அமலாக்கத்துறை இயக்குநர் மூன்றாவது முறையாக நீட்டிப்பு: பின்னணி என்ன?

அரசியல்

மத்திய அரசின் கீழ் இயங்கும் மிக வலிமையான இயக்குநரகம் தான் அமலாக்கத்துறை இயக்குநரகம். அமலாக்கத்துறையானது டெல்லியில் தலைமையிடத்தைக் கொண்டு இயங்கி வருகிறது.

இப்படி மிக முக்கியமான இயக்குநரகமான அமலாக்கத்துறையின் இயக்குநரான சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் மீண்டும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட்டிருப்பது தான் தற்போது மிகப்பெரிய கேள்வியை எல்லோர் மத்தியிலும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியப் பொருளாதார சட்டங்களைக் கண்காணிப்பதும், பொருளாதார குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மற்றும் கருப்புப் பணத்தினைக் கட்டுப்படுத்துவதும் தான் அமலாக்கத்துறையின் தலையாய கடமை.

அமலாக்கத்துறையின் மிக முக்கியமான பதவியான இயக்குநர் பதவியில் சஞ்சய் குமார் மிஸ்ரா 2018 ஆம் ஆண்டு அமர்த்தப்பட்டார். இரண்டு ஆண்டுகள் பதவியில் நீடித்த எஸ்.கே.மிஸ்ரா முதலில் 2020 முதல் 2021 வரை ஓராண்டு பதவியில் நீட்டிக்கப்பட்டார்.

அதன் பின்னர் 2021-2022, 2022-2023 என மூன்றாவது முறையாக அவருடைய பதவியை மத்திய அரசு நீட்டித்திருக்கிறது. இதற்கு மத்திய அரசின் கேபினட் நவம்பர் 17ஆம் தேதி ஒப்புதல் அளித்திருக்கிறது.

இந்த நிலையில் இவருடைய பதவி மட்டும் ஏன் நீட்டிக்கப்பட்டு வருகிறது என ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நேரத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த ஆண்டு நாடாளுமன்ற கூட்டத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் இயக்குநர் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு உயர்த்தியுள்ளதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உடனேயே, பல்வேறு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

அதற்கு அவர்கள் சொல்லியிருக்கும் காரணம் என்னவென்றால், இது போன்ற நாட்டின் மிக முக்கியமான உயர்பதவிகளில் இருக்கும் நபர்களை பாஜக கைக்குள் வைத்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் அரசியல் நோக்கில் தான் இந்த மாதிரியான பதவிக்காலம் நீட்டிப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது பாஜக என்றும் கூறியுள்ளனர்.

இது போன்று மத்தியில் ஆளும் பாஜகவிற்கு இசைவாகச் செயல்படுபவர்களுக்குப் பதவிக்காலம் நீட்டிப்பு தரும் பாஜக, பதவிக்காலம் முடிந்த உடனேயே மிக முக்கிய நியமன பதவிகளையும் வழங்கி வருகிறது என எதிர்க்கட்சியினர் காட்டமாக குற்றம் சாட்டி வருகிறார்கள்.

enforcement directorate director sanjay kumar misra tenure extend

ஏன் எதிர்க்கட்சியினர் இப்படி பேசுகிறார்கள் என்பதற்கு ஒரு முக்கிய பின்கதையும் உண்டு என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு ஐந்து ஆண்டுக்காலத்தில் அமலாக்கத்துறையினரின் அதிரடி சோதனை வேட்டை, குறிப்பாக குறி வைத்த மாதிரி எதிர்க்கட்சியினரின் வீட்டில், அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அதில் பல தலைவர்கள் மீது ஏராளமான வழக்குகள் பதியப்பட்டதும் கைது செய்யப்பட்டதும் நாடே அறிந்தது தான்.

அந்த வகையில் மேற்கு வங்கத்தின் சாரதா சிட் பண்ட் மோசடி, கர்நாடகா சுரங்க ஊழல் மோசடி, ராஜஸ்தான் ஆம்புலன்ஸ் ஊழல், ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழல், ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீதான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு என பல்வேறு மாநிலங்களில் அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனை வேட்டைகள் எல்லாமே எதிர்க்கட்சியினர் மேல் தான்.

