விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் ஆர்ஜூனா மற்றும் அவரது மாமனார் லாட்டரி மார்ட்டின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (நவம்பர் 14) காலை முதல் சோதனை செய்து வருகின்றனர்.
கோவை துடியலூரில் பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின், வீடு மற்றும் அலுவலகத்தில் இரு கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே போன்று சிக்கிம் மாநிலத்தில் உள்ள மார்ட்டினுக்கு சொந்தமான வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த சோதனையின் ஒரு பகுதியாக சென்னை தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள அவரது மருமகனும் விசிக துணை பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜூனா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இரு இடங்களிலும் பாதுகாப்பிற்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோரி கடந்த மாதம் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா எழுப்பிய கேள்வி திமுக கூட்டணியில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக ஆதவ் அர்ஜுனா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தரப்பில் கூறிய போதும், இந்த நாள் வரை திருமாவளவன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதனைத்தொடர்ந்து ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனமும் விகடன் பிரசுரமும் இணைந்து நடத்தும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவும், தவெக தலைவர் விஜய்யும் பங்கேற்க இருக்கிறார்கள் என்ற செய்தி விவாதத்திற்குள்ளானது.
இப்படி சமீபகாலமாக ஆதவ் அர்ஜூனா தொடர்ந்து ஊடக வெளிச்சத்தில் இருந்து வரும் நிலையில் அவரது வீட்டிலும், அவரது மாமனார் லாட்டரி மார்ட்டின் வீட்டிலும் இன்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பட்டத்தை துறந்த கமல் : திமுகவை விமர்சித்த தமிழிசை… முரளி அப்பாஸ் கண்டனம்!
INDvsSA : வெற்றியுடன் துவங்கிய திலக் வர்மாவின் முதல் சதம்!
டாப் 10 நியூஸ் : மருத்துவர்கள் வேலைநிறுத்தம் முதல் கங்குவா ரிலீஸ் வரை!