டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்க இயக்குனரகம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. விசாரணை ஆணையத்தில் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி வியாழக்கிழமை ஆஜராகுமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
டெல்லி ஆம் ஆத்மி அரசு முதலில் செயல்படுத்தி பின் ரத்து செய்த மதுபான கொள்கையில் பெரும் மோசடி நடந்திருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியது.
இதில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதாக அமலாக்கத் துறை நுழைந்தது. டெல்லி துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியாவை கைது செய்தது.
ஐந்து மாநில தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை. நவம்பர் 2 ஆம் தேதி ஆஜராக கோரி அனுப்பப்பட்ட அந்த சம்மனுக்கு பதிலளித்த அரவிந்த் கேஜ்ரிவால்,
‘இந்த சம்மன் தெளிவற்றதாக உள்ளது. சந்தேகப்பட்டு என்னை அழைக்கிறீர்களா சாட்சியாக என்னை அழைக்கிறீர்களா என்ற விவரம் அதில் இல்லை.
மேலும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைவர் என்ற முறையில் அழைக்கப்படுகிறேனா அல்லது டெல்லி முதல்வர் என்ற அடிப்படையில் அழைக்கப்படுகிறேனா என்ற தெளிவும் இல்லை.
இது அரசியல் ரீதியான சம்மன். நான் மத்திய பிரதேசம் தேர்தல் பிரச்சாரம் செல்லும் நிலையில் அதை தடுப்பதற்காக இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது” என்று அமலாக்கத்துறைக்கே கடிதம் எழுதினார் கேஜ்ரிவால்.
இந்த நிலையில்தான் மீண்டும் இப்போது டிசம்பர் 21 ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை.
ஆனால் இந்த சம்மனுக்கும் அரவிந்த் கேஜ்ரிவால் ஆஜராக மாட்டார் என்று தெரிகிறது.
இந்த நோட்டீஸ் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி யும், தேசிய பொதுச் செயலாளருமான (அமைப்பு) சந்தீப் பதக் இன்று செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
“அமலாக்கத்துறையின் இந்த சம்மன் குறித்து சட்ட வல்லுநர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இருப்பினும் கெஜ்ரிவால் டிசம்பர் 19 முதல் 30 வரை விபாசனா தியானத்தில் ஈடுபட இருக்கிறார்.
வருடந்தோறும் அவர் சில நாட்கள் விபாசனா தியான பயிற்சியில் ஈடுபவது வழக்கம். அதுபோல இந்த வருடமும் அவர் விபாசனா தியான பயிற்சிக்கு செல்வது ஏற்கனவே திட்டமிட்டப்பட்டது. அமலாக்கத்துறை சம்மன் குறித்து சட்ட ரீதியாக அணுகப்படும்” என்றார்
இந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு அனுப்பப்படும் இரண்டாவது சம்மன் இதுவாகும்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தொடர் வெள்ளம்: மோடியை நாளை சந்திக்கிறார் ஸ்டாலின்
புரட்டி எடுத்த மழை : இடிந்து விழுந்த வீடு – நெல்லை காட்சிகள்!