enforcement officers raid in Delhi
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு தொடர்புடைய 12 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை 5 முறை சம்மன் அனுப்பியும், அனைத்தையும் புறக்கணித்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 6) முதல்வரின் உதவியாளர் உட்பட ஆம் ஆத்மி கட்சிக்கு தொடர்புடையவர்களின் வீடுகளில் காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்ய சபா எம்.பி., என் டி குப்தா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட செயலாளர் பிபவ் குமார், டெல்லி நீர் வள வாரிய முன்னாள் உறுப்பினர் ஷலப் குமார் ஆகியோரது வீடுகளில் சோதனை நடந்து வருகிறது.
டெல்லி நீர் வளவாரியம் மூலம் ரூ. 30 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்கு சட்டவிரோதமாக ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மற்றும் டெல்லி அரசின் ஊழல் தடுப்பு பிரிவு (ஏபிசி) தொடர்ந்த இரண்டு வழக்குகளின் அடிப்படையில், அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமலாக்கத் துறை ரெய்டு டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், “இப்படி ரெய்டு நடத்துவதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியை அடக்க பாஜக அரசு முயற்சிக்கிறது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தற்போது வரை ஒரு ரூபாய் கூட அமலாக்கத் துறையால் மீட்க முடியவில்லை. எந்த விதமான ஆதாரங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று மாநில அமைச்சர் அதிஷி கூறியுள்ளார்.
இந்த ரெய்டு தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம், “அமலாக்கத் துறை இப்போது ஆட்சேர்ப்பு இயக்கத்தை நடத்த வேண்டும்.
அப்போதுதான் தேர்தலுக்கு முன்னதாக ஒவ்வொரு எதிர்க்கட்சியினர் வீட்டிலும் அவர்களால் சோதனை நடத்த முடியும்” என்று விமர்சித்துள்ளார்.
ஏற்கனவே ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை செய்து அவரை அமலாக்கத் துறை கைது செய்திருக்கும் நிலையில் அடுத்து கெஜ்ரிவாலை குறிவைத்து சோதனை நடந்து வருவதாக ஆம் ஆத்மி கட்சி கூறுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
இஸ்லாமிய கைதிகளோடு ஆர்.எஸ்.எஸ்.கைதிகளும் விடுதலை: ஆளுநரின் பக்கா பிளான்!
‘கிராமி’ இசையமைப்பாளரின் ‘சூப்பர்ஹிட்’ சினிமா பாடல்கள்!
enforcement officers raid in Delhi