டிஜிட்டல் திண்ணை: அமலாக்கத் துறை விசாரணை: விரக்தியில் சீனியர் அமைச்சர்!

அரசியல்

மொபைல் டேட்டா ஆன் செய்ததும்  ஃபேஸ்புக் மெசஞ்சரில் ஒரு செய்தி வந்திருந்தது.

“கடந்த ஜூலை 27 ஆம் தேதி தமிழக  கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகியிருந்தார். பிரதமர் மோடி வருகை பற்றிய செய்திகளே ஊடகங்களை ஆக்கிரமித்திருந்ததால் இதுகுறித்து பெரிதாக விவாதிக்கப்படவில்லை. அமலாக்கத்துறை விசாரணைக்குப் பிறகான நிகழ்வுகள் என்ன?’ என்று கேள்வி எழுப்பியிருந்தது மெசஞ்சர்.

அதற்கு ஒரு ஸ்மைலியை பதிலாக அனுப்பிய வாட்ஸ் அப் அதுகுறித்த  செய்தியை டைப் செய்யத் தொடங்கியது.

ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு…

 “2006-11 திமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தார் ஐ.பெரியசாமி. அப்போது காவல்துறை உயரதிகாரியாக இருந்த ஜாபர் சேட் தனது மனைவிக்கு சமூக சேவகர் என்ற கோட்டாவில் அரசு நில ஒதுக்கீடு பெற்றார். அதன் மூலம் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை ஜாபர் சேட் மீது வழக்குப் பதிவு செய்தது.  இந்த வழக்கை ஜாபர் சேட் நீதிமன்றத்தில் எதிர்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் ஒன்பது ஆண்டுகள் கழித்து 2020 ஆம் ஆண்டு இந்த விவகாரத்தை மத்திய அரசின் அமலாக்கத்துறை கையிலெடுத்தது. கடந்த மார்ச் மாதம் ஜாபர் சேட்டை அமலாக்கத்துறை இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு அழைத்தது.

அவரிடம் நடைபெற்ற விசாரணையை அடிப்படையாக வைத்து அப்போதைய வீட்டு வசதித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. பெரியசாமி இன்றைய திமுக ஆட்சியிலும் அமைச்சராக இருப்பதால் அமலாக்கத்துறையின் இந்த சம்மன் பரபரப்பாக பேசப்பட்டது. கண்  அறுவை சிகிச்சை காரணமாக முதல் சம்மனுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராகவில்லை

இதையடுத்து மோடி தமிழகம் வருவதற்கு முதல் நாளான ஜூலை 27 ஆம் தேதி ஐ.பெரியசாமியை விசாரணைக்கு அழைத்து அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியது. அதன்படி சென்னை  அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் ஐ. பெரியசாமி ஆஜரானார்.

அமைச்சரிடம் கிடுக்கிப் பிடி கேள்வி

அன்று காலை 10.30 மணிக்கு ஆஜரான அமைச்சர் ஐ.பெரியசாமியை இரவு 9.30 மணி வரை விசாரித்திருக்கிறார்கள் அமலாக்கத் துறையினர். விசாரணையின் போதே அதிகாரிகளுக்கு  தொடர்ந்து போன் கால்கள் வந்துகொண்டே இருந்திருக்கின்றன.  போன் அழைப்புகள் வருவதும் வெளியே எழுந்து போய் பேசுவதுமாக விசாரணை தொடர்ந்திருக்கிறது.  எல்லாவற்றுக்கும் பதிலளித்திருக்கிறார் ஐ.பெரியசாமி.

அரசு வழிகாட்டுதல்களின்படிதான் தெளிவாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த இடத்தின் அரசு மதிப்பு என்னவோ அந்த மதிப்புக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று பதிலளித்துள்ளார் அமைச்சர் பெரியசாமி.  விசாரணை முடித்துவிட்டு திரும்பிய பிறகும் திமுகவிடம் இருந்து பெரியசாமிக்கு எந்த போனும் வரவில்லை.  

விசாரணையை விட வருத்தம் இதுதான்

இப்போதைய அமைச்சர்களில் சீனியர்களில் ஒருவரான பெரியசாமிக்கு நேர்ந்த இந்த விசாரணையை திமுக பெரிய அளவு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான் விசாரணையை விட அவருக்கு அதிக வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் ஐ.பி.க்கு நெருக்கமானவர்கள்.

