பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் கணக்கில் வராத ₹1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்க இயக்குனரகம் இன்று (மார்ச் 11) சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
ரயில்வே வேலைக்கு நிலம் பெற்ற மோசடி தொடர்பான வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
2004-09 காலகட்டத்தில் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, இந்திய ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் குரூப் டி பதவிகளில் பல்வேறு நபர்கள் நியமிக்கப்பட்டதாகவும்,
அதற்குப் பதிலாக அவர்கள் தங்கள் நிலத்தை லாலு பிரசாத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை லாலு குடும்பத்தினர் மீது வழக்குப் பதிந்தன.
அந்த வழக்கு தொடர்பாக பீகாரில் உள்ள பல நகரங்களிலும் மற்றும் பிற இடங்களிலும் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது.
லாலு பிரசாத் யாதவின் தெற்கு டெல்லி வீடு, லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ், மகள்கள் ராகினி யாதவ், சந்தா யாதவ் மற்றும் ஹேமா யாதவ் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
இது தொடர்பாக அமலாக்கத் துறை இன்று (மார்ச் 11) மாலை தனது ட்விட்டர் பக்கத்தில், “ரயில்வே வேலைக்கான நில மோசடி தொடர்பாக 24 இடங்களில் அமலாக்கத்துறை மார்ச் 10 ஆம் தேதி சோதனை நடத்தியது.
இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ஒரு கோடி ரூபாய் பணம், 1900 அமெரிக்க டாலர்கள், 540 கிராம் தங்கம், ஒன்றரை கிலோ தங்க நகைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இந்த நேரத்தில் தோராயமாக ரூ. 600 கோடி வரையிலான வருமானம் கண்டுபிடிக்கப்பட்டது.” என்று தெரிவித்துள்ளது.
லாலுவின் மகனும், பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வியின் டெல்லி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதோடு அவரிடம் 11 மணி நேர விசாரணையும் நடத்தப்பட்டது.
மீண்டும் இன்று (மார்ச் 11) சனிக்கிழமை ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பியும் அவர் இன்று ஆஜராகவில்லை.
அமலாக்கத்துறையின் அறிவிப்புக்கு பதில் கொடுத்துள்ள பிகார் துணை முதல்வரான தேஜஸ்வி யாதவ்,
“ஆங்காங்கே தவறான வதந்திகளைப் பரப்புவதற்குப் பதிலாக ரெய்டுக்குப் பிறகு கையெழுத்திட்ட பஞ்சநாமா (பிடிப்புப் பட்டியல்) பட்டியலைப் பகிரங்கப்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.’
–வேந்தன்
அரசியலில் இருந்து விலகியது ஏன் : போட்டுடைத்த நடிகர் ரஜினிகாந்த்
சுப்மன் கில், கோலி அபாரம்: டிராவை நோக்கி செல்லும் 4வது டெஸ்ட்!