரினோ, கூடங்குளம் போன்ற பல சாட்சிகள் உள்ளன.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்ததற்கு மக்களைச் சுட்டுக் கொன்றது அதிமுக அரசு என்றால் அந்தக் கொலையில் ஈடுபட்டவர்களை அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கைக்கு எதிராகப் பாதுகாத்து, பதவி உயர்வு கொடுத்தது திமுக அரசு. ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி கொடுக்கும் கோப்பில் ஸ்டாலின் கையெழுத்திட்டார் என்றால் சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்டார்.
கூடங்குளம் அணுவுலை மற்றும் தேனி நியூட்ரினோ ஆய்வகத் திட்டங்களை அதிமுக மக்கள் எதிர்ப்பை மீறி செயல்படுத்தியது என்றால் பரந்தூர் விமான நிலையம், செய்யாறு சிப்காட் ஆகியவற்றுக்காக வயல்களையும், நீர்நிலைகளையும் மக்கள் எதிர்ப்பை மீறி திமுக பிடுங்கி வருகின்றது. எனவே இவ்விரு கட்சிகளும் மக்கள் விரோதத் திட்டங்களை செயல்படுத்துவதில் ஒன்றிய ஆட்சியாளர்களின் பங்குதாரர்களாகவே உள்ளனர்.
தேவை வளர்ச்சியல்ல மீட்சி!
இந்திய ஒன்றியம் முழுவதும் தீவிர காலநிலை பேரழிவு நிகழ்வுகளால் மிக அதிகமாக பாதிப்படையக் கூடிய மாவட்டங்களின் பட்டியலில் சென்னை 7வது இடத்திலும், திருநெல்வேலி 23ஆம் இடத்திலும் உள்ளதாக ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் தண்ணீருக்கான குழுவானது (Council on Energy, Environment and Water) கூறியுள்ளது.
ஆனால், இதையெல்லாம் கவனிக்காமல் மீண்டும் மீண்டும் வளர்ச்சியின் பெயரால் சூழலியல் பாதிப்புகளையே தமிழக அரசு ஊக்குவிக்கிறது. ஒருபக்கம் புயலும் கனமழையும் மரங்களை அழித்தால் மறுபக்கம் அரசும் நகரமயமாக்கலின் பெயரால் மரங்களை வெட்டுகிறது. ஒரு பக்கம் மழை அதிகரித்து வீடுகளுக்குள் மழைநீர் செல்கிறது என்றால் மறுபக்கம் அரசும் சாலையின் மட்டங்களை உயர்த்தி மழை நீரை வீடுகளுக்குள் அனுப்புகிறது.
தொலைநோக்கும் திட்டமும் இல்லாமல் பெயருக்கு திடக் கழிவு மேலாண்மை, மழைநீர் வடிகால் போன்றவை அமைக்கப்படுகின்றன. இவை செலவுக் கணக்குகளைத் தவிர எதற்கும் பயன்படுவதில்லை. சூழலியல் அபாயமணிகள் ஒலிக்கும் இன்றைய சூழலில் தமிழகத்திற்கு அவசரத் தேவை தொழில் வளர்ச்சி அல்ல, சூழலியல் மீட்சி. ஆனால் அதை ஆள்பவர்கள் உணரவில்லை.
2015 ஆம் ஆண்டு சென்னை எதிர்கொண்ட பெருவெள்ளத்துக்குப் பின்பும் கூட தமிழ்நாடு அரசு பாடங்கற்காமல் இருப்பதால் தான் 2023 ஆம் ஆண்டு வெள்ளத்தில் மீண்டும் சென்னை தத்தளித்தது. நிலைமை ஏற்கெனவே மோசமாக இருக்கும்போது, வெள்ள பாதிப்பைப் பன்மடங்காக்கும் அதானியின் காட்டுப்பள்ளித் துறைமுக விரிவாக்கத்துக்கும் அரசு அனுமதி கொடுத்துள்ளது. சென்னையில் ஏற்கெனவே 90% நீர்நிலைகள் அழிந்துவிட்டன. இப்போது மீதமுள்ள 10% நீர்நிலைகளும் ஆக்கிரமிப்பில் உள்ளன. மனிதர்கள் சென்னையை கான்கிரீட் கல்லறையாக்க முயற்சி செய்தால், இயற்கை அதை நீர்க் கல்லறையாக மாற்றுவதை நாம் தடுக்க முடியாது.