திமுக ஆட்சி பத்து வருடங்களுக்குப் பிறகு 2021 இல்  அமைந்ததும், சீனியரான ஐ.பெரியசாமிக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறை வழங்கப்படும் என்று தென் மாவட்ட திமுக மட்டுமல்ல, தென் மாவட்ட அரசியல் வட்டாரத்திலும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஜூனியர்களுக்கு வழங்கப்படும் கூட்டுறவுத் துறையை சீனியரான பெரியசாமிக்கு வழங்கினார் ஸ்டாலின்.

இது பலருக்கும் ஆச்சரியமாகவே இருந்தது.  தனிப்பட்ட முறையில் ஐ.பெரியசாமிக்கு அதிர்ச்சியையும் வேதனையையும்  ஏற்படுத்தியது. முதல்வரின் மாப்பிள்ளையை வெளிப்படையாக விமர்சனம் செய்து பேசிவிட்டார் அதனால்தான் அவரது முக்கியத்துவம் குறைக்கப்பட்டுவிட்டது என்று அறிவாலயத்திலேயே பேச்சுகள் எழுந்தன. 

தனக்கான முக்கியத்துவமும், சீனியருக்குள்ள மரியாதையும் அமைச்சரவையில் இல்லை என்பதை உணர்ந்த ஐ.பெரியசாமி தனது வேதனையை சில செயல்பாடுகள் மூலமாக ஸ்டாலினுக்கே உணர்த்தினார். அரசு சார்பில் தனக்கு க்ரீன்வேஸ் சாலையில் ஒதுக்கப்பட்ட வீட்டை இன்னமும் ஐ.பெரியசாமி ஏற்றுக் கொள்ளவில்லை.

சட்டமன்றம் நடக்கும் நாட்களிலும், அரசுப் பணிகள் சென்னையில் இருக்கும் நாட்களிலும் தனியார் ஹோட்டலிலேயே தங்கும் பெரியசாமி மற்ற நாட்களில் திண்டுக்கல்லில்தான் இருக்கிறார். ஏற்கனவே தனது முக்கியத்துவம் குறைக்கப்பட்ட வருத்தத்தில் இருக்கும் ஐ.பெரியசாமி தற்போது அமலாக்கத்துறை விசாரணைக்குப் பிறகு மேலும் வருத்தம் அடைந்திருக்கிறார்.

அமலாக்கத்துறை விசாரணை பற்றி முதல்வரோ, கட்சியின் சீனியர்களோ தன்னிடம் ஒருவார்த்தை பேசவில்லை என்பதுதான் பெரியசாமியின் வருத்தம். இதையும் ஒரு புறக்கணிப்பு மூலமாக முதல்வருக்கு உணர்த்தினார். அதாவது, பெரியசாமியை அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்படுத்தியதற்கு அடுத்த நாள்தான் 28 ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வந்தார்.

சென்னை வரும் மோடியை வரவேற்க தமிழக அரசு சார்பில் மூன்று இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சென்னை விமான நிலையம்,  அதன் பின் அடையாறு படைத் தளம், அங்கிருந்து விழா நடக்கும் இடமான நேரு ஸ்டேடியம் என மூன்று இடங்களிலும் தமிழக அரசு சார்பில் பிரதமரை வரவேற்க திட்டமிட்டு அதற்கு உரிய அமைச்சர்களையும்  நியமித்திருந்தார் முதல்வர்.

பிரதமரை வரவேற்க போகவில்லை

அந்த வகையில் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை திமுக பொதுச் செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன், மக்களவை குழு திமுக தலைவர் டி.ஆர்.பாலு, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி,  ஆகியோர் வரவேற்றனர். அங்கிருந்து அடையாறு விமானப் படைத் தளத்துக்கு ஹெலிகாப்டரில் வந்த பிரதமரை  வரவேற்க  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி  மக்களவை திமுக துணைத் தலைவர் கனிமொழி ஆகியோரை பணித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின். அங்கிருந்து புறப்பட்டு நேரு ஸ்டேடியம் வந்ததும் முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்.

அமலாக்கத்துறை ரெய்டுக்குப் பிறகு தன்னிடம் முதல்வர் எதுவும்  பேசாததால் பெரிதும் வருத்தம் அடைந்த ஐ.பெரியசாமி பிரதமரை வரவேற்க போகவில்லை. நேராக திண்டுக்கல் சென்றுவிட்டார். இந்தத் தகவல் அறிந்ததும் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் பெரியசாமியுடன் பேசியிருக்கிறார். அதனால் இப்போதைக்கு பெரியசாமி சமாதானம் அடைந்திருப்பதாக தகவல்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள் : கோடியில் வருவாய்…

+1
0
+1
2
+1
1
+1
2
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *