‘சூழல் உணர்வு மண்டலம்’ என வரையறுத்து, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி, இதில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று (ஆகஸ்ட் 29) வெளியிட்டுள்ள செய்தியில், “வனவிலங்குகள் சரணாலயம் தேசியப் பூங்கா போன்றவற்றைச் சுற்றிலும் 1 கி.மீ பரப்பில், ’சூழல் உணர்வு மண்டலம்’ என வரையறுத்து,
அப்பகுதிகளிலிருந்து குடியிருப்புகள், விளைநிலங்கள் உள்ளிட்ட மனித நடமாட்டமுள்ள யாவற்றையும் அப்புறப்படுத்த வேண்டுமென உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்துள்ள தீர்ப்பு.
வனப்பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, தமிழகத்தில் நீலமலை – கூடலூர் பகுதியிலும் அதனையொட்டியுள்ள கேரளப் பகுதியிலும் 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சார்ந்த எளிய மக்கள்,
தங்களின் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளையும் விளைநிலங்களையும் பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இன்று கூடலூரில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு மக்கள் நலன்களைக் கருத்தில் கொண்டு செப்டம்பர் 3க்குள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வேண்டும்.
இதுகுறித்து சட்டமன்ற சிறப்பு அமர்வைக் கூட்டி உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் மக்கள் பாதிக்கப்படாத வகையில் சட்டப்பூர்வமான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்”
என்று தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
அன்புமணியை தொடர்ந்து திருமாவளவன் : பரந்தூர் மக்களிடம் கருத்து கேட்பு!