சூழலியல் சிக்கல்களுக்கு நாம் தமிழர் முன்வைக்கும் கொள்கைகளும், தீர்வுகளும்!
இன்றைய தமிழக அரசியல் சூழலில், சூழலியல் சார்ந்த அரசியலைத் தொடர்ந்து பேசும் கட்சியாகவும், சூழல் மீட்பு மற்றும் காப்புப்பணிகளை நேரடியாகக் களத்தில் இறங்கிச் செய்யும் ஒரே கட்சியாகவும் நாம் தமிழர் கட்சி உள்ளது. சூழலியலுக்கென தனி பாசறையையே அமைத்து, அதில் அந்தத் துறைசார்ந்த வல்லுநர்களை தலைமைப் பொறுப்பில் வைத்து, பல்வேறு வேலைத்திட்டங்களை நாம் தமிழர் கட்சி மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் சூழலியலில் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்துக்குமே மிகச்சிறந்த முன்மாதிரியாக நாம் தமிழர் கட்சி உள்ளது.
நாம் தமிழர் கட்சி தனது வரைவில் கூறியுள்ள பத்தாண்டுப் பசுமைத் திட்டம், பலகோடிப் பனைத்திட்டம், மறுசுழற்சி அடிப்படையிலான திட & திரவக்கழிவு மேலாண்மை, நீர்வழித்தட ஆக்கிரமிப்பு நீக்கம், நீர்நிலைகள் மீட்டெடுப்பு, மறுசீரமைப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள், ஒருங்கிணைந்த விவசாயப் பண்ணைகள், மழைநீர் சேகரிப்பு, பல்லுயிர்ப்பெருக்க உயிர்ச்சூழல் பாதுகாப்பு, மறைநீராக நமது நீர்வளம் களவு போவதைத் தடுக்கும் சூழலுக்கேற்ற நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகள், கனிமவளம் மற்றும் காட்டுவளப்பாதுகாப்பு, மாற்றுமின் பெருக்கம்,
தன்னிறைவையும் தற்காப்பையும் இலக்காகக் கொண்ட தற்சார்புப் பசுமை உற்பத்தித் தாய்ப்பொருளாதாரக் கொள்கை சார்ந்த முன்னோடித் திட்டங்கள் – ஆகிய திட்டங்கள் சுற்றுச் சூழல் களத்தில் கவனம் ஈர்ப்பவையாக உள்ளன. நாம் தமிழர் கட்சியைப் பார்த்து திமுக உள்ளிட்ட கட்சிகள் சூழலியல் பாசறைகளை அமைத்துள்ளன என்ற அளவில் இவர்கள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறார்கள்.
நாளை தமிழகம் எதிர்கொள்ள உள்ள சிக்கல்களைத் தீர்க்க, சூழலியல் சார்ந்த அறிவுள்ள ஒரு கட்சியின் ஆட்சி அவசியம் என்பது தேர்தல் களத்தில் வாக்காளர்கள் கவனிக்க வேண்டியது. ஆனால் வாக்காளர்கள் அப்படியெல்லாம் கவனித்துதான் வாக்களிக்கிறார்களா? – என்ற கேள்வியும் சூழலியல் ஆர்வலர்களுக்கு எழாமல் இல்லை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
யுபிஎஸ்சி தேர்வில் சாதனை படைத்த பிரசாந்த்: கைகொடுத்த “நான் முதல்வன்” திட்டம்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!