செந்தில்பாலாஜி இதய பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பிறகு காவேரி மருத்துவமனையில் ஓய்வெடுத்து வரும் நிலையில்.,. அமலாக்கத்துறையினர் செந்தில்பாலாஜி அவரது தம்பி அசோக் பற்றிய விரிவான விசாரணையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
தலைமறைவாக இருக்கும் அசோக்கிற்கு மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில், போக்குவரத்துக் கழக வேலைக்கு பணம் வாங்கிய விவகாரம் தவிர வேறு விவகாரங்களில் செந்தில்பாலாஜி மற்றும் அசோக்கிற்கு நெருக்கடி கொடுப்பதற்கான சட்ட ரீதியான முயற்சிகளில் இருக்கிறது அமலாக்கத்துறை.
இந்த வகையில்தான் அப்பல்லோ, சிம்ஸ் போன்ற மருத்துவமனைகளில் அசோக்கின் நண்பர்களது மருந்து சப்ளை நிறுவனம் வணிக பரிவர்த்தனை நடத்தியது பற்றி சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இதற்கிடையே கடந்த இரண்டு வருடங்களாக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) எம்.டி.யாக இருந்த எல்.சுப்பிரமணியனை அமலாக்கத்துறையினர் தங்களது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருப்பதாகவும், அவரது வீட்டிலும் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியிருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன.
திமுக ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக் எம்.டி.யாக நியமிக்கப்பட்டார் எல்.சுப்பிரமணியன். இவர் கன்ஃபர்டு ஐ.ஏஎஸ்., அதிகாரி ஆவார். 2005 அதிமுக ஆட்சியில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தகுதி உயர்த்தப்பட்டார். மதுரை, விழுப்புரம் கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் இருந்துள்ளார். 2021 மே 7 ஆம் தேதி திமுக ஆட்சி அமைந்ததும் மே 27 ஆம் தேதி வெளியிடப்பட்ட அதிகாரிகள் மாற்றத்தில்… புவியியல் மற்றும் கனிம வளத்துறை ஆணையராக இருந்த எல்.சுப்பிரமணியன் டாஸ்மாக் எம்.டி.யாக நியமிக்கப்பட்டார்.
முழுதாக இரண்டு வருடங்கள் அந்த பதவியில் இருந்த எல்.சுப்பிரமணியன் கடந்த 2023 மே மாதம் விழுப்புரம், செங்கல்பட்டில் நடந்த கள்ளச்சாராய மரணங்களை அடுத்து மே 16 ஆம் தேதி அப்பதவியில் இருந்து வேளாண் துறை ஆணையராக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக திண்டுக்கல் கலெக்டராக இருந்த விசாகன் டாஸ்மாக் எம்.டி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
“டாஸ்மாக் எம்.டி.யாக எல்.சுப்பிரமணியன் இருந்த இந்த இரு வருடங்கள் முழுதும் டாஸ்மாக்கில் கரூர் கம்பெனியின் ஆதிக்கம் நிலவியது. ஒவ்வொரு மாவட்ட மேலாளர் அலுவலகத்திலும், ஏன் சென்னையில் இருக்கும் எம்டி அலுவலகத்தில் கூட கரூர் கம்பெனி ஆட்கள் தனி அதிகார மையமாக செயல்பட்டு வந்தார்கள். இதுகுறித்து தொழிற்சங்கங்களின் சார்பில் எம்.டி.யான எல்.சுப்பிரமணியனை நேரில் சந்தித்து பல முறை புகார்கள் கூறியும் அவர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
முழுக்க முழுக்க செந்தில்பாலாஜியின் பொம்மை அதிகாரியாகவே செயல்பட்டார். டாஸ்மாக்கில் கரூர் கம்பெனியின் நடவடிக்கைகள் பற்றியும், ஒவ்வொரு மாவட்ட அளவிலும் நடந்த வசூல் விவரங்களும் சுப்பிரமணியனுக்குத் தெரியும். அவர் செந்தில்பாலாஜிக்கு ஃபிளக்ஸிபிளாகவே இந்த இரு வருடங்களும் செயல்பட்டார்’ என்கிறார்கள் டாஸ்மாக் தொழிற்சங்க வட்டாரங்களில்.
இந்தப் பின்னணியில்தான்… டாஸ்மாக்கில் கரூர் கம்பெனியின் வசூல் வேட்டை பற்றியும், அதனால் டாஸ்மாக் நிறுவனத்துக்கு ஏற்பட்டிருக்கும் நட்டம் பற்றியும் எல்.சுப்பிரமணியனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள். இது அதிகாரிகள் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
–வேந்தன்
“மோடி ஆட்சியில் இந்தியா வளர்ச்சியடைந்து வருகிறது” – அஜித் பவார்
வெஸ்ட் இண்டீஸ் தோல்வி: முன்னாள் வீரர்கள் சொல்வது என்ன?