தமிழ்நாட்டில் திமுகவின் ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீதான ஸ்பெக்ட்ரம் வழக்கு, மாறன் சகோதரர்கள் மீது அமலாக்கத்துறையால் வழக்குகள் போடப்பட்டு, அந்த வழக்கில் பல அதிரடி திருப்பங்களும் ஏற்பட்டது.

தொடர்ச்சியாக ப.சிதம்பரம் மீதான மேக்சிஸ் ஐஎன்எக்ஸ் வழக்குகள், அகிலேஷ் யாதவ் மீதான சுரங்க முறைகேடு, மாயாவதி மீதான நினைவகங்கள் ஊழல் வழக்கு, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த்சோரன் மீதான சுரங்க ஊழல் வழக்கு என பெரும் பட்டியலே அமலாக்கத்துறை வசம் இருக்கிறது.

இப்படி அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கிவிட்டு தப்பிப்பதற்காக பாஜகவில் சேர்ந்தவர்களும் ஏராளமாய் இருக்கிறார்கள்.

அண்மையில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை அவர் சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டார் என சொல்லியிருந்த நிலையில், நீதிமன்றம் சிவில் வழக்குகளில் எப்படி சட்ட விரோத பணப் பரிமாற்றத்திற்கு முகாந்திரம் உள்ளது எனக் கூறி சஞ்சய் ராவத்தை ஜாமீனில் விடுதலை செய்தது நீதிமன்றம்.

அதே மாதிரி மிகச் சமீபத்தில் டெல்லியின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் உதவியாளர் கைது செய்யப்பட்ட சம்பவமும் எல்லோரும் அறிந்ததே. டெல்லியில் நடைமுறைப்படுத்தப்பட்டுத் திரும்பப் பெறப்பட்ட புதிய கலால் கொள்கை முறைகேடு தொடர்பாக மணிஷ் சிசோடியா உட்பட 16 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இதனால் மணிஷ் சிசோடியாவின் வீடு அலுவலகம் எனத் தொடர்ந்த தேடுதல் வேட்டையில் அவருடைய உதவியாளரான தேவேந்திர சர்மா கைது செய்யப்பட்டார்.

இப்படி பல்வேறு தேடுதல் வேட்டைகளில் சிக்கிய அனைவருமே எதிர்க்கட்சியாக இருக்கும் பட்சத்தில், இதன் பின்னணியில் பாஜக அரசு தான் இருக்கிறது எனவும், இந்திய அமலாக்கத்துறையின் மூளையாக பாஜக அரசு செயல்படுகிறது எனக் குற்றம் சாட்டி வருகிறார்கள் எதிர்க்கட்சியினர்.

enforcement directorate director sanjay kumar misra tenure extend

அதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி, மும்பையில பிசியா இருக்காங்க, சீக்கிரம் தமிழ்நாட்டுக்கும் வருவாங்க’ என்று அமைச்சர் செந்தில்பாலாஜியை குறிப்பிட்டே பேசினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, “அண்ணாமலை என்ன அமலாக்கத்துறை இயக்குனரா?” என்று எதிர்க்கேள்வி கேட்டார்.

அமலாக்கத்துறைக்கும் பாஜகவின் அரசியலுக்கும் எவ்வளவு தொடர்பு உள்ளது என்பதற்கு அண்ணாமலையின் பேட்டிகளே சாட்சி.

இந்த நிலையில் தான் தற்போது அமலாக்கத்துறையின் இயக்குநராக இருக்கும் எஸ்.கே.மிஸ்ரா மூன்றாவது முறையாக இயக்குநராக பதவி நீட்டிப்பு பெற்றிருக்கிறார்.

பவித்ரா பாலசுப்பிரமணியன்

சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு!

டெல்லி பெண் கொலை: விசாரணையில் நண்பர்கள் புதிய தகவல்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *